மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.
மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களுக்காக கறுப்பு பணம் நிறைந்த சூட்கேஸ்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் யவத்மால் மாவட்டம் வானியில் தனது கட்சி வேட்பாளர் சஞ்சய் டெர்கருக்காக தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றபோது, உத்தவ் தாக்கரே கொண்டு சென்ற பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘எனது ஹெலிகாப்டர் வானியை அடைந்த பிறகு, எனது பைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காக நான் வருத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் ஆளும்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் இதேபோன்று ஆய்வு செய்யுமா? என்று தான் கேட்கிறேன்’ என்றார்.