ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பை கலந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன்கொழுப்பு சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையில் தெரிவித்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல்லில் நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசும், ஆந்திரா அரசிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. இதுதவிர நேற்று பரிகாரமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தப்பட்டது. லட்டு சர்ச்சை தொடங்கியதில் இருந்தே ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக பவன் கல்யாண் எக்ஸ் பக்கத்தில், ‛‛திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆகியுள்ளேன். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோவில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என பவன் கல்யாண் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ்க்கு மீண்டும் பவன் கல்யாண் பதிலடி கொடுத்தார். லட்டு விவகாரத்தில் 11 நாள் விரதம் கடைப்பிடித்து வரும் பவன் கல்யாண் இன்று விஜயவாடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது, லட்டு விவகாரம் பற்றி நான் ஏன் பேசக்கூடாது? என் வீடு மீது தாக்குதல் நடத்தப்படும் போது நான் பேச வேண்டும். பிரகாஷ் ராஜ் நீங்கள் பாடம் கற்க வேண்டும். நான் உங்களை மதிக்கிறேன்.
இது பிரகாஷ் ராஜ்க்கு மட்டுமில்லை மதசார்பின்மை என்ற பெயரில் குறிப்பிட்ட வழியில் செல்லும் ஒவ்வொருக்கும் தான். நான் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களின் உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம். இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாத. இது ஆழமான வலியை தந்துள்ளது. சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசுங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.