விஜய் அறிக்கை: விமர்சனங்களில் ஆக்கபூர்வ ஆலோசனைகளை கருத்தில் கொள்வோம்..!

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடித முறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, பொதுச் செயலாளருடன் பணிகளைப் பகிர்ந்துகொண்ட பொருளாளர் பி.வெங்கட்டராமன் கட்சியின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த ஆர்.பரணிபாலாஜி, (கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்), என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும் நன்றி. மாநாட்டில். நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை. விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள். இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை.

இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கட்சி தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி. கண்கள் கலங்க நிற்கிறேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது.

உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன.

தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை. ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு. தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை. மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும். அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன்.

இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.

என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான. கண்ணியமான, ஆரோக்கியமான உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர். நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம்.

வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

தொல் திருமாவளவன் விமர்சனம்: “பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை..!”

“பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.

அப்போது,“தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், பல்வேறு ஊகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில், அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்டுவதைவிட, தன்னுடைய எதிரிகள் யார் என்று அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார், நம்முடைய நட்பு சக்திகள், யாருடன் நம்மால் இணைந்து செயல்பட முடியும் எனவும் தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, தம்முடைய எதிரிகள் யாரென்று வரிசைபடுத்துகிறபோது, பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுவாத சக்திகளை குறிப்பிடும்போது, வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்ட கட்சி, அமைப்பு என அடையாளப்படுத்தவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என பிளவுவாதம் பேசுவதில் உடன்பாடில்லை. இத்தகையை பிளவுவாத சக்திகளை எதிர்ப்போம் என மேம்போக்காக சொல்கிறார். இதில் முரண்பாடு தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று சொல்கிறபோது, ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என மகிழ்ச்சி அடையும் நிலையில், பெரும்பான்மை – சிறுபான்மை என்று பேசுகிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது, பெரும்பான்மை வாதத்தை பேசுகிறவர்கள் யார் என்று அடையாளப்படுத்துகின்ற தேவை இருக்கிறது. அவர்கள்தான், நம்முடைய எதிரிகள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை, சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால், பெரும்பான்மை வாதத்துக்கு துணை போகிற நிலைபாடாக அமைந்து விடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பான்மை பேசுகிற ஓரே கட்சி பாஜக. இதற்கு சங்பரிவார் துணை நிற்கிறது. இதனால் சிறுபான்மை சமூகத்தினர், எந்த அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது உலகம் அறிந்த உண்மை. இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும், இந்த மண்ணில் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலில் நம்பிக்கை இல்லை, இதனை எதிர்க்கிறோம் என மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்த, சமண மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து என்ன நிலைபாட்டை கொண்டுள்ளார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. குழப்பமான நிலையாகவே இருக்கிறது. பாசிச எதிர்ப்பை பற்றி பேசும்போது, கிண்டலடித்துவிட்டு, பாசிச எதிர்ப்பு ஒன்றுமில்லை என கடந்து போகிறார்.

பாசிஸ்ட் என யாரை குறிப்பிடுகிறார் அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என்று கேட்கிறார். இதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று, பாசிச எதிர்ப்பு பெரிய விஷயமில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றொன்று, நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது அகில இந்தியளவில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளை சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளும் பாசிச அரசியலை எதிர்க்கிறோம். இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளையும் பாசிஸ்ட் என்று கேலி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. பாசிச எதிர்ப்பு தேவையில்லை என்பதால், பாஜக எதிர்ப்பும் தேவையற்றது என்ற பொருளும் வெளிப்படுகிறது. ஆகவே, பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது, அவரது உரை மூலம் உணரமுடிகிறது.

விஜய் உரையில், திமுக எதிர்ப்பு நெடி அதிகம் வீசுகிறது. திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார், குடும்ப அரசியல் என்று மு.கருணாநிதியின் குடும்பத்தை எதிர்க்கிறார். திமுக கூட்டணியையும், விமர்சனத்துக்குள் உட்படுத்துகிறார். திமுக மற்றும் திமுக அரசு எதிர்ப்பாகவே, அவரது உரையின் சாரம்சமாக இருக்கிறது. திமுக, திமுக அரசு, கருணாநிதியின் குடும்ப எதிர்ப்பு என்பது புதிய நிலைபாடு அல்ல. முதன்முதல் ஒலிக்கும் குரலும் அல்ல.

