ராகுல் காந்தி: நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம்…! ஆங்கிலேயரை போல பாஜக ‘வனவாசி’ என்கின்றனர் ..!

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு சிம்டேகா மற்றும் லெஹெர்டேகா நகரங்களில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் – இண்டியா கூட்டணி. மறுபக்கம் பாஜக மற்றும் RSS. இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளை பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை இயக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி விரும்புகிறது.

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். உங்கள் தண்ணீர், காடுகள் மற்றும் நிலங்களை பாதுகாக்க பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுடன் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காக போராடுகிறோம். உங்கள் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது. அதனால்தான் உங்களை வனவாசி என்று அழைக்கிறது. ஆதிவாசி என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று பொருள். அதேசமயம் வனவாசியாக இருப்பது உங்களுக்கு நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம்.

நீங்கள் பழங்குடியினர். நாட்டின் மீது உங்களுக்கே முதல் உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் ‘வனவாசி’ என்ற வார்த்தையை நீங்கள் காண முடியாது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் வனவாசி என்பதற்குப் பதிலாக ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால், நீர், காடு, நிலம் ஆகியவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பழங்குடியினர் என்று அவர்கள் கூற விரும்பினர். பிர்சா முண்டாவும், அதற்காகவே போராடினார். ஆனால், பாஜகவோ பழங்குடியினரிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க முயற்சிக்கிறது.

நாட்டில் 50% ஓபிசி, 15% தலித், 8% பழங்குடியினர் மற்றும் 15% சிறுபான்மை சமூக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகை மொத்தத்தில் 90% ஆகும். ஆனால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. பாஜகவினர் எங்கு சென்றாலும் ஒரு சகோதரரை இன்னொரு சகோதரருடனும், ஒரு மதத்தை இன்னொரு மதத்துடனும், ஒரு மொழியை இன்னொரு மொழியுடனும் சண்டையிட வைக்கிறார்கள்.

மணிப்பூர் இவ்வளவு நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் இன்றுவரை அங்கு செல்லவில்லை. ஏனெனில் அவரது சித்தாந்தத்தால்தான் அங்கு வன்முறை பரவியது. அதனால்தான் நாங்கள் ‘இந்திய விழிப்புணர்வு யாத்திரை’ நடத்தினோம். அதில் ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம்’ என்ற முழக்கம் இருந்தது. நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பங்கேற்பு இல்லை. நாட்டின் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள். உங்களிடம் எந்த குறையும் இல்லை. நீங்கள் எந்த வகையான வேலையையும் செய்யலாம். ஆனால் உங்களுக்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, ​​நரேந்திர மோடி அமைதியாகி விட்டார். உரிய பங்கேற்பு இல்லாத 90% மக்களுக்கு பங்கேற்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா, அம்பானி – அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்தார்.

ஜார்க்கண்டில் எத்தனை பேருக்கு நரேந்திர மோடி கடன்களை தள்ளுபடி செய்தார்? நமது அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளின் பழக்கத்தை காங்கிரஸ் கெடுப்பதாக பாஜக கூறியது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, ​​அவர்களின் பழக்கவழக்கங்கள் கெட்டுப் போகவில்லையா? பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு பணம் சென்றால், அது விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கும் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஊட்டியில் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் அம்ரித் முன்னிலை வகிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது கயல்விழி செல்வராஜ் பேசிய, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர்கள் 37 வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். பழங்குடியினரின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிநபர் உரிமைகள் பழங்குடியினர் நலத்துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளிகள், 48 விடுதிகள் செயல்படுகிறது.

இதில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏகலைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாதி சான்றிதழ் பிரச்சினைகளை களையவும், உண்மை தன்மையை சரிபார்க்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,190 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாட்கோ தலைவர் மதிவாணன், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவரும் பகல்கோடு மந்துக்குச் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜீக்கு, பாரம்பர்ய முறைப்படி வரவேற்பு அளித்தனர் அந்த மக்கள். அவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்தவர், அந்த இனப் பெண்களின் பூத்துக்குளி எனும் பாரம்பர்ய உடையை அணிந்து நடனம் ஆடினார். மேலும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய உணவையும் சாப்பிட்டார்.