செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி ஆடு, ஓநாய் குறித்து…! அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்..!

‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அவரது தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவரின் ஆணைப்படி, ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறுகிறது. பொதுவாக, ஜெயலலிதாவின் நினைவு நாளில், அனைவரும் சென்னை சென்று அஞ்சலி செலுத்துவோம். இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளை, அந்தந்த பகுதிகளில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொண்டாடி வருகிறோம்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் ‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது’ குறித்து’ செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஆடு, ஓநாய் குறித்து அவர் சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என செங்கோட்டையன் பதில் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி: சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமைத்து வியத்தகு வெற்றியை பெறுவோம்..!

அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம். நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், அவரது புகழ் ஓங்குக என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதா ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள். அவருடைய அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள்.

எப்போது தேர்தல் வரும்,ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர்.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஜெயலலிதாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது. இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்; தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதா பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.

அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். “நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வாழ்க புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செல்லூர் ராஜூ விளக்கம்: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன் பிரச்சனை..! அண்ணன் – தம்பி பிரச்சனை..!

செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சனை அண்ணன் – தம்பி பிரச்சனையை போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்களான MGR மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதனால் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் அதிமுக இருக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும்.. அதன்பின்னரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் பிரச்சனையை பெரிதுபடுத்த தேவையில்லை.

அடுத்து 202ல் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறோம். அதிமுகவில் எந்த உட்கட்சி விவகாரமும் தூக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின், யாராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன்.. சாட்டையை சுழற்றுவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் விஜய்-தான் சாட்டையை சுழற்றுவதாக போட்டுள்ளார்கள். செங்கோட்டையன் அண்ணன் எங்களின் மூத்த சகோதரர். MGR, ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டாரா? ஆனால் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விட்டுவிட்டு கேட்காத ஒருவருக்கு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பழனிசாமி பேச்சு: 13 அமாவாசைகளே திமுக ஆட்சி முடிவுக்கு வர உள்ளது …!

திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான், 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம் என பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் MGR-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த MGR மற்றவர்கள் தங்களுடைய வீட்டுக்காக வாழ்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருப்பது நமக்கு மிகப்பெரிய பெருமை. எம்ஜிஆரை புகழ்ந்தால்தான் மற்றவர்கள் கட்சி நடத்த முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் MGR. 1962-ஆம் ஆண்டு MLA -யாக வந்தார்; அவர் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவை செய்து முதல்வரானார்.

தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. MGR விட்டு சென்ற பணியை ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை நாம்தான் அவர்களுக்கு வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை திமுகவில் வாரிசு உள்ளது. ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.

அதிமுகவை அழிக்கவும் உடைக்கவும் பலர் முயற்சிக்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. இது உயிரோட்டம் உள்ள கட்சி, தெய்வ பிறவிகள் உருவாக்கிய கட்சி. MGR உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி. அதிமுகவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும் அது நிலைக்காது; சட்டப்படி அதிமுக நம்மிடம் உள்ளது, யாரும் அதை பற்றி கவலை பட தேவையில்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை முறியடிக்க வேண்டும்.

நம்முடைய தலைவர்கள் பல சோதனைகளை கடந்து கட்சியை நடத்தினார்கள். நாமும் அது மாதிரியான சோதனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2026-ஆம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான். இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை. போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு, ஒரு குழு அமைப்பார், இந்த அரசாங்கம் குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை.

அதிமுக ஆட்சியில் கடுமையான கொரோனா காலம் மக்களின் உயிரைக் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். 36 ஆயிரம் கோடி மக்களுக்காக செலவழித்தோம். 11 மாதம் ரேஷன் கடைகளில் அனைத்தும் இலவசமாக கொடுத்தோம். ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள். நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார்.

