பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தேர்தலின்போதே முதல் 100 நாட்களுக்கு பல்வேறு திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றும். ஆ
கவே நீங்கள் இந்த அரசை பற்றி எடை போட 100 நாட்கள் போதுமானதாக இருக்கும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். ஏறக்குறைய இந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. அதில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.3 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக பாஜகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பாரதிய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.
இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் என்பது தங்கம், வெள்ளி, மர வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல கட்டிட தொழிலாளர், சைக்கிள் பழுதுபார்ப்பவர் என மொத்தம் 21 தொழில் செய்வோருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள், நிதி உதவி செய்யும் திட்டமாகும். இந்த திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தில் சாதி வந்து விடும். அதனால் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறுகிறார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன்.
நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 -ஆம் தேதி மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள்.
இது எல்லா விதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும். தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என எச்.ராஜா தெரிவித்தார்.