மாற்றுத்திறனாளியை ஆற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்..! பத்திரமாக மீட்ட தமிழ்நாடு காவல்துறை..!

கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி சென்று ஆற்று சகதியில் சிக்கிய கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை நள்ளிரவில் தமிழக காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இன்று பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் செல்லவேண்டிய இடத்தை தேர்வு செய்தல் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணித்து நம்மை அங்கு சென்று விட்டுவிடும் அளவிற்கு கடந்த 2008-ஆம் கூகுள் மேப் வசதியை உலகளவில் அனைத்து இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நாம் இதுவரை செல்லாத பகுதிகளுக்குக் கூட யாரும் உதவி கேட்காமலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். மேலும் அந்த வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கூகுள் மேப் வசதியுடன் காரை இயக்கிய ஓட்டுனர் செல்ல முயன்றபோது அங்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது நாடறிந்ததே.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து இயக்கப்பட்ட நாடகக் குழுவினர் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியும் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூகுள் மேப் பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் 5 மணி நேரமாக ஆற்றுக்குள் சகதியில் சிக்கிய நிலையில் அவரை தமிழ்நாடு போலீசார் மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பரசுராமா என்ற ஐயப்ப பக்தர் மாற்றுத்திறனாளிகள் ஓட்டிச் செல்லக்கூடிய தனது மூன்று சக்கர வாகனத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, தனி ஒருவனாக மீண்டும் கர்நாடகா கிளம்பி உள்ளார். கூகுள் மேப் பார்த்தபடி வத்தலகுண்டு வழியாக சென்றபோது, இரவில் வழி தவறி வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே ஆற்று சகதியில் சிக்கிக் கொண்டார். பரசுராமா இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை வழி தெரியாமல் சகதியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.

செய்வதறியாது திகைத்த மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா, கர்நாடக காவல்துறையினருக்கு இந்த தகவல் தெரிவித்துள்ளார். இத்தனை தொடர்ந்து கர்நாடகா காவல்துறை, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி இரவு ரோந்து காவலர்கள் நள்ளிரவில், ஆற்றுப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி அலைந்து அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமாவை பத்திரமாக மீட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்று, அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர். மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா மீட்கப்பட்ட தகவல் தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் மூலமாக கர்நாடக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆற்று சகதியில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்ட தமிழ்நாடு காவலர்களை கர்நாடக காவல்துறை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000 நிதியை சக காவலர்கள் வழங்கல்

தமிழக காவல்துறையில் 2009 -ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த P. முத்து முனீஸ்வரி என்பவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த (10/08/2021) ஆம் தேதி சிவகாசி, ஜக்கம்மாள் கோவில் அருகில், எதிரே வந்த லாரியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்து விட்டார்.

முத்து முனீஸ்வரி கணவர் கூலிவேலை செய்துவரும் பார்த்தசாரதி மற்றும் இரு மகன்கள் சக்திவேல் பாண்டியன், சிவசக்தி பாண்டியன் உள்ளனர். பெண் காவலர் முத்து முனீஸ்வரி மறைவிற்குப் பிறகு அவர் குடும்ப நலனுக்காக அவருடன் பணியில் சேர்ந்த 2009 – ஆவது பேட்ஜ் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூபாய் 26,42,000 சேர்த்து கொடுத்தனர்.

அந்த பணத்தை இரு மகன்களுக்கும் முறையே, எல்ஐசியில் ரூபாய் 10,00,000 மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிசான் விகாஸ் பத்திரம் மூலம் ரூபாய் 3,00,000, மொத்தம் 26,00,000 முதலீடு செய்து, பாண்டு பத்திரமாக தயார் செய்து, மீதமுள்ள தொகையான ரூபாய் 42,000 அவர்களது கைச் செலவுக்காகவும், முத்து முனீஸ்வரி குடும்பத்தின் நலனுக்காகவும் சக காவலர்களால் வழங்கப்பட்டது. சக காவலர்களின் ஒற்றுமையையும், பெருந்தன்மையையும், சேவையையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.