உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு முகவர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், பாலிசிதாரர்களின் கடனுக்கான வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும், பீமா சுகம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பாலிசி முதிர்வு தொகைக்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு நேற்று முதல் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் ஊட்டி, கூடலூர், குன்னூரில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு

சென்னையில் எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராயநகர், சாம்பசிவம் தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோகரன். இவர், சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நான் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளேன்.

2013-ம் ஆண்டு முதல் எல்.ஐ.சி.யில் பாலிசிதாரராக சேர்ந்து பணம் கட்டி வருகிறேன். இடையில் கொரோனா தொற்று நோய் காலத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் மூலமாக பணம் கட்டினேன். ஆனால் அவர் நான் கட்டிய பணத்தை முறையாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் கட்டாமல் மோசடி செய்து விட்டார். எல்.ஐ.சி. நிறுவனத்தின் ரசீதை போல போலியான ரசீதையும் தயாரித்து கொடுத்து விட்டார். அவர் என்னிடம் ரூ.2½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு, காவல் கண்காணிப்பாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, துணை கண்காணிப்பாளர் மீனா, உதவி கண்காணிப்பாளர் ஜான்விக்டர் ஆகியோர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.