அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான். நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன் என விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். சென்னை வளசரவாக்கம் காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது” என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்து தன்னிடம் பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை, வளசரவாக்கம் காவல்துறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், இன்று சீமான் நேரில் ஆஜராகாத நிலையில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இந்நிலையில் நாளை சீமான் ஆஜராக அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
காவல்துறையினர் சம்மன் ஒட்டிய சில மணி நேரத்தில், அதனை சீமான் ஆதரவாளர் கிழித்து எறிந்தார். இதுதொடர்பாக காவல்துறை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதையடுத்து காவல்துறையினரை தாக்க முயன்றதாக சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்டார். இதனால் சீமான் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என்னை ஏமாற்றாதீங்க.. எனது பாவத்தை வாங்கி கொள்ளாதீர்கள், சீமான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில், “முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023-ல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பேசியபடி மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.
உங்க பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி… பொண்டாட்டி என்று அழைச்சீங்க. அப்பறம் என்கிட்ட வீடியோவும் கேட்டீங்க.. இப்போ என்ன நான் திமுக தான் என்னை அழைச்சிட்டு வந்தீங்கனு சொல்றீங்க. திமுக ஒன்னும் போன வரும் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கல. இப்போ என்னனா, அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான்.
நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு, அப்போ பிரஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நான் அப்படி, இப்படினு பேசிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பண்ணப்போகுது பாருங்க. சீமான் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கணும்” என விஜயலட்சுமி பேசியுள்ளார்.