தமிழகத்தில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் அரசியல்தான். ஆனால், மக்களிடம் எடுபடவில்லை என்பதுதான், வரலாறு நமக்கும் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது. விஜய்யிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான அறிவிப்பு இல்லை, கொள்கை பிரகடனம் இல்லை, செயல்திட்டம் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்ற விஜய் அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியாகதான் பார்க்கின்றேன்.

உண்மையில், அதிகார பகிர்வு அளிப்பதாக இருந்தால், அவர் மறைமுக செயல்திட்டமாகதான் கையாண்டிருக்க வேண்டும். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஏற்று, எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விகுறியாக இருக்கிறது. எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், அமைச்சர் பதவியா, துணை முதலமைச்சர் பதவியா என தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்பட வேண்டிய அரசியல் உக்தி.

திரைமறைவில் பேசப்பட வேண்டியது. வெளிப்படையாக பேசுகிறார் என்றால், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் என்று பொருள். ஆகவே, அவர் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது. சரியான நேரத்தில் கையாளப்பட்ட விஷயம் அல்ல. யுத்த களத்தில் வீசுவதற்காக பதிலாக, வெறும் இடத்தில் கத்தியை வீசியுள்ளார். அவரது பார்வையில், இது அணுகுண்டு. இந்த அணுகுண்டு, அவருக்கு எதிராக வெடிக்க கூடியது என, நான் கருதுகிறேன்.

மத்தியில் கடந்த 1977-ல், இந்திரா காந்தியை வீழ்த்த, அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி, சிதறி கிடந்த கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா என்ற ஒரு அணி உருவானது. இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் கட்டாயமானது. காலத்தின் கட்டாயத்தால் கூட்டணி ஆட்சி உருவானதே தவிர, ஜனநாயக அடிப்படையில் தேசிய கட்சி, தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்ததன் மூலம் உருவானது இல்லை. இதுபோல், காலத்தின் கட்டாயத்தில்தான் கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்துக்கொண்டு, தங்களது கட்சியை மெல்ல மெல்ல நீர்த்துபோக செய்ய, விரும்பமாட்டார்கள். இதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கட்டாயத்தை உருவாக்க வேண்டும். போட்டியிடும் இடங்களை கூடுதலாக பகிர்ந்து கொள்கின்ற முயற்சி வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பினால், அதிமுகவுக்கு குரல் கொடுக்க வேண்டும். 25 சதவீதம் வாக்குகளை கொண்ட கட்சி. இன்னும், கூடுதலாக கட்சிகள் சேர்ந்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்ற நிர்பந்தத்தை தருகின்றபோது, இடங்களை பகிர்ந்து கொள்வதிலும், அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டாயம் உருவாகும்.

முதல் அடியே எடுத்து வைக்காத தமிழக வெற்றிக் கழகம், அதிகாரத்தில் பகிர்வு என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை, ஏற்புடையதாகவும் இல்லை. அதிமுக, பாஜகவை அவர் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களா, எதிரிகளா என்று தொண்டர்களுக்கு அடையாளப்படுத்தவில்லை. அவர், திமுகவை எதிரி என்று அடையாளப்படுத்தி உள்ளார். திமுக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்துள்ளார். திமுக எதிர்ப்பு நெடி, திமுக அரசுக்கு எதிரான அரசியல் என்பதுதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இது பழைய அரசியல்தான். ஏற்கெனவே பல அரசியல் கட்சிகள் பேசியதுதான். அவருக்கு எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முதன்மையான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கான சூழல் அகத்திலும், புறத்திலும் தணியவில்லை. மக்களும் அதற்கு தயாராகவில்லை. மக்களை தயார்படுத்தாமல், எந்த கோரிக்கையும் வெல்லாது. கூட்டணி ஆட்சிக்கான தேவை குறித்த, ஒரு விழிப்புணர்வை மக்களிடத்தில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தை நான் வழிமொழிகிறேன்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் தான்..!

