நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்கள் கைது..!

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்னையை நோக்கி புறப்பட்ட NLC ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்பத்தில் தங்க வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் NLC நிறுவனத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் பலர் NLC நிறுவனத்துக்காக வீடு, நிலங்களை கொடுத்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் NLC நிறுவனம் இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. வாரிசு அடிப்படையிலும் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், கரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கும் தற்பொழுது வரை பணி வழங்கவில்லை. 20 சதவீத போனஸ் வழங்கப்படவில்லை.

மேலும், இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை தொடர் போராட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டும் கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் ஏற்கவில்லை. இந்நிலையில், 12-ஆம் தேதி அன்று பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பயணம் செய்து தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி இன்று காலை நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் வேன் மற்றும் பேருந்துகளில் சென்னைக்கு புறப்படவிருந்த 100-க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து NLC ஆர்ச் கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட NLC ஒப்பந்த தொழிலாளர்கள் திருமண மண்டப வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கைது செய்ததை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல பண்ருட்டியில் இருந்து ரயிலில் புறப்படவிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 20 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

NLC தொழிலாளர்களுக்கு NOC வழங்கியதில் முறைகேடு ஏட்டு உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

NLC தொழிலாளர்களுக்கு NOC வழங்கியதில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு பயந்து ஏட்டு எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏட்டு உள்பட 3 காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், ஊமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சுதாகர். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். NLC யில் பணிபுரியும் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளரும் ஆண்டுதோறும் அவர்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று எந்த வழக்கும் இல்லை என்று NOC பெற்று பணி இடத்தில் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் NLC ஒப்பந்த தொழிலாளர்கள் சிலருக்கு சான்றிதழ் வழங்கியதில் ஊமங்கலம் தலைமை காவலர் சுதாகர், எழுத்தர் ஜோசப், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன் ஆகியோர் ஆவணங்களை திருத்தி முறைகேடு செய்து சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏட்டு சுதாகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது.

விசாரணைக்காக ஏட்டு சுதாகர் கடந்த 11-ஆம் தேதி நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லாவை சந்திக்க துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் காவல் துணை கண்காணிப்பாளரை சந்திக்கும் போது, தான் எலிபேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறி உள்ளார்.

இதைதொடர்ந்து அங்குள்ள காவல்துறையினர் அவரை நெய்வேலி பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே ஆவணங்கள் முறைகேடு புகாரில் உயர் அதிகாரியின் விசாரணைக்கு பயந்து ஏட்டு சுதாகர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சுதாகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன், காவல்நிலைய எழுத்தர் ஜோசப் ஆகிய 3 பேரையும் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா பரிந்துரையின் பேரில், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

NLC நிறுவன இரண்டாவது சுரங்கம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு NLC நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்கு வீடு நிலம் கொடுத்து வாரிசு அடிப்படையில் பணிக்கு சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

எனவே தங்களுக்கு நிரந்தர ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்கி சரியான ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சுரங்க வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் non AMC ஒப்பந்த தொழிலாளராக மாற்றி தருவதாகவும் சரியான ஊதியம் வழங்குவதாகவும் NLC நிறுவனம் பேச்சுவார்த்தையில் உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் 10-ம் தேதி முடிவடைந்து ஒரு வார காலமாகியும் இன்றுவரை செயல்படுத்தாததால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் இன்று காலை முதல் மீண்டும் NLC நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 5,000 க்கும் அன்னதானம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி NLC நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின் கூட்டமைப்பு சார்பில்  நெய்வேலி NLC தலைமை அலுவலகம் எதிரில் உள்ள அய்யனார் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நெய்வேலி பாஜக பிரமுகரும் வீடு, நிலம் கொடுத்து  பாதிக்கப்பட்ட கூட்டமைப்பின் அமைப்பாளர்  வீர வன்னிய ராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக NLC செயல் இயக்குனர் அன்புசெழியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 5,0000 க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாஜக ஓபிசி பிரிவு  மாநில தலைவர் சாய் சுரேஷ், பாஜக மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன்,  தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராமலிங்கம், தேச பக்த இயக்கம் நிறுவன தலைவர் வீராசாமி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரவண சுந்தரம், தாமரை மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், ஓபிசி அணி தலைவர் தவபாலன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், என்எல்சி பிம்எஸ் சங்க அமைப்பு செயலாளர் நாகராஜ், பொருளாளர் விமல்ராஜ், கான்ட்ராக்ட் சங்க பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், தலைவர் அருள்முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் தயாநிதி, நகர தலைவர் மணிகண்டன், வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின் பிரதிநிதிகள் ராம் பிரசாத், காமராஜ், பாஜக வழக்கறிஞர் சிவகுருநாதன், ஆதிபராசக்தி மகளிர் அணி பொறுப்பாளர் கல்யாணி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், NLC அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள்,வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின்  பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

என்எல்சி பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து..! என்எல்சி இந்தியா பிரசன்னகுமார் தொடங்கி வைத்தார் ..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார். இந்நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரப் பகுதியில் என்எல்சி இந்திய நிறுவனம் சார்பாக இயங்கி வரும் பள்ளிகளில் நகரப் பகுதியில் இருந்து மட்டுமல்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பல மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே பள்ளிக்கு வருகிறார்கள் குறிப்பாக தினசரி பேருந்துக்கான கட்டணம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு அழைத்து வரவும் மீண்டும் அழைத்துச் செல்லவும் காத்திருப்பது என பல்வேறு சிரமங்களை இடையே கல்வி கற்று வந்த மாணவர்களுக்கு பேருந்து இலவசமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை தாயுள்ளத்தோடு உணர்ந்த என்எல்சி இந்தியா நிறுவன அதிபர் பிரசன்னகுமார் மோட்டூப்பள்ளி அவர்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தின் சார்பில் பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் தமது உரையின்போது நமது நகரம் நமது மக்கள் நமது சேவைகள் என்ற திட்டத்தை அறிவித்தார்.

