ரஜனி பாட்டீல் மாநிலங்களவை உறுப்பினராக  போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ராஜீவ் சதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எனவே இந்த காலியிடத்துக்கு வருகிற 4-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மகா விகாஷ் அகாடி கூட்டணிகள் சார்பில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ரஜனி பாட்டீலும், பாஜக சார்பில் சஞ்சய் உபாத்யாய் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருப்பதால், இவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உருவானது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் மந்திரி பாலசாகேப் தோரட் ஆகியோர் சமீபத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக ஏதுவாக பாஜக வேட்பாளரை போட்டியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் என்பதால், பாஜக வேட்பாளர் சஞ்சய் உபாத்யாய் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். பாஜக வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், காங்கிரஸ் வேட்பாளரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை. எனவே அந்த கட்சி வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.