G20 உச்சி மாநாட்டில் கோடீஸ்வரர்களுக்கு 2 சதவீத வரி விதிக்கும் பிரேசிலின் முன்மொழிவு குறித்து விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்ன என்பது விளக்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில், ஒரு வருடத்துக்கு முன்பு, G20 உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. G20 தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அடுத்த G20 உச்சி மாநாடு பிரேசிலில் நடக்க உள்ளது.
ஆனால் மாநாட்டை நடத்துவது பற்றி நமது உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் செய்ததை போல் பிரேசில் தம்பட்டம் எதுவும் அடித்து கொள்ளவில்லை. நவம்பர் 2024 உச்சிமாநாட்டில், 1000 கோடிக்கு மேல் சொத்துகள் உடைய கோடீஸ்வரர்கள் மீது 2 சதவீத சொத்து வரிக்கான திட்டத்தை பிரேசில் முன்வைத்துள்ளது. இந்த முன்மொழிவை பிரான்ஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி ஏற்கனவே ஆதரித்துள்ளன.
இந்தியா இது குறித்து மவுனமாக உள்ளது. இது பற்றி விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்.ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் 334 பேர் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த திட்டம் பற்றி விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தெரிவித்துள்ளார்.