நீட் மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சி ஆசிரியர்கள் மீண்டும் கைது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள நீட் பயிற்சி மையத்திற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மாணவி பயிற்சிக்காக சென்றார். கடந்த ஜனவரி மாதம் உயிரியல் பயிற்சி அளிக்கும் 32 வயதான ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். மாணவி அங்கு சென்ற போது யாரும் இல்லை. அந்த தனிமையை பயன்படுத்திய ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவில் படம் பிடித்தார்.

பின்னர் அதை வைத்து மிரட்டி 6 மாதமாக ஆசைக்கு இணங்க வைத்தார். இதே போல் நடந்த மற்றொரு விருந்தில் 39 வயதான வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் என்பவரும் மாணவியை பலாத்காரம் செய்தார். இந்நிலையில் இதே போல் இன்னொரு மாணவியை ஆசிரியர் சாஹில் சித்திக் பலாத்காரம் செய்த காட்சிகள் வைரலாகி அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மாணவியை உடனே கான்பூருக்கு வரும்படி மிரட்டினார். இதில் பயந்து போன மாணவி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து காவல்துறையினர் மீண்டும் பயிற்சி ஆசிரியர்கள் சாஹில் சித்திக், விகாஸ் போர்வால் ஆகியோரை கைது செய்தனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முதல் நீட் தேர்வு விலக்குவரை: 26 தீர்மானங்கள் தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை பனையூரிலுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், தவெக தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும்.

2. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்று, தமிழக அரசியல் களத்தில், புதிய வரலாறு படைத்திருப்பது காலாகாலத்திற்கும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி.

3. ஆறுகள், மலைகள், கடல்கள், மண்ணின் இயற்கை வளங்கள் மட்டுமல்ல. ஒரு மண்ணின் குணநலன்களும் ஆகும். அதுபோல ஒரு கட்சியின் கொள்கைகள்தான் அக்கட்சியின் வளத்தையும் குணநலன்களையும் பேசுபவையாக இருக்கும். மேலும், அரசியல் என்பது மாநில மற்றும் மக்கள் தேவைகளையும் உரிமைகளையும் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் கொள்கைகளும் இருக்க வேண்டும்.

கொள்கைகள் என்பவை, மக்கள் சார்ந்தும் மண்ணைச் சார்ந்துமே இருக்க வேண்டும். இதை நுட்பமாக உணர்ந்ததால் மட்டுமே இந்தத் தமிழ்நாட்டு மண்ணில் இருக்கும் அனைத்து மக்களுக்கான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மட்டுமல்லாது மக்கள் மற்றும் மாநில உரிமைகளைச் சார்ந்த நலன்களையும் பேணிப் பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் வந்தது. அதனால்தான் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் இருக்க வேண்டாம் என்ற முடிவையும் திண்ணமாக எடுத்தது.

மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு “மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்” என்று பெயர் சூட்டியுள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

4. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது.

ஜனநாயக நாட்டில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆளும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று. உண்மையான, நேர்மையான கருத்துகளைத் தெரிவிப்பதும் மக்களுக்காகப் போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல; உரிமையும் ஆகும்.

அத்தகைய உரிமையை, அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் தடுக்க முயல்வதும், ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதும், சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.

5. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாரபட்சமின்றி, கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வாயிலாக உடனடியாகப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தீர்க்கமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

6. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

7. மாநிலத்திற்கான தன்னாட்சி (State Autonomy) உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி, மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி. எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.

8. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கு நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

9. கல்வி, தொழில், மருத்துவம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று. கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

10. இலங்கை தொடர்பான விசயங்களில், தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள் தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக்கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி. மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை.

11. முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு. தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்போர் எங்கள் தாய்மொழித் தமிழ் மட்டுமல்லாமல், தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக இங்கு நியமிக்கப்படுகிற எவருக்கும் எந்தவித உரிமையும் இல்லை.

மொழி உரிமையே எங்கள் தமிழ்த் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக. மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு, எமது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உரக்கச் சொல்லிக்கொள்கிறது.

12. அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு. சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்து மக்களின் பொருளாதார நிலையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு இச்செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

13. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. மேலும், தொடரும் கள்ளச் சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், மக்கள் நலனைக் காட்டிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளும் திமுக அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

14. ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான திமுக. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

15. மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விடக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

16. தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்கு சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகள் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு. இதைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

17. தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், பிரமாண்டமான அருங்காட்சியகம் சென்னையில் கட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

18. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச் சமரசமும் இன்றிப் போற்றுவதைக் கடமையாகக் கருதுகிறோம். தமிழக மக்களின் வரிப்பணத்தில், தமிழக அரசால் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்படும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள். நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு தமிழ் மண்ணிலிருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப்போர்த் தியாகிகளின் பெயர்களைச் சூட்டி, அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

19. தமிழ் மொழி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் தலைவர்கள் மற்றும் தமிழ் முன்னோடிகளின் பெயரில் தமிழக அரசு சார்பில் பல்லாண்டுகளாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆகவே. இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது.

