தொல். திருமாவளவன் பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் ..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அப்போது, அகில இந்திய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வியூகம் உள்ளது. அதனால் மட்டுமே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து அகில இந்திய தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்துள்ளார்.

பாஜகவோடு திமுக கூட்டணி வைத்திருந்தால் திமுகவின் முக்கிய புள்ளிகளின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்திருக்காது. இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து ஏனோ தானோ என்று பதவிக்காக ஒரு தேர்தலை முதல்வர் சந்திக்கவில்லை. இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும். அகில இந்திய அளவில் ‘இண்டியா’கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.