ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு..!

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு..!

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்கிறார். இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை MLA.க்கள் 4 பேர், ஆம் ஆத்மி கட்சி MLA ஒருவர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது. வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இன்றைய பதவியேற்பு விழாவில் உமர் அப்துல்லாவுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., பங்கேற்க உள்ளார்.

ஹரியானா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தற்போது ஜார்க்கண்டில் நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாவும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் கூடுதல் கவனம் காங்கிரஸ் செலுத்தவுள்ளது.

ஒமர் அப்துல்லா: முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாநில அந்தஸ்து வழங்கும் அதிரடியான தீர்மானம்

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தபடி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் 370 – வது பிரிவு ரத்து, மாநில அந்தஸ்து உள்ளிட்டவை அதிகம் பேசப்பட்டன. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக நியாயப்படுத்தியது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணியோ மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

ஆனால் மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. பாஜகவோ முதலில் தேர்தல் முடிந்து ஆட்சி அமையட்டும்; மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றது. இந்தியா கூட்டணி கட்சிகளோ மாநில அந்தஸ்து வழங்க மறுத்தால் போராடுவோம் என்றது. தற்போது தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த கூட்டணியின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பொறுப்பேற்க உள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அடுத்தடுது கூட்டப்பட்டு சட்டசபை குழு தலைவர் தேர்வு செய்யப்படுவர். பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர். இந்நிலையில் ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, அரசாங்கத்தை அமைத்த உடன் கூடுகிற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானத்துடனேயே பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திப்பேன் என்றார்.

மேலும் ஒமர் அப்துல்லா பேசுகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தையும் ஜம்மு காஷ்மீரையும் ஒப்பீடு செய்யக் கூடாது. டெல்லி எப்போதும் ஒரு மாநிலமாக இருந்ததே இல்லை. டெல்லிக்கு யாரும் மாநில அந்தஸ்து தருவோம் என வாக்குறுதியும் தரவும் இல்லை. ஆனால் 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களித்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் முடிவடைந்த உடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதுதான் மத்திய அரசின் வாக்குறுதி. அதனை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மத்திய பாஜக அரசுடன் நல்லுறவுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காத முதலமைச்சராகவே இருக்க வேண்டும். அதற்காக பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பது அர்த்தம் இல்லை. எப்போதும் நாங்கள் பாஜகவை எதிர்ப்போம். ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மைக்காக மத்திய பாஜக அரசுடன் நல்லுறவை விரும்புகிறோம்.

மத்திய அரசுடன் மோதுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களுக்கு தேவை வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மாநில அந்தஸ்து தகுதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்தான். எங்கள் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சூழ்நிலை உருவானால் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஷேக் அப்துல் ரஷீத் பாஜகவின் பி டீம் என உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு..!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் செப்டம்பர் 18 -ஆம் தேதி 24 தொகுதிகள் 25 -ஆம் தேதி 26 தொகுதிகள் மற்றும் அக்டோபர் 1 -ஆம் தேதி மீதமுள்ள 40 தொகுதிகள் என மொத்தமுள்ள 90 சட்டப் பேரவை உறுப்பினர்கலுக்கு 3 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே ரஷீத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் பி டீம் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தியும் குற்றம் சாட்டினர்.

Omar Abdullah: கட்சி பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் திரும்பப்பெற்ற பின், மீண்டும் பட்டியலை வெளியிட்டதை பார்த்ததே இல்லை..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள தொகுதிகளுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன. அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இது தொடர்பாக உமர் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில், பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது.

ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

Omar Abdullah: இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு..! அத்வானி தோல்வி அடையவில்லையா..!?

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், பாரமுல்லா தொகுதி தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளருமான உமர் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது என்பது வெளியப்படையாகவும் தெளிவாகவும் தெரிகிறது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணைகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராகவே உள்ளது என்பதில் இருந்து இது தெரியும்.

ஒரு கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது பாரம்பரியத்தை பார்க்கத் தொடங்குவார். தற்போது ஜவஹர்லால் நேருவை விட நீண்ட காலம் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நமது நோக்கங்கள் நிறைவேறும் சமயத்தில் நமக்கு இளமை திரும்பிவிடப் போவதில்லை. நாம் எல்லோரும் முதுமையடைவோம். நாம் அனைவரும் மேடையை விட்டு இறங்கும் காலம் வருகிறது. அவரது மனதின் ஏதோ ஓர் இடத்தில், என்ன மாதிரியான பாரம்பரியத்தை அவர் விட்டுச் செல்ல இருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசிக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், ஒருவேளை மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் மத்திய விசாரணை அமைப்புகளால் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, “பாஜகவில் இணைபவர்கள் எல்லாரும் வழக்கில் இருந்து விடுபட்டுவிடுவதாக ஒரு தேசிய நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. எனவே இதுதான் யதார்த்தம், இது ஊகிக்கக் கூடிய ஒன்றில்லை. என்றாலும் பரவாயில்லை. மற்றவர்களை அழிக்க பாஜக வசமுள்ள கருவிகளில் அதுவும் ஒன்று.

இண்டியா கூட்டணியின் பிரதமர் யார் என்று கேட்கிறீர்கள். ஏன் அதில் இவ்வளவு கவலை. மக்கள் முதலில் வாக்களிக்கட்டும், கூட்டணி வெற்றி பெறட்டும், பின்னர் நமக்கு ஒரு பிரதமர் கிடைப்பார். இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு, அத்வானி தோல்வியைச் சந்தித்தபோது இந்தக் கவலை எழவில்லை. ஆனாலும் நமக்கு ஒரு பிரதமர் கிடைக்கவில்லையா? அந்தப் பிரதமர் மன்மோகன் சிங) வெற்றிகரமாக 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தவில்லையா? அந்த நேரத்தில் மன்மோகன் சிங் பிரதமராவார் என்று யாராவது யோசித்திருப்போமா? என உமர் அப்துல்லா தெரிவித்தார்.