20. உலக அளவில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கை 110 கோடியாகவும், நமது நாட்டில் இந்த எண்ணிக்கை 14.9 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இவர்கள் எண்ணிக்கை, வரும் பத்தாண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்களை அக்கறையுடன் பாதுகாத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

21. இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகர, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

22. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

23. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ & மாணவிகள் குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின் வகுப்பினைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.
ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

24. ஆளும் அரசுகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது, மக்கள் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டும் எங்களின் அரசியல் அணுகுமுறை அல்ல. ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக் கருதுகிறோம்.

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்குகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருவதற்காகத் தமிழக அரசை இச்செயற்குழு வரவேற்கிறது.

25. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2.376 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது.

26. நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தீராப் பற்றுடன் கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள் சிலர் அண்மையில் மறைந்த நிகழ்வுகள், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. இவர்களின் இழப்புகள். ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் போன்ற த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

NEET: மருத்துவ கலந்தாய்விற்கு 1.50 லட்சம் போலி தரவரிசை சான்றிதழ் கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர்..!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் நீட் தேர்வு முடிவுப்படி தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடந்து வருகிறது. அதன்படி, நடைபெற்ற கலந்தாய்வில், மருத்துவம் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. அப்போது மாணவர் ஒருவர் தன்னுடைய பெயர் வரிசைப்படி ஏன் அழைக்கவில்லை என்று அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

பிறகு தகராறு செய்த மாணவனை அழைத்து அவர் வைத்திருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் தகராறு செய்த அந்த மாணவனின் பெயர் போலியாக தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆவணம் எனத் தெரிந்தது.

உடனே அதிகாரிகள் மாணவன் மற்றும் அவனுடன் வந்த அவரது தந்தையை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி காவல்துறை விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் எடுத்துள்ளார்.

பிறகு நீட் தேர்வில் 429 மதிப்பெண் பெற்றிருந்தார். தனக்கு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக மாணவனின் தந்தை, திருப்பத்தூர் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் வெங்கடாஜலபதி என்பவரிடம் ரூ.1.50 லட்சம் பணத்தை கொடுத்து மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்திருந்ததும், பல நாட்கள் தனது மகனின் பெயர் பட்டியலில் இல்லாததால், வெங்கடாஜலபதியிடம் தகராறு செய்ததும், அப்போது வெங்கடாஜலபதி நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்த மாணவனின் பெயரை எடிட் செய்து சேர்த்து அந்த போலி சான்றிதழை பதிவிறக்கம் செய்து மாணவனின் தந்தையிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் வெங்கடாஜலபதி கொடுத்த போலியான தரவரிசை சான்றிதழை எடுத்து கொண்டு மாணவன் மற்றும் அவரது தந்தை நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவன் அளித்த புகாரின் படி, போலி நீட் தேர்ச்சிக்கான தரவரிசை சான்றிதழை தயாரித்து கொடுத்த வெங்கடாஜலபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்: முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வில் தோற்றதால் மாணவர் தற்கொலை: மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்- நீட் விலக்கு அளிக்க வேண்டும்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது. முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசும், ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத திமுக அரசும் தான் மாணவனின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேறாத நிலையில், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். நீட் விலக்கு பெற்றே தீருவோம் என்று கூறி மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்கி வரும் திமுக அரசு, இனியாவது நீட் விலக்கு பெறுவதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக மாணவர்கள் விழிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் தோற்றால் வாழ்க்கையை இழந்து விட்டதால அர்த்தம் இல்லை. உயர்கல்வியில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம்…! மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு..!

மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை கேட்டது. மேலும் ஆலோசனை கேட்பதற்காக தொடங்கப்பட்ட இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர். இதன்அடிப்படையில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது.

