நவ்யா ஹரிதாஸ்: நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டது..!

நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.

வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், வயநாடு தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதற்கு காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் மீதான எதிர்ப்பு மனநிலை, உள்ளூர் அரசியல்வாதியாக நான் செய்து வரும் பணிகள், பிரதமர் மோடி மீதான நல்லெண்ணம் ஆகிய3 சாதகமான அம்சங்கள் உள்ளன.

கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுபோல பிரியங்கா காந்தி பரிச்சயமானவர் என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு தேர்தல் அனுபவம் இல்லை. நேரு குடும்பமும் காங்கிரஸ் கட்சியும் வயநாடு தொகுதி மக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களை ஏமாற்றி உள்ளனர். வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது நேரு குடும்பத்தினர் தங்களுக்கு உதவவில்லை என்பதை புரிந்துகொண்டனர் என நவ்யா ஹரிதாஸ் தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டியா..!?

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனேயே வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள உயர் நீதிமன்றம்: இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள்..!

கேரளாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கேரள அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், வி.எம். சியாம்குமார் அடங்கிய அமர்வு கூறுகையில், “மனிதனின் அக்கறையின்மை மற்றும் பேராசைக்கு இயற்கையின் எதிர்வினைதான் வயநாடு நிலச்சரிவு. இயற்கை நீண்டகாலத்துக்கு முன்பே நமக்கு எச்சரிக்கை விடுத்தது. கேரள அரசு அதன் வளர்ச்சிக் கொள்கையை மறுபார்வை செய்ய வேண்டும்.

இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காடுகள், கானுயிர் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் தடுப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்து மாநில அரசு கொண்டுள்ள கொள்கைகளில் புதிய அணுகுமுறை தேவை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படுவதைத் தடுக்க விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி: ஆதிவாசிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். நாளில் ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்பதாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடையாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டுவது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

அதனால் உண்மையான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும். இந்த மண்ணின் அசல் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.

ஆனால் சிலர் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கிறது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்குகிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கிறது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டுடன் உங்களது உறவை சிதைக்கிறது.

ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்” என தெரிவித்தார்.