சபாநாயகர் அப்பாவு: வருமான வரித்துறை விஜய்யின் மீது நடவடிக்கை எடுக்குமா..?

ரூ.220 கோடி வரி ஏய்ப்பு செய்யும் விஜய்யின் மீது மத்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா..? என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களின் சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். அப்போது, “நம்ம தம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததில் எந்தவொரு தவறும இல்லை. அதை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஆனால், அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறாரே புஸ்ஸி ஆனந்த். அவருக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா.. இருவருக்கும் இடையே எத்தனை ஆண்டு பழக்கம் இருக்கிறது என்பது தெரியுமா.. அப்படிப்பட்ட நபரைப் பொதுச்செயலாளராக வைத்திருக்கும் கட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்..

ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று புஸ்ஸி ஆனந்திற்கு போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் தான் அடுத்த முதல்வர் என்றால் என்ன செய்ய முடியும். 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே.

மத்திய வருமான வரித்துறை இதில் நடவடிக்கை எடுக்குமா..? அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். அப்படி பாஜக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்.. பாஜக சொல்லியே இவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர்களிடம் வேறு ஒரு திட்டமும் இருப்பதாகவே தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தனிநபர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு..!

தனிநபர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.12 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து வரி கணக்கிடப்படும். 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு தனிநபர்கள் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

“புதிய முறையின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை (அதாவது மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர மாதத்துக்கு ரூ.1 லட்சம் சராசரி வருமானம் வரை) வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்துவது கணிசமாகக் குறையும். அவர்களின் கைகளில் அதிக பணத்தை இது விட்டுச்செல்லும். இது வீட்டுச் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய வரி விதிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை கூடுதல் விலக்கு இருப்பதால், வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ரூ.12.75 லட்சம் வரை எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரத்தில், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ரூ.4 லட்சத்தில் இருந்தே வருமான வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்துக்கு பூஜ்ய வரி, ரூ.4 முதல் 8 லட்சம் வரை வருமானத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ. 8-12 லட்சம் வரை 10 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.

ரூ. 12-16 லட்சம் வரை 15 சதவீதம் வரி, ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வருமான வரி, ரூ. 20-24 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 25 சதவீத வருமான வரி, ரூ.24 லட்சத்துக்கு மேல் உள்ள வருவாய்க்கு ஆண்டுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துபவருக்கு புதிய வருமான வரி விதிப்புபடி, ரூ.80,000 வரி சலுகை கிடைக்கும். ரூ. 18 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ.70,000 வரி சலுகை கிடைக்கும். ரூ.25 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ. 1.10 லட்சம் பலன் கிடைக்கும்.

மேலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சமாக இருப்பதை ரூ.6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் அடங்கும்.

2. எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

3. சிறிய தொண்டு அறக்கட்டளைகள் / நிறுவனங்களின் பதிவு காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பதன் மூலம் நடைமுறை சிரமங்கள் குறையும்.

4. உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, பரிமாற்ற விலை நிர்ணய செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கும் சர்வதேச வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான துறைமுக விதிகளின் நோக்கம் விரிவுபடுத்தப்படுகிறது. என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் நடராஜன் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் பூர்விகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பூர்விகா நிறுவனத்தின் கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2-வது நாளாக பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.