திண்டுக்கல் சீனிவாசன்: உதயநிதியின் தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார்..!

அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகிக்க, முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகிக்க திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்து விடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு, `யார் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனீர்கள்? என்று உதயநிதி கேட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியேற்க வைத்தனர். அதன்பிறகு, நானே முதல்வராகப் பதவி ஏற்கிறேன் என வி.கே. சசிகலா தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தெய்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் வி.கே. சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்துவிட்டனர். அதன்பிறகு யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் வி.கே. சசிகலாதான். நீதிமன்றம் தண்டனை விதித்ததால்தான், அவரால் முதலமைச்சராக முடியவில்லை. அவருக்கு கடவுள் அருள் இல்லை. அதன்பிறகு, கடவுள் அருளால் அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தோம். அவர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவிக்கு வரவில்லை.

ஒரு பதவிக்கு வரும்போது, மூத்தவர் காலில் விழுவது தவறில்லை. ஆனால், இதை தவறு என்கிறார் உதயநிதி. வயதுக்கு தகுந்தாற்போல அவர் பேச வேண்டும். அவரது தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

ஜெயக்குமார் சரவெட்டி: சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏ.,க்கள் அதிமுக போட்ட பிச்சை..!

கருணாநிதி நாணயம் வெளியீடு விழாவை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக.,வுக்கும் பாஜகவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உதயநிதி, பிரதமர் மோடியை சந்தித்தத்தில் இருந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. கருணாநிதி சிலையை வெங்கய்யா நாயுடுவை அழைத்து வந்து திறந்தார்கள். சோனியாவையோ, ராகுலையோ அழைக்கவில்லை.

லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கம் அதிமுக.,வை மட்டும் குறிவைத்து இருந்தது திமுக.,வை எதிர்க்கவில்லை. திமுகவினருக்கு எதிராக ஊழல் பைல்ஸ் வெளியிட்டார் கவர்னரிடம் மனு அளித்தார். ஆனால் அது தொடர்பாக ஒரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதன்பின்னர் வலியுறுத்தினாரா? இல்லை. அதெல்லாம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வருகிறது. வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்.பி.,க்கள் டில்லி சென்றார்கள். அங்கு ஒரு வெற்றி கூட்டம் நடந்தது. அதில் ஜே.பி. நட்டாவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

இயக்குநர் விக்ரமன் திரைப்படங்கள் மாதிரி ஒரு குடும்ப சென்டிமென்ட் நிகழ்ச்சியாக நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுகவும், பாஜகவும் அண்ணன், தம்பி போல் குடும்ப விழாவாக அதை நடத்தினர். ஸ்டாலின் எப்போதும் கருப்பு பேண்ட் தான் போடுவார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சந்தன நிற பேண்ட் போட்டு சென்றுள்ளார். கருப்பு பேண்ட் போட்டால், கோ பேக் மோடி, கோ பேக் ராஜ்நாத் சிங் என்பது போலாகிவிடும்.

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். இது 50 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கட்சி; 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது. எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்துப் பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026-ல் தனியாக நின்று ஒரு சீட் தனியாக நின்று ஜெயித்து பாருங்கள்; முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

‘நா-நயம்’ மிக்க தலைவராருக்கு நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பெருந்தன்மையோடு கலந்து கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிகாரிகள், விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது.” போன்ற கருத்துகளை முன்வைத்தார்.

என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவரைச் சிறப்புச் செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது. ‘நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது.

நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், தலைவர் கலைஞர் அவர்களது திருவுருவப் படத்தை, அன்றைய குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை, மேற்கு வங்க முதலமைச்சர் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார்கள். இன்று தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நாணயத்தை, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வெளியிட வருகை தந்துள்ளார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானதுதான். எண்பது ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் இயங்கி, அதில் அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கலைஞருக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைவர் கலைஞர் நிறைவடைந்த நாள்முதல், நாள்தோறும் அவர் புகழைத்தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தலைவர் கலைஞரைப் போற்றும் விதமாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அவற்றில் முத்தாய்ப்பான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! 1 கோடியே 15 லட்சம் மகளிர், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’! கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்! இந்தப் பெருமைக்கெல்லாம் மகுடமாக, இன்று கலைஞர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது.

இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, தலைவர் கலைஞர் அவர்கள்தான்! அவர் உருவாக்கிய கட்டமைப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது. அவரது சாதனைகளைச் சொல்ல, இதோ நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே, இந்த கலைவாணர் அரங்கத்தில் இருந்தே தொடங்கலாம். பாலர் அரங்கமாக இருந்த இதனை, மிகப்பெரியதாகக் கட்டி எழுப்பி, ‘கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றினார். தாய்மொழியாம் தமிழ்மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றுத் தந்தார். மெட்ராசை ‘சென்னை’ ஆக்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கினார்.

