கே.பி.முனுசாமி: ஆளுநர் ஆர்.என்.ரவி ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் பேசிக் கொண்டிருக்கிறார்..!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் தரம் பற்றியும், பள்ளிக் கல்வி பற்றியும் தமிழக ஆளுநர் ரவி விமர்சித்துப் பேசியதற்கு திமுக கடும் எதிர்வினை ஆற்றி வரும் சூழலில், திமுகவோடு கைகோர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆளுநர் காழ்ப்புணர்வோடு பேசுவதாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக அண்மையில் விமர்சித்திருந்தார். அதற்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்வினைகள் எழுந்தன. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் கல்விமுறை தான் சிறந்த கல்விமுறை. இதைப் பிடிக்காத சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை குறை சொல்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.

எனினும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 -ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழக பள்ளிக் கல்வி பற்றி விமர்சித்துப் பேசினார் ஆளுநர் ரவி. அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது எனப் பேசினார் ஆளுநர் ரவி. ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆளுநர் ரவி ஆவணங்களைப் பரிசீலிக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு அவ்வப்போது கொடுக்கும் கோமாளித்தனமான வாக்குமூலங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பும் ஆளுநர் ரவியை காட்டமாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் தான் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மிக உயர்வான இடத்தில் இருக்கிறது. ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் படிக்காததன் காரணம் அங்குள்ள ஆசிரியர்களின் நடவடிக்கை தான். அப்படியானவற்றை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை குறைத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: “தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது..!”

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல நாடுகள், பல ராஜாக்கள் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்துள்ளார்கள்.

120 ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி, பிஹாரின் ஒரு கிராமத்தில் இருந்து பல நாடுகளைக் கடந்து ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளார். காரணம், ராமேஸ்வரம் தன்னுடையது, ஒவ்வொருவருக்குமானது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அப்படித்தான் பல புண்ணிய தலங்கள் நாடு முழுவதும் உள்ளன.

ராமேஸ்வரம், ராமநாதபுரம் மன்னருக்கானது அல்ல. அது பாரதம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கானது. ராஜாக்கள், அவற்றின் பாதுகாவலர்கள் மட்டுமே. இதேபோல்தான் காசியும். இப்படித்தான் இந்த நாடு ஒரே நாடாகவும், அதேநேரத்தில் பல ராஜாக்கள் ஆளக்கூடியதாகவும் இருந்துள்ளது. பக்திக்காக மட்டுமல்ல, கல்விக்காகவும் ஒரு இடத்தில் இருந்து மக்கள் வேறு ஒரு இடத்துக்குச் சென்று வந்தார்கள்.

1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ இளவரசர் 500 பேருடன் பிஹாரின் நாளாந்தா சென்றார். அங்கு கல்வி பயின்றார். பின்னர், அவரே ஒரு குருவாக உருவெடுத்தார். அவரே போதி தர்மரானார். யாரும் யாரையும் தடுக்கவில்லை. நீங்கள் வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என கூறவில்லை. பல்லவ இளவரசர் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் நாளந்தா தன்னுடையது என்று எண்ணினார்.

அதேபோல்தான் ஆதிசங்கரர். நினைத்துப் பாருங்கள் அவர் நாடு முழுவதும் பயணித்திருக்கிறார். ஒருவரும் அவரை தடுத்ததில்லை. சமூகம் அவரை வரவேற்றது. மக்கள் வரவேற்றார்கள். தற்போதைய அரசியலைக் கொண்டு இந்தியாவை புரிந்துகொள்ள முடியாது. இது ஒரு ராஷ்ட்ரம். ராஷ்ட்ரம் என்பது நாடு என்பதை கடந்த ஒன்று.

கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.

துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள்.

இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது. தமிழ்நாடு சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சனை போதைப் பொருள்கள். ஆனால், போதைப் பொருள்கள் பெரிய பிரச்சினை இல்லை என்று மறுக்கக்கூடிய நிலை இங்கே இருக்கிறது. கோகெய்ன், ஹெராயின், மெத் என ரசாயண போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதனை நாம் மறுப்பதால் பயனில்லை. இது நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, இதற்கு தீர்வு காண வேண்டும். ஆசிரிய சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தவறான பாதையில் சென்றால், அது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர் தினம் இதற்கான உறுதியை எடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மணவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

மாணவர்களை பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்கூட, சராசரி வேலை குறித்த கனவையே கொண்டிருக்கிறார். பலரின் கனவுகள் சிறியதாக உள்ளன. ஆலமரத்தின் விதையைப் போன்றவர்கள் மாணவர்கள். ஆனால், பலர் அதனை உணராமல் போய்விடுகிறார்கள்” என தெரிவித்தார்.

ஆர்.என்.ரவி: நாட்டை துண்டா விரும்புகிற திராவிட சித்தாந்தம்..!

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நாடு விடுதலையின் போது 77 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிவினை கால கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் போது துன்பகரமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மனிதர்களின் தவறுகளால் இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினையால் ஒன்றரை கோடி அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். எத்தனையோ லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை என்பது அனைவரும் சமம்தான் என்கிறது. ஆனால் இந்த நாட்டை 65 ஆண்டுகளாக ஆண்டவர்கள் இந்த சிந்தனையை உடைத்தனர்; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர். உலகில் வலிமை மிக்க ராணுவமாக நாம் திகழ்கிறோம். நமது நாட்டிடம் ஆயுதங்களை பிற நாடுகள் வாங்குகின்றன. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் சிலர் நமது நாட்டு பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

1947-ல் ஏற்பட்ட பிரிவினையின் வடுக்கள் ஆறவில்லை. இந்த துயரம் இப்போதும் முடிவுக்கு வரவில்லை. பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் ஒன்றுதான் திராவிட சித்தாந்தம். இந்தியாவை துண்டாட விரும்புகிற சித்தாந்தம் திராவிடம். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்க மறுப்பதுதான் திராவிட சித்தாந்தம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட காரணமே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததுதான். பள்ளிகள், கோவில்களில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் கவலை தருகின்றன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

நீட் தேர்வு பயிற்சிக்காக 20 லட்சம் செலவு… வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2016 -ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாஜகவை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தற்போது திமுக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை நீட் தேர்வு பயிற்சிக்காக தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், வசதி இருக்கும் தன்னால் அந்த செலவை செய்ய முடிந்தது.

அதேவேளையில் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் மாணவர்களின் வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா? எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடுவீர்கள் என்று அம்மாசியப்பன் கேட்க, இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அந்த பெற்றோரிடமிருந்து மைக்கை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருபோதும் தான் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.