லட்டு கலப்பட விவகாரத்தில் பவன் கல்யாண் நேரில் ஆஜராக ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுபிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையான் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் 5 உறுப்பினர்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழு விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு எதிராக ஹைதராபாத்தை சேர்ந்த இ.ராமாராவ் என்ற வழக்கறிஞர் சிவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “கலப்படம் செய்யப்பட்ட நெய் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உறுதிபட கூறியுள்ளார். இதில் இந்துக்களின் மனம் புண்படும்படி அவர் பேசியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களிலும் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என மெனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஹைதராபாத் சிவில் நீதிமன்ற தலைமை நீதிபதி ரேணுகா நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். நவம்பர் மாதம் 22-ஆம் தேதி பவன் கல்யாண் இதே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுங்கள் ..!

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அந்த புகாரில், லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று தரிசனம் செய்த பவன் கல்யாண் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.

சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான். நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்” என பவன் கல்யாண் பேசினார்.

பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு திமுக தொண்டர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அந்த புகாரில், லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜா கேள்வி: சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதத்தில் கலக்காத கொழுப்பு லட்டில் எப்படி கலந்தது..!?

திருப்பதியில் லட்டு மட்டும் நெய்யில் தயாராகவில்லை. சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் எனப் பல பிரசாதங்களில் ஒரே நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் எல்லாம் ஏன் கொழுப்பு கலக்கவில்லை? நெய்க்கு மட்டும் எப்படி தனியாகப் போய் கலந்தது? ஒரு பொய்க்காக எத்தனை பொய் சொல்கிறார் நாயுடு? என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆந்திர சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரான ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியிலிருந்தபோது திருப்பதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் மிருகத்தின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது என்ற ஒரு புதிய புகாரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு முழுப் பொறுப்பு ஜெகன்மோகன் ரெட்டி தான் என சந்திரபாபு நாயுடு பேசியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை எதையும் நடத்தாமல் நாயுடு பேசியது பற்றி பலரும் கேள்வி எழுப்பி நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம் லட்டின் ஆய்வு அறிக்கையில் மிருகத்தின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறி சந்திரபாபு நாயுடுவின் கருத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆந்திர சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரான ரோஜா அவர்கள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புகாரில் எவ்வளவு முரண்பாடுகள் உள்ளன என்பதைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

மதுரையில் ரோஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “நான் ஒரு மாதம் முன்பாக தான் திருப்பதி லட்டு சாப்பிட்டேன். நல்ல ருசியாக இருந்தது. கோயில் பிரசாதங்களில் திருப்பதி லட்டை அடித்துக் கொள்ளும் அளவுக்கு வேறு ஒன்றும் கிடையாது. லட்டை வைத்து சந்திரபாபு நாயுடு அழுக்கான அரசியலைச் செய்து வருகிறார்.

சந்திரபாபு நாயுடுவுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. கடவுள் மீது பயம் இல்லை. அவர் சுயநலத்திற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்க தயாராக இருப்பார். இப்போது ஓட்டுப் போட்ட மக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார். அவர் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அவர் வாக்குறுதி அளித்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவே இல்லை. ஆந்திராவில் வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலர் இறந்துவிட்டனர். அதற்கு சந்திரபாபு நாயுடுவின் அஜாக்கிரதையே காரணம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையைத் தனியாருக்குத் தர சந்திரபாபு நாயுடு இருக்கிறார். அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க உள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடு ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை மறைக்கத்தான் இந்த லட்டு நாடகம். அவர் பக்தி இல்லாதவர். எந்த பூஜை நிகழ்ச்சிகளிலும் ஷு போட்டுக் கொண்டுதான் பூஜை செய்வார். விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரா என்று சொல்லிப் பல கோயில்களை உடைத்துத் தள்ளியவர் நாயுடு. அவர் நடத்திய துர்கா பூஜை பற்றி பெரிய சர்ச்சையே வந்தது.

திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு சில நாட்களில் விற்பனையாகிவிடும். எங்கள் ஆட்சி முடிந்து இத்தனை மாதங்களாகிவிட்டது. அப்போது நெய்யில் என்ன கலந்தார்கள் என்று இப்போது எப்படிக் கண்டுபிடித்தார் நாயுடு? ஜூலை மாதம் 17 -ஆம் தேதிதான் நெய் கண்டெய்னர் வந்தது. அதைச் சோதனைக்கு அனுப்பினார்கள். 23 -ஆம் தேதி அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில் லட்டில் வனஸ்பதி மாதிரி சைவ எண்ணெய்தான் கலக்கப்பட்டுள்ளது. அதனால் 2 நெய் கண்டெய்னரை திருப்பி அனுப்பிவிட்டோம் என்று நாயுடு அரசு சொல்லி இருக்கிறது.