7.5 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றினோம். ஏழை மக்கள் இருக்கும் பகுதியினை தேர்வு செய்து அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. 2000 அம்மா மினி கிளினிக்கினை இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் மூடிவிட்டனர். அதிமுக அரசில் கொண்டு வந்த அனைத்தையும் நிறுத்துவது தான் இந்த ஆட்சியின் சாதனை. ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. 11 அரசு மருத்துவ கல்லூரி நாங்கள் கொண்டு வந்தோம். இன்ஜினியரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி புதிய பள்ளிகள் தொடங்கினோம்.

இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்வது தான் திமுக. மக்களுக்கு ஆட்சி செய்வது அண்ணா திமுக. மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது

தற்போது திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்து விரைவாக திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம். ஆனால், ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது திமுக. திமுக அரசு செய்யும் தவறுகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சரியாக சொன்னாலோ திமுக அரசு காணாமல் போய்விடும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக தேர்தல் 522 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக அரசு. அதில் 20 சதவீதம் அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.

அதிமுகவின் நிர்பந்தம் காரணமாக பல்வேறு திட்டங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு ஓட்டை உடைசல் தேறாத பேருந்துகளை முன் பின் பெயிண்ட் அடித்து விட்டு இலவசமாக பயணம் செய்ய வைக்கிறார். அதிமுக அட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் சுமார் 2000 பேருந்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. நான் சட்டப்பேரவையில் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் திமுகவுக்கு சாவு மணி தான். சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம் பாலம், வேளச்சேரி மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம் இப்படி பல பாலங்களை இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.

அதிக கனமழை பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரெட் அலர்ட் கொடுத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் பல புயல்கள் வந்தது, சிறப்பாக சமாளித்தோம். பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்தோம். ஒரு புயல் வந்தாலே திமுக அரசு காணாமல் போய்விடும்.

மக்கள் துன்பப்படும்போது ஓடோடி உதவி செய்வது தான் நல்ல அரசு. அது அதிமுக மட்டுமே. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்கிறார். திமுகவின் அறக்கட்டளையில் ஏராளமான நிதி உள்ளது, அதை எடுத்து மக்களுக்கு செலவு செய்யுங்கள். கார் பந்தயம் தேவையா? ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த போதுமான இடவசதி உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊதாரியாக திமுக அரசு செலவு செய்கிறது.

திமுக அரசியல் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிமுக அரசியல் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது கூட்டுறவுத் துறை மூலம் பொருட்களை வாங்கி விலைவாசியை கட்டுப்படுத்தினோம். கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை ஆளாக்கப்பட்டதால் அந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் எஃப்ஐஆர் கசிந்துவிட்டது, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ‘யார் அந்த சார்?’ என்று நாங்கள் கேட்டோம். பல மந்திரிகள் முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதிமுக ஆட்சி மலரும்.

அந்த பெரும்புள்ளி யார் என்று வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அவை மாண்பை தொடர்ந்து சீரழித்தது திமுக தான். நாங்கள் ஒன்றும் சட்டமன்றத்தின் அவை மாண்பை சீரழிக்கவில்லை. நீட் ரத்து செய்ய ரகசியம் இருக்குது என்றார். என்ன ஆனது என கேட்டோம். மத்திய அரசாங்கத்தின் கையில் உள்ளது என்று சொல்கின்றனர். நாங்களும் அதுதான் சொன்னோம்.

ஸ்டாலின் அரசு திவால் ஆகப் போகிறது. திமுக அரசு 356 கோடி கடன் உள்ளது. இந்த பணம் எங்கே போனது? புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லையே? இதனை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம் பதில் இல்லை. நாங்கள் ஆறு மாவட்டத்தை உருவாக்கினோம். நீங்கள் ஒரு மாவட்டத்தை கூட உருவாக்கவில்லை. பல கல்லூரிகள் கொண்டு வந்தோம். நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்தை கூட கொண்டு வரவில்லை. கரோனாவால் வருமானம் இல்லாமல் ஆட்சியை செய்தோம் நல்ல வருவாய் இருந்தும் தமிழகத்திற்கு அதிக கடன் உள்ளது.

இந்த கடனால் நம் மீது வரி சுமை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைப்போம் என சொன்னீர்கள். ஆனால் வரியை உயர்த்தி விட்டீர்கள். மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழிற்சாலை வரி, தொழில் வரி உயர்ந்துள்ளது. மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சி தான் ஸ்டாலின் அரசு. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார்,” என பழனிசாமி பேசினார்.

விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரியான பதிலடி: எம்ஜிஆர் பெயரை சொல்லி பொழப்பு நடத்தவேண்டிய நிலை..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 167 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.67 கோடி நிதியுதவி வழங்கினார்.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் நடிகர் விஜய் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில்போய் இது சரியா, அது சரியா என்று நாம் சொல்ல முடியாது. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படும்.

அதிமுக கட்சி பற்றி விஜய் தனது மாநாட்டில் விமர்சிக்கவில்லை. கொள்கையில் இருந்து அதிமுக எப்போதும் மாறாது. விஜய் மட்டுமல்ல, யாராலும் அதிமுக வாக்கை பிரிக்க முடியாது. எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்: உதயநிதியின் தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார்..!

அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகிக்க, முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகிக்க திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்து விடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு, `யார் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனீர்கள்? என்று உதயநிதி கேட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியேற்க வைத்தனர். அதன்பிறகு, நானே முதல்வராகப் பதவி ஏற்கிறேன் என வி.கே. சசிகலா தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தெய்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் வி.கே. சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்துவிட்டனர். அதன்பிறகு யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் வி.கே. சசிகலாதான். நீதிமன்றம் தண்டனை விதித்ததால்தான், அவரால் முதலமைச்சராக முடியவில்லை. அவருக்கு கடவுள் அருள் இல்லை. அதன்பிறகு, கடவுள் அருளால் அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தோம். அவர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவிக்கு வரவில்லை.

ஒரு பதவிக்கு வரும்போது, மூத்தவர் காலில் விழுவது தவறில்லை. ஆனால், இதை தவறு என்கிறார் உதயநிதி. வயதுக்கு தகுந்தாற்போல அவர் பேச வேண்டும். அவரது தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன்: சசிகலாவிற்கு கடவுள் அருள் இல்லை..! முதலமைச்சராக முடியவில்லை..!

கடவுள் அருள் இல்லாததால்தான் வி.கே. சசிகலாவால் தமிழகத்தின் முதலமைச்சராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகிக்க, முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகிக்க திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்து விடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு, `யார் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனீர்கள்? என்று உதயநிதி கேட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியேற்க வைத்தனர். அதன்பிறகு, நானே முதல்வராகப் பதவி ஏற்கிறேன் என வி.கே. சசிகலா தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தெய்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் வி.கே. சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்துவிட்டனர். அதன்பிறகு யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் வி.கே. சசிகலாதான். நீதிமன்றம் தண்டனை விதித்ததால்தான், அவரால் முதலமைச்சராக முடியவில்லை. அவருக்கு கடவுள் அருள் இல்லை. அதன்பிறகு, கடவுள் அருளால் அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தோம். அவர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவிக்கு வரவில்லை. ஒரு பதவிக்கு வரும்போது, மூத்தவர் காலில் விழுவது தவறில்லை. ஆனால், இதை தவறு என்கிறார் உதயநிதி. வயதுக்கு தகுந்தாற்போல அவர் பேச வேண்டும். அவரது தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

மு.க. ஸ்டாலின் எப்போது கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டார்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்,” என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் எம்.பி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது, “அதிமுக சீரும் சிறப்புமாக உள்ளதால் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

திருமாவளவன் கேள்வி: MGR மதுக்கடைகள் ஏலம் விட்டார்..! ஜெயலலிதா மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கினார்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

இந்த மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் தொல்.திருமாவளவன் நிறைவேற்றினார். மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசுகையில், மாநாடு தொடங்கியதும் மழை வரும் என்று பயந்தேன். இயற்கை நம் பக்கமே உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த மாநாடு பேசிய தொல் திருமாவளவன், அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை. மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அது. புத்தர் மட்டுமல்ல உலகில் எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.