எல்லா கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கு கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். தவெக சார்பில் மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் நடத்தியிருக்கிறார். இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அதிமுகவை விஜய் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை, கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்று பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, வருங்காலத்தில் அதிமுக விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முதல் மாநில மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை.

பாஜக, திமுகவை விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “விஜய் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். அந்தக் கட்சிக்கு என்ன கருத்து இருக்கிறதோ, அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. கொள்கை இல்லாத கட்சிகள்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஒத்த கொள்கையுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக முதல்வரும் கூறுகிறார், அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் ஒரே கொள்கைகளைக் கொண்ட கட்சியா? அப்படியென்றால், அவர்கள் ஒரே கட்சியாக இருக்கலாமே. தனித்தனி கட்சிகள் தேவையில்லையே.

அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமைக்கப்படும். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. மறுபடியும் கூறுகிறேன். கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். கொள்கை என்பது நிலையானது,” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

H. ராஜா திமுகவை பின்தொடர்ந்து பேசினால் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்..!?

ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விக்கு ஹெச். ராஜா பதிலளித்தார்.

அப்போது, “ஆளுநர் தேவையில்லை என்று கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்.

திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர். பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இது புரியாமல் கால்டுவெல் கற்பித்ததை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். திராவிட சித்தாந்தத்தை பேசும் விஜய்யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் தரமான பதில்: “எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்து.. எங்களின் கவனம் சிதறாது..!”

எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது, “மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்” என விஜய் பேசினார்.

விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழகத்துக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்.

திமுகவை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சி பணிக்கு ஒரு சிறு துரும்பைகூட எடுத்து போட்டு இருக்க முடியாது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

உதயநிதி ஸ்டாலின்: நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..!

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தவெக முதல் மாநில மாநாடு ஆரவாரம் தொடங்கியது..! தொண்டர்கள் உற்சாகம் ..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்ததை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி தமிழக அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நடிகர் விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. அத்தனை தொடர்ந்து, விஜய், மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும் மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா அமர்ந்திருக்க, மாநாடு துவக்கத்தில் 41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. மேலும் கோயம்புத்தூரைச் சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர். இதனை தொடர்ந்து மாலை 4 .03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

எச்.ராஜா விமர்சனம்: விஜய் தனது வர்ணத்தை காட்டுகிறார்..!

ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன்.

திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான்.

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பிரிவினைவாத தேச விரோத தீய சக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியிருக்கிறது. வருமான வரித்துறையினர் தங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவை மீண்டும் பாஜகவுக்கு இழுக்கும் நோக்கத்தில் இந்த சோதனையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதுபோன்று மத்திய அரசுக்கு நோக்கம் இருப்பதுபோல ஊடகத்தினர் கற்பிக்க வேண்டாம்.

தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளது. திமுக கூட்டணி உறுதியாக இல்லை என்பதை கூட்டணித் தலைவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகிறது. வருண பகவான் சென்னையை காப்பாற்றிவிட்டார். ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளது என்பது தவறு. காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 71 விபத்துகள் நடந்துள்ளது. கோயில் சொத்துக்களை அபகரிப்பது, ஆக்கிரமிப்பது திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது.

தவெக தலைவர் விஜய் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், தனது வர்ணத்தை காட்டிக்கொள்கிறார். அதை வரவேற்கிறேன். ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும்” என எச்.ராஜா தெரிவித்தார்.

பெரியார், அம்பேத்கருக்கு நடுவே விஜய்..! வைரலாகும் தவெக மாநாட்டு திடல் புகைப்படம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநாட்டு திடலில் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு நடுவே விஜய்யின் கட்-அவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்..!

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும் என தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கடந்த 25-ஆம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில், மாநாடு தொடர்பாக விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில், இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்த கடிதம். அதுவும் முதல் கடிதம்.

தமிழக மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும், முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான், என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.

இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம், ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.

இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம். மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம், அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.

இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோஷத் தருணங்களை இப்போதே மன அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்.” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.