ஜூன் மாதமே சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்றுவிட்டார். அவர் ஆட்சியில் உடனே திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 2014 முதல் 19 வரை 15 முறை நெய் கண்டெய்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது 18 முறை நெய் லாரியை சோதனைக்குப் பின் திரும்ப அனுப்பி இருக்கிறோம். வனஸ்பதி ஆயில் அல்லது டால்டா எனச் சின்ன அளவில் கலப்படம் இருந்தால் கூட கோயில் நிர்வாகம் உடனடியாக அதை நிராகரித்துவிடும். இது வழக்கமான நடவடிக்கைதான்.

ஆந்திர அரசாங்கத்திற்குச் சொந்தமான டிடிடி லேப் பரிசோதனையில் வனஸ்பதி என வந்த ஆய்வு அறிக்கையைத் தாண்டி சந்திரபாபு நாயுடு குஜராத் போய் நெய்யைப் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? பல ஆண்டுகளாக இங்கேதானே பரிசோதனை நடக்கிறது? இந்தியாவில் பல லேப் உள்ளது. ஏன் குஜராத் போனார். அதுவும் அரசாங்க லேப் இருக்கும் போது ஏன் தனியார் லேப் பரிசோதனைக்கு நாயுடு நெய்யை அனுப்பினார்? அதன் உள்நோக்கம் என்ன? எனவே அது ஒரு பொய்யான அறிக்கை. என்னிடம் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல் நெய் கொள்முதல் செய்த அறிக்கை இருக்கிறது.

2014-இல் அக்டோபர் மாதம் மட்டும்தான் நந்தினி கம்பெனிக்கு நெய் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது முதலமைச்சர் நாயுடுதான். 2015-க்குப் பிறகு நந்தினி நிறுவனத்திடம் நாயுடு ஒருமுறை கூட நெய் கொள்முதல் ஒப்பந்தத்தைக் கொடுக்கவே இல்லை. ஆனால், இப்போது நந்தினியிடம் கொடுக்காமல் குறைந்த விலைக்கு ஜெகன்மோகன் ரெட்டி டெண்டர் விட்டதுதான் பிரச்சினை என ரோஜா தெரிவித்தார்.

மேலும் ரோஜா பேசுகையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானமே வனஸ்பதி கலந்த நெய்யைப் பயன்படுத்தவில்லை எனப் பத்திரிகை செய்தி வெளியிட்டு 2 மாதங்கள் கழித்து நெய்யில் மிருக கொழுப்பு கலந்துவிட்டது என முதலமைச்சர் நாயுடு சொல்கிறார்.

இது எவ்வளவு பெரிய பொய்? திருப்பதியில் லட்டு மட்டும் நெய்யில் தயாராகவில்லை. சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் எனப் பல பிரசாதங்களில் ஒரே நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் எல்லாம் ஏன் கொழுப்பு கலக்கவில்லை? நெய்க்கு மட்டும் எப்படி தனியாகப் போய் கலந்தது? ஒரு பொய்க்காக எத்தனை பொய் சொல்கிறார் நாயுடு?

இது முழுக்க முழுக்க திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அந்த நிர்வாகம் தனி என்று சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் கூறியுள்ளார். ஜெகன் ஆட்சியில் தவறு நடந்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தேவை என எப்படி நாங்கள் கேட்போம்? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எப்படிக் கேட்க முடியும்?” போன்ற கேள்விகளை ரோஜா ஆதாரங்களுடன் அடுக்கி கொண்டே போனார்.

உச்ச நீதிமன்றம்: நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது..!

திருப்பதி ஏழுமலையான் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் என்பது ஒரு லட்சம், இரண்டு லட்சம் பக்தர்களை சார்ந்த்து கிடையாது. கோடான கோடி பக்தர்களின் உணர்வுகளை சார்ந்ததாகும். எனவே இதில் அரசியல் செய்திருக்க கூடாது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது என நீதிபதிகள் கட்டமாக தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான நிலையில் விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி இதுவரை ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணிய சாமி உட்பட மனுதாரர்கள் தரப்பு வாதத்தில்,” திருப்பதி லட்டு விவகாரம் என்பது பலகோடி பக்தர்களின் நம்பிக்கை சார்ந்தது ஆகும். அதில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று பொதுவெளியில் கூறுவது என்பது மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலானது.

உணர்வுபூர்வமான விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் இவ்வாறான பொறுப்பற்ற கருத்தை ஏன் கூற வேண்டும்?. பிரசாதம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அது ஆய்வுக்கு உடபடுத்தப்பட வேண்டுமே தவிர, ஒரு உயர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற ஒரு கருத்தை கூறுவது ஏற்புடையது கிடையாது.

