அமலாக்கத் துறை அறிவுரை: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் ஏமாற வேண்டாம்..!

செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.4.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறிகையில், குஜராத்தின் வடோதராவில் அண்மையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலை பிடித்தோம். அப்போது தைவான் நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். வடோதராவின் பிரபல வணிக வளாகத்தில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

அங்கு அதிநவீன செல்போன்களில் சுமார் 20 பேர் நாள்தோறும் பொதுமக்களை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிந்து வந்துள்ளனர். இதேபோல டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு உள்ளன. வடோதரா கும்பலிடம் இருந்து 761 சிம் கார்டுகள், 120 செல்போன்கள், 96 காசோலை புத்தகங்கள், 92 டெபிட் கார்டுகள், 42 வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

பெரும்பாலும் தைவான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கும்பல்கள் இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா மட்டுமன்றி தெற்கு ஆசியா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மையத்தில் இருந்து நாள்தோறும் ரூ.10 கோடி வரை மோசடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நாள்தோறும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக்கூடாது. எந்தவொரு அரசு அமைப்பும் செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்காது. காணொலி வாயிலாகவும் விசாரணை நடத்தப்படாது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளின்படி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பதே கிடையாது என அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது ஜாமீனில் வெளிவருகிறாரா..!? இன்று தீர்ப்பு..!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது தொடர்பாய் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உட்பட மொத்தம் 47 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக உள்ளனர். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களை செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்து விடுவார் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ராம்சங்கர், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் மீது பதியப்பட்டுள்ள ஒரு வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்படுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

குறிப்பாக செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டத்திற்கு புறம்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை கூட செய்து கொண்டார். தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தொடர்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டு இருக்கிறார். முகாந்திரமே இல்லாத இந்த வழக்கில் என்ன தான் அமலாக்கத்துறை தரப்பில் விசாரிக்கிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. மேலும் எப்போது விசாரணை முடியும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சமாக இருக்கிறது.

எனவே செந்தில் பாலாஜியின் உடல்நிலயை நீதிமன்றம் கருத்தில் கொண்டு இந்த வழக்கிலிருந்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை கூறியபடி செந்தில் பாலாஜி மீதான வழக்கை தனித்தனியாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 20-ஆம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றம் அதிரடி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்க துறை வழக்கு ரத்து..!

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறையும் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர்சேட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபர் சேட் தரப்பில், தனக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்: “15 மாதங்களாக சிறை..! மணீஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும்”

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி செந்தில் பாலாஜியின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து உடனே தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஓகா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளது என நீதிபதி ஓகா தெரிவித்தார்.

ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதிடப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு, “கடந்த ஓராண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வழக்கில் விசாரணை முடியும் வரை ஒருவரை சிறையிலேயே வைத்திருக்க முடியாது.

ஜாமின் கோரிய வழக்கில், அதுபற்றி பேசாமல் வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசுவது சரியல்ல. வழக்கில் கைப்பற்றியதாக கூறப்படும் ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் திருத்தம் செய்யப்பட்டவை. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு பொருந்தும். செந்தில் பாலாஜி 5 முறை சட்டமன்ற உறுப்பினர், அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார்; எனவே ஜாமின் வழங்க வேண்டும்,”என வாதிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் எப்போதுதான் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் 3 மாதங்களில் விசாரணை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஏற்க மறுத்து நிராகரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஜாதி பெயரை போட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு அண்ணாமலை வக்காலத்தா..!?

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை இன்று பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் புள்ளி விவரங்களுடன் அடித்து விடுகிறோம் என்று பேசிக்கொண்டு அவர் பேசுவதெல்லாம் பொய் என்று ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டிலடித்து வருகின்றனர்.

உதாரணத்துக்கு அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து சர்ச்சை, ரபேல் வாட்ச், 20 ஆயிரம் புத்தகங்கள் வாசிப்பு, காமராஜர் பிறகு தமிழ்நாட்டில் அணையே கட்டவில்லை என கூறியது என்று இப்படி பட்டியல் பெரிதாக போய்கொண்டே இருக்கும். அண்ணாமலையின் பொய் லிஸ்ட்டில் சேலத்தில் நடந்த 2 சம்பவங்களும் இணைந்து உள்ளன.

சேலத்தில் ஏழை விவசாயிகளுக்கு இடத்தை பாஜக நிர்வாகி அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக நிர்வாகி தூண்டுதலின் பேரில் விவசாயிகளின் ஜாதி பெயர் போட்டு அவர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அப்போது அவர்களின் ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தியதாக அனைத்து கட்சிகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது. சேலம் வந்த அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேட்டியளித்தார். எப்ஐஆரில் பெயர், அட்ரஸ், தொழில், ஜாதி என எழுத காலம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை அதிரடி: “அரவிந்த் கேஜ்ரிவால் கைதாக வாய்ப்பா..!?”

டெல்லி ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பிய நிலையிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புதன் பின்னிரவில் எக்ஸ் சமூகவலைதளத்தில் கருத்திட்ட டெல்லி சட்டம், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, “நாளை (வியாழன்) காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்றிரவு 11.52 மணிக்கு பதிவு செய்த ட்வீட்டில், “நாளை (வியாழன்) காலை முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துகிறது. கைது செய்யப்பட வாய்ப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோல் அக்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இதே அச்சத்தை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சாலைகள் காவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. மற்றொருபுறம் ஆம் ஆத்மி அலுவலகம் முன் கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரியை விரட்டி கைது செய்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை…!

நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர் அல்லது அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக அமலாக்கத்துறையின் மூலம் மாநில அமைச்சர்களிடம் விசாரணை செய்வது, கைது செய்து விசாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதற்காக அதிகாரிகள் அப்பழுக்கற்றவர்கள், அவர்கள் நேர்மையாகத்தான் செயல்படுவார்கள் என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்து அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்து அதன் வருவதாக உள்ளது. உண்மையில் நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

டெல்லி, ராஜஸ்தான், அகமதாபாத் ஆகிய இடங்களில் லஞ்சம் மற்றும் சூதாட்ட வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதாகியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தில் சோதனை என்ற பெயரில் செல்லும் அதிகாரிகள் அவர்களின் சூழ்நிலை மற்றும் சொத்து விவரங்களை எல்லாம் அறிந்து அவர்களுக்கு சம்மன் அனுப்புவதுபோல் அனுப்பி ஒரு சில அதிகாரிகளை வைத்து லஞ்சம் கொடுத்தால் வழக்குகளில் இருந்து விடுவிக்கிறேன் என்று பேரம் பேசப்படுகிறது.

அவ்வாறு கிடைக்கும் பணத்தில் மேல்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பங்கு போட்டு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மேல்மட்ட அதிகாரிகள் யாரும் சிக்குவதில்லை. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த அங்கித் திவாரி. இவர் 2016-ம் ஆண்டு ஒன்றிய அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, மத்தியப்பிரதேச அமலாக்கத்துறையில் பணியில் சேர்ந்தார்.

பின்னர், மகராஷ்டிரா (நாக்பூர்), குஜராத் ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்கிருந்து ஆய்வாளர் அந்தஸ்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, கடந்த ஏப்ரல் 23ல் மதுரைக்கு வந்துள்ளார். மதுரைக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையில் தென் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் விவரங்களையும், வழக்குகளின் தகவல்களையும் கேட்டு வாங்கியுள்ளார்.

அதில், திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான வழக்கு ஆவணங்களையும் வாங்கியுள்ளார். சுரேஷ்பாபு, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, கடந்த 2018-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவரது மனைவி பெயரில் திண்டுக்கல்லில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஏராளமான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்கித் திவாரி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு, ‘உங்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது.

இது பிரதமர் அலுவலகம் மூலம் அமலாக்கத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நாங்கள் விசாரணைக்கு எடுக்க போகிறோம். விசாரணைக்கு எடுத்தால் உங்களுடைய சொத்துகள் அனைத்தும் முடக்கி பறிமுதல் செய்வோம். இதை தவிர்த்து வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும்.

இது எனக்கு மட்டும் இல்லை. உயர் அதிகாரிகள் வரை கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால், உங்களை மட்டுமல்லாமல் மருத்துவமனை உங்கள் மனைவி பெயரில் இருப்பதால் அவரையும் கைது செய்ய வேண்டியது வரும்’ என்று பேரம் பேசி உள்ளார். இதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு மறுத்து உள்ளார். இருப்பினும் விடாமல் அவரை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டு தொடர்ந்து பேரம் பேசி வந்து உள்ளார்.

இறுதியாக ரூ.51 லட்சம் கொடு என்று அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவை மிரட்டியுள்ளார். கடந்த மாதம் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரி, மருத்துவரின் வீட்டுக்குச் சென்று வாங்கியுள்ளார். அதன் பின்னர் மேலும் ரூ.31 லட்சம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரியின் டார்ச்சரால் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் மருத்துவர் சுரேஷ்பாபு புகார் கொடுத்து உள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய் குமார் சிங், இணை இயக்குனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் விசாரணை நடத்தினார். இதில் மருத்துவர் சுரேஷ்பாபுவை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியது உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டு, அங்கித் திவாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மருத்துவர் சுரேஷ்பாபு அங்கித் திவாரியை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சத்தை தருவதாக கூறி உள்ளார். உடனே அங்கித் திவாரி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரின் பேகம்பூரை அடுத்துள்ள தோமையார்புரம் அருகே உள்ள மருத்துவரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை மருத்துவர் சுரேஷ்பாபுவை வர சொல்லி உள்ளார்.

அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தந்த ரசாயனம் தடவிய ரூ.20 லட்சம் பணத்துடன் அங்கித் திவாரி சொன்ன இடத்துக்கு மருத்துவர் சுரேஷ்பாபு சென்று உள்ளார். அங்கு காரில் அங்கித் திவாரி காத்திருந்தார். மருத்துவரை பார்த்ததும், பணத்தை கார் டிக்கியில் வைக்க சொல்லி உள்ளார். உடனே, ரசாயனம் தடவிய ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியின் கார் டிக்கியில் மருத்துவர் வைத்து உள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அவரை மடக்கி பிடிக்க சென்றனர். காவல்துறை சாதாரண உடையில் இருந்ததால், என்ன நடக்கிறது என்று புரியாமல், அங்கித் திவாரி காரை படுவேகமாக மதுரை நோக்கி ஓட்டி சென்றார். உடனே, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கித் திவாரியின் காரை விரட்டிச்சென்றனர்.

சுமார் 15 கி.மீ சென்ற அங்கித் திவாரியின் கார் கொடைரோடு சுங்கச்சாவடி டிராபிக்கில் மாட்டி நின்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். காரில் இருந்த லஞ்சப்பணம் ரூ.20 லட்சம், அவரது கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அங்கித் திவாரியை கைது செய்து பின்னர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.