* 44 அணைக்கட்டுகள்
* ஏராளமான கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள்
* சென்னையைச் சுற்றி மட்டும்
* அண்ண சாலை, அண்ணா மேம்பாலம்
* வள்ளுவர் கோட்டம்
* கத்திபாரா பாலம்
* கோயம்பேடு பாலம்
* செம்பொழிப்பூங்கா
* டைடல் பார்க்
* தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, இன்று பெரிய அர மருத்துவமனையாக இருக்கும் ஒமந்தூரார் மருத்துவமனை
* மெட்ரோ ரயில்
* அடையாறு ஐ.டி. காரிடார்
* நாமக்கல் கவிதர் மாளிகை
என அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை என்பதை யாராலும் மறைக்க முடியாது.
கடந்த 15-ஆம் நாளன்று இந்திய நாட்டின் 78-ஆவது விடுதலை நாளைக் நாம் கொண்டினோம். அன்று நாள் மட்டுமல்ல நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தவரும் முதலமைச்சர் கலைஞர்தான்!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே….
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” என்று, அப்படி ஆட்சி நடத்தியவர் கலைஞர்!

அதனால்தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் கலைஞர் உயர்ந்து நிற்கிறார்.
* செயல்படுவதும், செயப் வைப்பதும்தான் அரசியல் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர் கலைஞர். ஒரு கட்சியின் தலைவராக; ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக எப்போதும் சிந்தித்தார்! செயப்பட்டார்
* 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு க தீர்மானம்.
* 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதிமற்றும் நிலம்

* 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 510 கோடி ரூபாய் வழங்கியவர் நலைவர் கலைஞர்!
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில் நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கலைஞர் அவர்கள்.
* நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த யாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான்!

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம். அவரது வழியில் இன்றைய திராவிட பாடம் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கலைஞர் அரசாகச் செயல்பட்டு வருகிறது. சட்டசபையை அதிகார அமைப்பாக இவ்வாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருதவேண்டும்” என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அப்படித்தாள் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது, எனது அரசல்ல; நமது அரசு! ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு! திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு ! இதனை என்னுள் ஏற்படுத்தியவர் தலைவர் கலைஞர். அந்த வகையில் கலைஞரே இயக்கிக் கொண்டிருக்கிறார்.

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க என மு.க ஸ்டாலின் பேசினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு இதுகூடவா தெரியாது…!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை?

கருணாநிதிக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதிக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கருணாநிதி எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமு கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே கருணாநிதியின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிறைந்திருக்கிறது.

அதிமுகவைப் போல பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, திமுக மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

அத்திக்கடவு- அவினாசி திட்டம்: அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972 -ஆம் ஆண்டில் முதன் முதலில் செயல்படுத்த கருணாநிதி முனைந்தவர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள்.

அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கருணாநிதியை மத்திய அரசே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் ஊட்டியவர் வி.கே. சசிகலா நடராஜன்

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24 -ம் நாள் இயற்கை எய்தபோது எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை ஒரு கூட்டம் கீழே தள்ளிவிட போது புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு தன்னம்பிக்கையுடன் தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்து நடமாட வைத்த ஒரே ஒரு நபர் வி.கே. சசிகலா நடராஜன்.

அதன்பின்னர் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்று 13 ஆண்டு கால வனவாசத்தை முடித்து ஆட்சி பீடத்தை கைப்பற்றியது. அப்போது தேர்தல் ஜெ அணி 27 இடங்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும் அ.தி.மு.க (ஜா அணி) 2 இடங்களையும் கைப்பற்றியது நாடறிந்தது. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி 3- வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜெயலலிதா பதவி ஏற்றதோடு சரி, அதன்பிறகு சட்டமன்றத்திற்கு வருவதையே ஜெயலலிதா தவிர்த்தார். இதற்கிடையே, ஜா-ஜெ அணிகளிடையே வி.கே. சசிகலா நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்தார். அதன்பிறகு மார்ச் மாதம் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது.

”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்” -என்ற வள்ளுவனின் வரிகளுக்கு இணங்க, தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெயலலிதா இந்த இரண்டு தொகுதிகளுக்கும் பிரசாரங்களுக்கு போகமலேயே ‘இரட்டைஇலை’ சின்னம் கிடைக்க வி.கே. சசிகலா நடராஜன் வெற்றிக்கு வியூகம் அமைத்துக் கொடுக்க கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் ராஜா தந்திரங்களை கற்றுக் கொடுத்த தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அ.தி.மு.கவின் வெற்றி குறித்து பேச போயஸ் கார்டனுக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்போன் போட்டா அப்போது மறுமுனையில் போனை எடுத்து பேசியது நடராஜன். “அண்ணாச்சி.. நீங்க சொன்ன பார்முலா நல்லா வேலை செய்துடுச்சி… நாம ஜெயிச்சுட்டோம்” என்று உற்சாகமாக பேசினார். இந்த உரையாடலை இவர்கள் இருவரையும் தாண்டி, “மூன்றாவது காது’ ஒன்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் 1989 -ம் ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி தி.மு.க அரசு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதலமைச்சரும் நிதியமைச்சருமான கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது’ என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது.

தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று உரிமை மீறல் பிரச்னையை ஜெயலலிதா எழுப்பினார். அப்போது நடந்த யுத்தத்தில், பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கருணாநிதி மூக்கு கண்ணாடி உடைந்தது; வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலிருந்து இரத்தம் கொட்ட ஆரமித்தது; ஜெயலலிதா சேலை கிழிந்தது என சட்டமன்றமே அமளி.

இந்த மன உளைச்சலால் அரசியலை விட்டு ஜெயலலிதா ஒதுங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஜெயலலிதா பரபரப்பான இருந்த நேரத்தில் எழுதிய கடிதம் ஒன்று வி.கே. சசிகலா நடராஜன் கையில் கிடைக்க.அந்த கடிதம் உரியவர்கள் கைக்குச் செல்லாமல் தடுத்தார்.

இந்த தகவல், உளவுத்துறை மூலம் முதலமைச்சர் கருணாநிதி காதுக்கு எட்டியதால் வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் உள்ளது. ‘நமக்காக இவ்வளவு சோதனைகளை வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் சந்திக்கிறாரே’ என்ற காரணத்தால் ஜெயலலிதா வி.கே. சசிகலாவின் மீது அதிக அன்பாக மாறினார்.

அதன்பின்னர் 1989–ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க-வுடன் சேர்ந்து சந்திக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வி.கே. சசிகலா நடராஜன் அச்சாரமிட்டார். காங்கிரஸ் கட்சியுடனான புதிய உறவு ஜெயலலிதாவிற்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றதால் ஜெயலலிதா மிகுந்த உற்சாகம் அடைந்தாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. வி.கே. சசிகலா நடராஜன் அன்றே திமுகவிற்கு எதிரான அரசியல் சதுரங்க விளையாட்டிற்கு ஜெயலலிதாவிற்கு துணை நின்று ஒவ்வொரு நகர்வுகளாக நகர்த்தினார்.

மத்தியில் சந்திரசேகரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுக மற்றும் அதனுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர்.

மேலும் ஜூன் 1990 -ம் ஆண்டு சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா அவர்கள் எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசாமி தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார்.

இதுமட்டிமின்றி இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறியதன் விளைவாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆளுநர் ஒப்புதல் இல்லாமல். அதர்வைஸ் 356 சட்டத்தை பயன்படுத்தி ஜனவரி 1991-ல் திமுக ஆட்சியை குடியரசு தலைவரே நேரடியாக கலைத்தார்.

அதன்பிறகு பத்தாம் நாடாளு மன்றத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றவிருந்த நிலையில் மே 21-ம் தேதி 1991 -ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளு மன்ற/சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி மக்களிடையே பெரும் அனுதாப அலை பெற முயற்சி செய்தது. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று வி.கே. சசிகலா நடராஜன், ஜெயலலிதாவிற்கு பிரசார யுக்தியை கைகளில் கொடுத்தார்.

அதே சமயம் அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசர், கே. கே. எஸ். எஸ். ஆர். கருப்புசாமி பாண்டியன், உகம்சந்த் ஆகியோர் திமுகவிலிருந்து பிரிந்த டி. ராஜேந்திரன் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகத்தில் இணைய வைத்து தனித்து தேர்தலில் போட்டியிட வைத்தார்.

மற்றொரு புறம் வன்னிய ஜாதியனரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க 1987 -ம் ஆண்டு வன்னியர் போராட்டங்களை நடத்திய ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இதன்விளைவாக எம். ஜி. ஆர்க்கு பிறகு 224 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேறியதில் வி.கே. நடராஜனின் பங்கு சொல்லில் அடங்காது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதாவை எந்த கூட்டம் கீழே தள்ளியதோ அந்த கூட்டத்திற்கு நடுவே ஜெயலலிதாவை முதல்வராகி அழகு பார்த்தது. அதுமட்டுமின்றி அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை அதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக கட்டம் கட்டியது இல்லாமல் எந்த சட்ட மன்றத்தில் ஜெயலலிதா சேலை கிழிந்ததோ அதே சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவை அமர வைத்ததில் வி.கே. சசிகலா நடராஜனின் பங்கு ஏராளம்.

கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தல்

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளான இன்று தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கயல் விழி செல்வராஜ், எஸ். ரகுபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி, பிரபாகர் ராஜா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.