துணை முதலமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின்..! நிச்சயமாக மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது…!

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை – தியாகராய நகரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு மற்றும்  மா. சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்தநிகழ்ச்சியில் சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.