Sharad Pawar: மோடி பா.ஜ.கவின் பிரதமர்..! இந்தியாவின் பிரதமர் அல்ல..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிடும் மகா விகாஸ் அகாடி வேட்பாளர் சந்திரகாந்த கைரேவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல் ஜல்னா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலேவை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, ” நான் பிரச்சாரத்திற்கு வரும் போது பிரதமர் மோடியின் பேச்சை கேட்டபோது அவர் நாட்டின் பிரதமர் அல்ல பா.ஜ.கவின் பிரதமர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்?. ஆனால் இவர்கள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், ராகுல் காந்தியையும், என்னையும் விமர்சித்து வருகிறார்கள் என சரத்பவார் பேசினார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்தலா 16 தொகுதிகள் என நாடாளுமன்ற தொகுதி பங்கீடு

மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது.

இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.