தொடர்ந்து இறுதியாக பேசிய தொல் திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, கடும் பொருளாதார சிக்கல் சூழ்ந்த நிலையில், கருணாநிதி கூறிய காரணங்கள், ‘நெருப்பு வளையத்துக்குள் கற்பூரம் சிக்கியுள்ளது, அது தானாகவே பிடித்து எரியும் நிலை உள்ளது.

எனவே மதுக் கடைகளை திறக்கிறேன்’ என்றார். அன்று அவர் எடுத்த முடிவு சரி என்ற நாம் நியாயப்படுத்தவில்லை. அன்றிருந்த பொருளாதார நெருக்கடியில் அதை அன்றைய முதல்வர் கருணாநிதி சொன்னார். அதே கருணாநிதி 1974-ல் மதுக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

அதன்பின் மதுக்கடைகளை திறந்தது யார், டாஸ்மாக் எனும் மதுக்கடைகளை திறந்தது யார் என எவரும் பேசவில்லையே ஏன்? தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்பதுதான் டாஸ்மாக் என கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்பதை உருவாக்கியது எந்த அரசு, என்பது குறித்து யாரும் பேசுவதில்லையே ஏன்? இதில் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன பங்கு, ஜெயலலிதா என்ன செய்தார்? தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரான பிறகா டாஸ்மாக் வந்தது என்று கேள்வி எழுகிறது. நான் யாருக்காகவும் முட்டுக்கொடுத்து பேசவில்லை. ஆனால் உரையாடக் கூடியவர்கள், வாதாடக் கூடியவர்கள் என்ன பேசுகிறார்கள், அதில் என்ன சூட்சுமம், சூழ்ச்சி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எம்ஜிஆர் காலத்திலே மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன. ஜெயலலிதா காலத்திலே மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கியது. அது இன்று வரை தொடர்கிறது. அது தொடரும்போது மு.க.ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். ஸ்டாலின் உருவாக்கவும் இல்லை, புதிதாக திறக்கவும் இல்லை. இது குறித்தும் யாரும் பேசுவதில்லையே.

நான் முதலமைச்சரை தனியாக சந்தித்தபோது, அவர் கூறியது, நான் கடைகளை மூடக்கூடாது என சொன்னேனா, மூடவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன் என பதறிபடியே, கூறினார். ஊடகங்களில் உங்கள் கட்சியினரும் பேசுகின்றனர்; ஆனால் நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது; பார்ப்போம் என கூறினார் அவர். அதன் பின் விசிக மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் பேசும்போது, மதுக் கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பேசினேன்” என தொல் திருமாவளவன் பேசினார்.

அண்ணாமலை சூட்சுமம்: MGR, ஜெயலலிதா நேர்மை, பின்னால் வந்தவர்களிடம் இல்லை..!

மதுரை, முனிச்சாலையில் நகர் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, பாரதிய ஜனதா மரியாதை செலுத்தும் வகையில் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் மத்திய அரசு சார்பாக பங்கேற்றோம். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்வு செய்து அவர்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்பதற்கு அந்த நிகழ்ச்சியே சாட்சி. அதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இதே மரியாதையை MGR நூற்றாண்டு விழாவில் செய்தோம்.

அந்த விழாவில், MGRக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டபோது, பிரதமர் மோடி கலந்து கொண்டார். MGR நாடு முழுவதும் தெரிய வேண்டிய தலைவர். அவரின் புகழை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காகத்தான், பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டார். ஆனால், 2017-ல் வெளியிட்ட நாணயத்தை, 2019-ல் தான் அதிமுகவினர் வெளியிட்டார்கள். மோடியின் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் 2 ஆண்டுகள் கழித்து நாணயத்தை வெளியிட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, உதயகுமாரை தங்களது ஊர் தாண்டினால் யாருக்கும் தெரியாது. அதிமுகவில் அற்புதமான தலைவர்களாக இருந்த MGR, ஜெயலலிதா ஆகியோருக்கு பின்னால் வந்த தலைவர்களை மக்கள் வேறுபடுத்தி பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்த நேர்மை, பின்னால் வந்தவர்களிடம் இல்லை. மக்கள் இவர்கள் மீது கடும் எதிர்ப்பில் உள்ளனர் என அண்ணாமலை பேசினார்.