அதன்படி, தேர்தல் அறிக்கையை டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1. சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
2. NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
3. குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
4. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும்
விரிவாக்கம் செய்யப்படும்.
5. பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
6. தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
7. 2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு.
8. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
9. 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம்
வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
10. இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
11. ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
12. ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
13. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.
14. மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்புவோம்.
15. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
16. அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும். அங்கன்வாடியில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்படும்.
17. மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். 2025 முதல் மத்திய அரசு பணிகளில் 50%
பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்
18. தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம்.
19. தனிநபர் சட்டங்களில் வரும் மாற்றம், அனைத்து சமுதாயத்தினரின் சம்மதம் பெற்ற பிறகே
மேற்கொள்ளப்படும்.
20. அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணத்தை காங்கிரஸ் ரத்து செய்யும்.

21. முதியவர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் ரூ.1000 உயர்த்தப்படும்.

22. 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

23. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு செய்யப்படும்.

24. அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிக்ஞை அங்கீகரிக்கப்படும்.

25. அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
ஏற்படுத்தப்படும்.

26. டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

27. பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்.

28. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
29. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
30. காஷ்மீருக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
31. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்.
32. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.
33. மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும் .
34. பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி.
கொண்டுவரப்படும்.
35. மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
36. 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும்.
37. நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.
38. ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
39. அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
40. முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
41. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு
வரப்படும்.
42. வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டை பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை
அமல்படுத்தப்படும்.
43. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படாது .
44. அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
45. பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.
46. நிதி ஆயோக் திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும். பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ்
முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
47. பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச்சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.
48. பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும்
விசாரிக்கப்படும்.
49. தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம். கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.

50. பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம்
இயற்றப்படும்.
51. LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.

52. பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

53. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

54. 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை
ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
55. மீனவர்களுக்காக கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படும், மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
56. தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
57. வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.
58. பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம்
அமல்படுத்தப்படும்.
59. ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகள் தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
60. மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.
61. பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
62. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும்.
63. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும்.
64. திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள்
களையப்படும்.
65. ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
66. மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து
வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.
67. அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு.படகுகள் பறிமுதல்,
மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
68. தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.
69. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
70. மாலத்தீவுடனான உறவை சீர்செய்வதாகவும், சீனாவுடனான நமது எல்லையில் இருந்த நிலையை
மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
71. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும. வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
பல மக்கள் நல திட்டங்களுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

எஸ்.வி.சேகரை கைது செய்தீங்களா? குஷ்புவுக்கு மன்சூர் அலிகான் சரமாரி கேள்வி..!?

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ, அவரது எக்ஸ் தளத்தில், “இவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க மற்றவர்களின் தவறுகளை உதாரணங்களாக காட்டி தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்கிறார்கள். மற்றவர்களை குறை சொல்லும் முன் முதலில் உங்களை நீங்களே எண்ணிப்பாருங்கள் மன்சூர் அலிகான். உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது முடியாது. மன்னிப்பு கேட்பதால் உங்கள் ஆண்மையின் அடையாளம் பறிபோகாது. மாறாக உங்கள் வீட்டு பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை போலவே தனிப்பட்ட முறையில் இருந்திருக்கலாம். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பதிவிட்டிருந்தது.

இதனிடையே டிகர் மன்சூர் அலிகான் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அந்த பொண்ணு த்ரிஷா அவருடன் நான் நடிப்பதை வெறுக்கிறேன், அவருடன் நான் ஸ்கிரீன் ஷேர் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு, இப்போ பத்திரிகைகளில் த்ரிஷா போட்டோவையும் என் போட்டோவையும் பக்கத்துல பக்கத்துல போடுறாங்க.

எல்லா பேப்பரிலும் எங்கள் போட்டோக்களை பொண்ணு மாப்பிள்ளை மாதிரி போடுறாங்க. அந்த போட்டோவில் என் போட்டோவை நல்லதா தேடி எடுத்து போட்டிருக்கக் கூடாதாப்பா (நிருபர்களிடம் கேட்கிறார்)? ஆனால் சில படங்களில் அந்த அம்மாவை (த்ரிஷா)விட நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என் பெயர் ஹாலிவுட் வரை போய்விட்டது.

நடிகர் சங்கம் செய்தது இமாலய தவறு. எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவிட்டுத்தான் அவர்களுடைய நடவடிக்கை குறித்து சொல்ல வேண்டும். சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன? நிஜமாகவா ரேப் செய்கிறார்கள்? சினிமாக்களில் ஹீரோக்களே கொலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் நிஜமாகவா கொல்கிறார்கள்?