நிராகரிக்கப்பட்ட பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா?. இந்த விவகாரத்தில் அரசின் தலையீட்டை அனுமதிக்கலாமா? குறிப்பாக இந்த பிரசாதம் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கபட்டுள்ள போது ஏன் பொது வெளியில் சென்று பத்திரிகைகளிடம் கருத்தை தெரிவிக்க வேண்டும். என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ இந்த விவகாரம் என்பது நம்பிக்கை, உணர்வு சார்ந்த விவகாரம், எனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பேசினார்.

ஆந்திர மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘திருப்பதி ஏழுமலையான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யினை வாங்குவதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து லட்டின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுக்களும் அனுமதிக்கபட்டவை கிடையாது. சுப்பிரமணிய சாமி எப்படி திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பாக மனு தாக்கல் செய்ய முடியும்.

இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என பேசினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்து விட்டீர்களா என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று ஆந்திரா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அப்படி என்றால் அதற்குள் ஊடகங்கள் இடம் செல்ல வேண்டிய அவசியம் என்ன நீங்கள் மத நம்பிக்கைகளை உதாசீதன செய்துள்ளீர்கள் காட்டமாக கூறினார்கள்.

நீதிபதிகள் தொடர்ந்து பேசுகையில், இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தது தவறானதாகும். இந்த விவகாரம் என்பது ஒரு லட்சம், இரண்டு லட்சம் பக்தர்களை சார்ந்த்து கிடையாது. கோடான கோடி பக்தர்களின் உணர்வுகளை சார்ந்ததாகும். எனவே இதில் அரசியல் செய்திருக்க கூடாது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும் அந்த நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பதற்கு தற்போது வரையில் தெளிவு இல்லை. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?

அதுகுறித்த எதற்கும் தெளிவான பதில் இல்லையே. அப்படி இருக்கையில் ஆந்திர முதலமைச்சர் ஏன் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்த விளக்கம் எங்களுக்கு கட்டாயம் வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் வைத்த குற்றச்சாட்டு தற்போது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. . மேலும் இந்த விவகாரத்தில் பொதுவெளியில் கருத்து தெரிவித்தால் பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் என்பதை ஏன் ஆந்திர முதலமைச்சர் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் சிறப்பு விசாரணை குழுவின் புலன்விசாரணையை பாதிக்கும் என்பதை கூடவா அவர் தெரிந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இருப்பினும் இந்த வழக்கை நாங்கள் வரும் 3-ஆம் தேதி அதாவது வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா அல்லது வேறு குழு அமைக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்து தெரிவிக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து வழக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று முதல் திருப்பதி மாவட்டத்தில் காவல் சட்டத்தின் 30-வது பிரிவு அமல்..!

திருப்பதி ஏழுமலையான் லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா துணை முதலமைச்சர் பவண் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திருமலைக்கு பாதயாத்திரை செல்லவுள்ளதால் பாதுகாப்பு கருதி 30-வது பிரிவு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் மாவட்டம் முழுவதும் கூட்டம், பேரணி ஆகியவை நடத்த தடை விதிக்க வழிவகை செய்கிறது. அக்டோபர் 24-ஆம் தேதி வரை இச்சட்டம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் மோகன் ரெட்டி வழிபாடு..!

ஆந்திர மாநிலம் முழுவதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொய் கூறியதாகவும், இதனால் சுவாமியின் மகிமை, லட்டு புனித தன்மை கேட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் கோயில்களில் பூஜை செய்ய அனைவரும் வரும்படி அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் பக்கத்தில், திருமாலின் புனிதம், சுவாமியின் பிரசாதத்தின் தனிச்சிறப்பு, வெங்கடேஸ்வர சுவாமியின் மகிமை, TTD புகழ், வெங்கடேஸ்வர ஸ்வாமி அருளிய லட்டுகளின் புனிதம், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், திட்டமிட்டு பொய், மிருக கொழுப்பில் கலப்படம், கலப்பட பிரசாதத்தை பக்தர்கள் சாப்பிட்டது போல், பொய் பிரசாரம் செய்து, முதல்வர் பதவியில் இருப்பவர்கள்.

திருமலை, திருமலை லட்டு மற்றும் வெங்கடேஸ்வர சுவாமியை அவமதித்த சந்திரபாபு செய்த பாவத்தை போக்க, செப்டம்பர் 28, சனிக்கிழமையன்று, மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்க YSRCP அழைப்பு விடுத்துள்ளது என ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“என் குடும்பமே நாசமா போகட்டும்..” கோவிலில் சூடம் ஏற்றி சத்தியம் செய்த கருணாகர ரெட்டி..!

திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தச் சூழலில் இன்று திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி திருப்பதிக்கு வந்து, நான் தவறு செய்து இருந்தால் என் குடும்பமே அழிந்து போகட்டும் என சூடம் ஏற்றி சத்தியம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நினியோகப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு கருப்பு பட்டியலில் வைத்தது.

