அமித் ஷா பேச்சுக்கு நானா படோல் பதிலடி: இந்திரா இருந்திருந்தால் பாஜகான்னு ஒரு கட்சியே இருந்திருக்காது..!

இந்திரா இருந்திருந்தால் பாஜ இருந்திருக்காது என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.

நானா படோல் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தவர்.

மறைந்த அவரை 370-வது சட்டப்பிரிவில் அமித் ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என நானா படோல் பேசினார்.

மகாராஷ்டிர தேர்தல்: தொகுதி பங்கீட்டில் பாஜக கூட்டணிக்குள் மோதல்..!

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் – டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடையே மகாராஷ்டிர சட்டப்பேரவையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 160 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதேவேளையில் சிவசேனா 100 முதல் 105 இடங்களிலும் என்சிபி 60 முதல் 80 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் மகாயுதி கூட்டணியில் தொகுதிகளுக்கான மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மும்பை வந்தபோது அவரிடம் 100 தொகுதிகளுக்கு மேல் தாங்கள் போட்டியிட விரும்புவதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளையும் கடந்த காலத்தில் ஒருங்கிணைந்த சிவசேனா பெற்ற வாக்குகளையும் அமித் ஷா ஒப்பிட்டு காட்டியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், மக்களவைத் தேர்தலின் போது நடந்தது போல்,வேட்பாளர்களை அறிவிப்பதில் இம்முறை தாமதம் கூடாது என பாஜகவிடம் சிவசேனா நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டால் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிறகு பரிமாறிக் கொள்ளலாம் என்று யோசிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ், சரத் பவார் நெருக்கடி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு அரசியல் கட்சிகளிடையே தீவிரம் அடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடித்ததுபோல், இப்போதும் விரைந்து முடிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி முயன்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சராகும் ஆசையில் இருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, தனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் முதலமைச்சர் விவகாரத்தில் காங்கிரஸ் இறங்கி வர மறுத்துவிட்டது. அதே போன்று சரத் பவாரும் இவ்விவகாரத்தில் இறங்கி வர மறுக்கிறார். தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கு முதலமைச்சர் பதவி என்பதில் காங்கிரஸும், சரத் பவாரும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் சிவசேனா (உத்தவ்)வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் தாக்கரேயிக்கு நெருக்கடி கொடுத்து இருக்கின்றன. மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகளில் இருந்த எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் கட்சி உடைந்த பிறகு எதிரணிக்குச் சென்றுவிட்டனர்.

இதனால் சிவசேனா (உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் பலவீனமடைந்துவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதே போன்று சரத் பவாரும் தங்களது கட்சி மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாகக் கூறி, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்று உத்தவ் தாக்கரே நினைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகள் இரண்டும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன.

2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த 154 தொகுதிகளை அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்று மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வெற்றி பெற்ற 154 தொகுதிகள் போக எஞ்சியுள்ள 134 தொகுதிகளை மூன்று கட்சிகளும் உள்ளூரில் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.