சினிமாவில் ரேப் செய்யுறது என்றால் நிஜமாகவே ரேப் செய்யறதாய்யா (நடிகர் சங்கத்தினர்)? மீரா ஜாஸ்மின் அறிமுகமான படத்தில் ரேப் சீன் வந்தது. அப்போது அவரை கட்டிலில் போட்ட போது இடுப்பில் அடிபட்டு விட்டது. உடனே விலகிய துணியை மூடிவிட்டு, அம்மா அடிப்பட்டதுக்கு மன்னித்துவிடுங்கள் என கூறிவிட்டு அசிஸ்டென்ட்டை அழைத்து அவருக்கு முதலுதவி செய்ய சொன்னேன். இப்படித்தான் ரேப் சீன் இருக்கும்.

தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், தமிழ்நாடே என் பக்கம் இருக்கு. இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நானில்லை. குஷ்பு அவர்களே நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்களுக்கு தெரியாதா, ஆந்திராவில் அன்னப்பூரணி ஸ்டூடியோவில் குரூப் டான்ஸராக என்னை பார்த்துள்ளீர்கள். யாரையாவது நான் மோசமாக பேசியுள்ளேனா? எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா?

நீட் தேர்வால் மருத்துவ கனவு கலைந்துவிட்டதால் மன முடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்தாரே! அப்போது என் தமிழகத்தில் மாநில பாடத்திட்டமே நன்றாகத்தானே இருக்கு ! ஏன் நீட் பாடத்திட்டம் என குஷ்பு கேட்க வேண்டுமா இல்லையா, மணிப்பூரில் பெண்களை பலாத்காரம் செய்து பிணத்தையும் விட்டு வைக்காமல் டயர் வைத்து எரித்த போது மகளிர் ஆணையம் மணிப்பூர் போனார்களா? என நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த நாளில்…!

நீட் என்ற மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினால், வாழ்க்கையில் மருத்துவராக வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தன் குடும்ப வறுமையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது, தன் இலட்சியக் கனவை அடையும் வகையில் அயராதுழைத்து மிக அதிக மதிப்பெண்கள் பெற்றும், உச்சநீதி மன்றத்தின் படியேறி கதவுகளைத் தட்டியும், சமூக நீதிக்கான அத்துணை வழிகளும் அடைக்கப்பட்டதை தாங்க இயலாத மருத்துவராக வலம்வர இருந்த, அரியலூர் மாவட்டத்தில், குழுமூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா என்ற ஒரு மொட்டின் வாழ்க்கை அநியாயமாகப் பறிக்கப்பட்டதற்கு, நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில்,மு. மதிபறையனார், அம்பேத்கர் மக்கள் படை வெளியீட்டு உள்ள செய்தி அறிக்கையில்,

அனிதா விற்கு
கண்ணீர் அஞ்சலி…..

யாரோ இறக்க வேண்டியது
நீர் இறந்து விட்டாயே….

நீர் எடுத்த மார்க்குக்கு
வேற ஏதாவது படித்திருக்கலாம்
உம்மை பேசி பேசியே
கொண்ணுட்டாங்க….

ஒரு குக் கிராமத்தில் பிறந்த
வசதியுள்ள பசங்க எடுக்காத மதிப்பெண் நீர் எடுத்தாய் தற்கொலை உணர்வை உனக்கு தூண்டிவிட்டு உன் உயிரை எடுத்து விட்டானுங்க….

நீட் தேர்வுக்காக இறக்கும் எந்த மாணவன் விசயத்திலும் சமரசம் இல்லை… அவரவர் சாவிற்கு இந்த சமூகமே காரணம்…..

உம்மை டெல்லி வரை அழைத்துசென்று போராட.தூண்டியவன் உமது உயிரை காக்க மறந்திட்டான்….

நீர் இறந்த பிறகு உன் பெயரில் ஆயிரம் அடுக்காக வகுப்பறை நீட் தேர்வு அறை திருவுருவச் சிலைகள் எவ்வளவு வந்தாலும் உன்னை திருப்பித் தர முடியுமா….

மாணவர்களே நீட் என்பது ஓர் அரசியல்… அதில் சாவு காண்பது நீங்களே அரசியல் வாதிகள் அல்ல…

உங்கள் மரணத்தில்
நீட் தேர்வு அரசியல்…
இன்னும் எத்தனை காலம் இந்த ஏமாற்றுக் காலம்…..

ஒரே கட்சிக்குள் ஒருவர் நீட் தேர்வு ஆதரவு ஒருவர் எதிர்ப்பு….

ஒரே தமிழகத்தில் பல அசியல் கட்சிகள் …மக்கள் நலன் இல்லாமல் கூட்டணி நலமே அவர்களது அரசியல்… ஆனால் நீட் தேர்வை பற்றி கவலையில்லை…
இப்படி கேடு கெட்ட அரசியல் வாதிகள் மத்தியில் உங்களது உயிரை மாய்த்துக் கொள்வது நியாயமா….