இந்நிலையில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் ரெட்டி திருப்பதிக்கு வந்து கோவில் குளத்தில் நீராடியதோடு கோவில் நுழைவு வாயில் பகுதிக்கு வந்து, தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி சத்தியம் செய்தார். நுழைவு வாயில் பகுதியில் சூடம் ஏற்றிய கருணாகர ரெட்டி, “திருப்பதி லட்டுவில் நான் கலப்படம் செய்திருந்தால் என் குடும்பமே சர்வ நாசமாய் வேண்டும்’ எனக்கூறி சூடத்தை அணைத்து சத்தியம் செய்தார்.

அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக கருணாகர் ரெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் திருப்பதி நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருணாகர ரெட்டி, ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி ஆட்சி காலத்திலும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவராக இரண்டு முறை கருணாகர ரெட்டி பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tirupati Devasthanam: லட்டு மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி லாபம்..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு, அரசர்கள் காலத்தில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், வடை,தோசை, அப்பம் போன்றவை ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளிலும், கால்நடையாகவும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக திருமலைக்கு வந்தனர். அவர்கள் சுமார் 3 அல்லது 4 நாட்கள் வரை அங்குள்ள தர்ம சத்திரங்களில் தங்கியிருந்து தினமும் சுவாமியை தரிசித்தனர்.

இவர்களுக்கு திருப்பதி கோயில் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. பின்னர், இவர்கள் வீடு திரும்பும்போது, வழியில் சாப்பிடுவதற்காக தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை, வடை, அப்பம் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினர். ஆனால், சாதம் உள்ளிட்டவற்றை கொண்டு சென்றால் அவை வழியிலேயே கெட்டு விடுவதாக பக்தர்கள் குறை கூறி உள்ளனர். ஆதனால், பூந்தியை பிரசாதமாக கொடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. இது நாளடைவில் பூந்தி பிரசாதம் லட்டு பிரசாதமாக மாறி விட்டது.

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 1715-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு வரை தினமும் 1 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், இந்த பிரசாதம் 3.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு 2014-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

திருப்பதி கோயிலில் உள்ள மடப்பள்ளியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு ‘திட்டம்’ என்பது சுமார் 5100 லட்டு பிரசாதங்களை கொண்டதாகும். இதுவே அளவு என்பது. இது மாறாது. ஒரு திட்டத்துக்கு,803 கிலோ மளிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 180 கிலோ கடலை மாவு, 165 கிலோ பசு நெய், 400 கிலோ சர்க்கரை, 300 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கற்கண்டு, 4 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

இந்த லட்டு தயாரிப்பில் வைஷ்ணவ பிராமணர்களே பங்கேற்பார்கள். ஆகம விதிகளின்படி, இந்த லட்டு தயாரிக்கப்படும். முன் காலத்தில் கட்டை அடுப்பில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. தற்போது அதிநவீனமான முறையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. மிக சிறிய அளவிலான லட்டு, பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்த பிறகு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சாதாரண 175 கிராம் எடை கொண்ட லட்டு, ரூ.50 வீதம் லட்டு விநியோக மையத்தில் வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவ லட்டு என்பது சிறிய பந்து வடிவில் இருக்கும் லட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ வந்தால், அவர்களுக்கு பிரத்யேகமாக 750 கிராம் எடையில் சிறப்புலட்டு பிரசாதம் தயாரித்து வழங்கப்படுகிறது. லட்டு பிரசாதம் விற்பனை செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Organizer magazine: கோயில்களின் நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது..!

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலின் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாகக் கூறிய கருத்தால், அரசு நிர்வாகங்களுக்கு நெருக்கடி கிளம்பியுள்ளது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் ஆந்திர அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன.

இது குறித்து RSS அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான Organizer ஆங்கில இதழிலும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசாங்கங்களால் கோயில்கள் நிர்வாகிக்கப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும், பல நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டின் கோயில்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

Organizer  இதழில், கோயில்களின் நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான 400 கோயில்கள் சனாதனத்தின் சின்னங்களாக அமைந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் நகைகள் பிரம்மாண்டமான அளவில் கடந்த 70 வருடங்களாக ஊழலில் சிக்கியுள்ளன. சுமார் 50,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசு நிர்வாகத்தில் காணாமல் போயுள்ளன.

பல கோயில்களுக்கு சட்டப்படியான எந்த அரசு உத்தரவும் இன்றி, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமநாதபுரத்தின் ராமநாதசுவாமி கோயில், சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில், திருச்சியின் தாயுமானசுவாமி கோயில் ஆகியவற்றை அரசு நிர்வகிக்க இடப்பட்ட உத்தரவுகள் இல்லை என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.