அந்தத் திட்டத்தில் நெய்வேலி ஆர் சி கேட் நுழைவாயிலில் இருந்து மந்தாரக்குப்பம் வரை பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1000 மாணவ மாணவிகள் பயனடைவார்கள் இந்த அறிவிப்பு பெற்றோகள் மற்றும் பொதுமக்களிடையே பேரும் வரவேற்புப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்எல்சி நடத்தும் எழுத்து தேர்வை ஒத்திவைக்க அருண்மொழிதேவன் வலியுறுத்தல்..!

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த , ஐடிஐ படிப்பு படித்தவர்களை, தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு 262 பேர் தேர்வு செய்ய, என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அன்று எழுத்து தேர்வுக்கான கடிதம் என்எல்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் என்எல்சி நிறுவனம் மூலம் பயிற்சி முடித்து, NCVT சான்றிதழ் வைத்திருக்கும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எழுத்து தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை. இந்த செயல் என்எல்சி நிறுவனம், தானே பயிற்சி அளித்து, ஐடிஐ சான்றிதழ் கொடுத்த நிலம் கொடுத்தவர்களை, எழுத்து தேர்வுக்கு அனுமதிக்காதது என்எல்சி நிறுவனம் தன்னைத்தானே நம்பாதது போல் உள்ளது.

மேலும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தில், என்எல்சியில் பயிற்சி முடித்து, 13 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில், எழுத்து தேர்வு எழுத அனுமதிக்காதது சட்டப்படியும், நியாயப்படியும் தவறான செயல் என்பதால் மிகவும் கண்டனத்திற்குரியது எனவும், இடம் கொடுத்த விவசாயிகள் மீது என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு அக்கறை இல்லை என்பதை இச்செயல் மீண்டும் நிரூபித்துள்ளது.

எனவே என்எல்சி இந்தியா நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி நடத்த உள்ள எழுத்து தேர்வை ஒத்திவைத்து, என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கும் எழுத்து தேர்வுக்கான அழைப்பை அனுப்பி, மற்றொரு தேதியில், எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெய்வேலி என்எல்சி நில எடுப்பு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை..!

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக, கம்மாபுரம், கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், வளையமாதேவி ஆகிய பகுதிகளில் என்எல்சி நிறுவனம் நிலங்களை கடந்த 2000 முதல் 2013 -ம் ஆண்டு வரை கையகப்படுத்தியது. இந்நிலையில் 2000 ஆண்டு கையகப்படுத்திய விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க கோரியும் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க கோரியும், பலமுறை போராட்டம் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காபடவில்லை.

ஆகையால், ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர், நெய்வேலி மந்தாரக் குப்பத்தில் உள்ள என்எல்சி நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு 12 கிராம் தங்க நாணயம் வழங்கல்

முன்னாள் தமிழக முதலமைச்சர் அதிமுக கழக தொண்டர்கள் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த தினம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன பொது மருத்துவமனையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஊழியர் சங்க மருத்துவமனை பகுதி செயலாளர் சோமையா அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிறந்த பந்தகானி மிதுன் குமார் -காக்கனுரி பார்வதி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு 1/2கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு அதிமுக தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் தலைவர் வெற்றிவேல், செயலாளர் கோவிந்தராஜ், தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நெய்வேலியில் என்எல்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை..!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் கலந்துகொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை துவக்க விழா நெய்வேலி வட்டம் 24 பகுதியில் உள்ள என்எல்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

பின்னர் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்து விளங்கதாகவும், சுகாதாரத்துறை மூலம் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்துவதாகவும் கூறினார் முகாமில் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைக்ள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி . என்எல்சி தலைவர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என்.எல்.சி முற்றுகை: அதிகாரியின் அலட்சியத்தால் ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையம் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றிய முதனை கிராமத்தை சேர்ந்த ஜெ.வெங்கடேசன். இவர் வழக்கம் போல் காலையில் பணிக்கு சென்று மதியம் சுமார் 12 மணியளவில் அனல் மின் நிலையத்தில் பணியில் இருந்தபோது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளரிடம் தெரிவித்த நிலையில் கண்காணிப்பாளர் அவரை உடனடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேசன் தனது கிராமமான முதனைக்கு செல்லும் வழியில் மேலக்குப்பம் அடுத்த காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வெங்கடேசன் உறவினர்களுக்கு தெரிவிக்க அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டததாக கூறியுள்ளனர்.

உடல்நலக்குறைவு எற்பட்டவுடன் பணியில் இருந்த கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக விட்டுக் அனுப்பி வைத்தால் வெங்கடேசன் உயிரிழந்தாக கூறி விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி ஆர் நீதி வள்ளல் தலைமையில் என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது என்.எல்.சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இறந்த வெங்கடேசன் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடி வேலை வழங்க வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.