இங்கே வாழ்விலும் அரசியல் …..சாவிலும் அரசியல்…
நேற்றைய தினமலர் காலை உணவு திட்டத்தை மலத்தோடு இனைத்து பேசினான் …ஆனால் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நீட் தேர்வை மலத்தோடு இனைத்து பேசியிருப்பானா….

கெரோனா காலத்தில் எவ்வளவு கட்டுப்பாடாய் வேலை வாய்ப்பை இழந்து…. பொருளாதாரத்தை இழந்து …. கல்வியை இழந்து ….
வியாபாரத்தில் நஷ்டப்பட்டு….ஊர் சுத்துவதை விட்டு ….சுற்றுலா தளங்களை மறந்து இருந்தோம் என்பதை நினைவில் கொண்டு களத்தில் இறங்குவோம்…

அது போல அரசும் மாணவர்களும் இனைந்து நீட் தேர்வுக்கு.எதிராக
பள்ளி கல்லூரிகளை மூட வைத்து இந்த முட்டள் நீதிமன்றத்திற்கும் முட்டாள் தனமான மத்திய அரசிற்கும் பாடம் புகட்ட ஒரு வருட கல்வியை புறக்கணிக்கும் போராட்டம் நடத்தினால் அரசு செவிசாய்க்கும்

இல்லையேல் எதிர்கட்சி அரசில் நீட் தேர்வு அரசியல் என கதை கட்டி இன்னும் பல உயிர்களை நீட் காவு வாங்கும் என எச்சரிக்கிறது என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ‘நீட்’ தேர்வு இருக்காது…

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரதம் திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் குமரன் சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தையொட்டி ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ‘நீட்’ தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் புகைப்படங்கள் ஆகியவை வீடியோவாக திரையில் திரையிடப்பட்டது. முன்னதாக ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா படத்திற்கு அமைச்சர், எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

திருப்பூரில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் மருத்துவ கல்லூரிகளுக்கு ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏழை-எளிய, கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

ஆனால் ஒன்றிய அரசு அதை சிறிதும் சிந்திக்காமல் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர். ஆண்டுதோறும் கஷ்டப்பட்டு படித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெறுகின்றனர். ஆனால் ‘நீட்’ தேர்வில் கடினமான கேள்விகளை கேட்கும்போது, தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு தேர்வு எளிதாக இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

முன்னாள் முதல்மைச்சர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பொதுத்தேர்வுக்கு முன்பு இருந்த நுழைவுத் தேர்வையே அவர் ரத்து செய்தார். தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ‘நீட்’ தேர்வை வைத்து இந்த இடத்தை பிடித்துள்ளனர். உயர் வகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை ‘நீட்’ தேர்வு மூலமாக ஒன்றிய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணி எனவே ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க.வின் கோரிக்கை. இதில் எந்த அரசியலும் கிடையாது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன் பிறகு ‘நீட்’ தேர்வு இருக்காது என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.மேலும் காலை தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

ஆளுநரிடம் கேள்வி கேட்டதால்… இரும்பாலை ஊழியரின் வேலையை பறிக்க பாஜவினர் மனு…!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன், நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், ‘ஒருபோதும் நீட் விலக்கிற்கு கையெழுத்திட மாட்டேன்’ என தெரிவித்திருந்தார். ஜனாதிபதியிடம் மசோதா உள்ள நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வந்து உருக்காலை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.

பின்னர் வெளியே வந்த மாவட்ட தலைவர் சண்முகநாதன் கூறுகையில்,‘‘உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் கடந்த 12-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நீட் தேர்வு தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் அது தொடர்பாக, தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து சட்டவிதிகளை மீறி பேட்டியளித்துள்ளார். இது அரசு ஊழியருக்கான விதி மீறிய செயல். அம்மாசியப்பன் பணியில் சேரும்போது, போலியான இருப்பிட சான்று வழங்கி பணியில் சேர்ந்துள்ளார்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்துள்ள அவர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர். அதனால், அம்மாசியப்பனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என உருக்காலை நிர்வாக இயக்குநருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம். அவரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால், பாஜ சார்பில் போராட்டம் நடத்துவோம்,’’ என்றார்.

நீட்டில் தோல்வியை விடுங்க.. நீட் தேர்வே தோற்றுவிட்டது.. !

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வால் மாணவன் தற்கொலைதந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது.

நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இது தான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு, எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்? நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்ட தேர்வு. அதை தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்….. நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.