கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே காலத்தில் இறங்கிய முதலமைச்சர்..!

கோயம்புத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, கோயம்புத்தூர் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோயம்புத்தூர் தங்க நகைக்கடை சங்கம், தங்கபொன் சங்கம், கோயம்புத்தூர் பொற்கொல்லர் கவுன்சில், கோயம்புத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், சான்றளிக்கப்பட்ட பொற்கொல்லர் சங்கம்.

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை, சுவாமி விவேகானந்தா கலாச்சார சங்கம், டைமண்ட் இந்தியா, ராயல் பெங்கால் சங்கம், டி.எம்.கே. தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம். கோயம்புத்தூர் பொற்கொல்லர் சங்கம், தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம், கோவை மாவட்ட தங்கநகை கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய தங்க நகை தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும், பொற்கொல்லர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்திட உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் அவர்கள், தங்கநகை தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர், தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூட்டு குழுமத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா முதலமைச்சர் அவர்களிடம், பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், நம்பிக்கையுடன் இருங்கள், அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என தெரிவித்தார்.

கோயம்புத்தூர், தங்க நகை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு புகழ்பெற்றது மட்டுமல்லாமல் இக்கைவினை பொருட்களின் தனித்தன்மையின் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளில் அதிகம் விரும்பப்படுகிறது. இங்கு சுமார் 2,000 முறையான நகை தயாரிப்பு கூடங்கள் மற்றும் சுமார் 40,000 வீட்டிலேயே அமையப்பெற்ற நகை தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு, அவற்றின் வாயிலாக 1,50,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலான கூடங்கள் பாதுகாப்பின்மை, உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கான முறையான கடன் பெறுவதில் சிரமம், சோதனை வசதியின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

 

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாக பேருந்தை ஓட்டி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ASM என்ற தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. அந்த ASM என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஓட்டுநர் சுரேந்திரன் என்பவர் அன்று ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

திருப்பூர் அவிநாசி தேசிய நெடுந்சாலையில் பேருந்து செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது ஓட்டுநர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் பட்டு காயம் ஏற்பட்டது.

இதனை சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவரை பாராட்டி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், ஓட்டுநர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பேருந்தை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு முதல் பெண் நீதிபதி

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜசேகர் பதவி உயர்வு பெற்று சென்னை உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் டான்பிட் நீதி மன்ற நீதிபதி செந்தில்குமாருக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்திற்கு புதிய நீதிபதியாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஜி.விஜயா நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு 1880-ம் ஆண்டுகளில் இருந்து இதுவரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பெண் நீதிபதி ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை. தற்போது அந்த பெருமையை கோவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப் பட்டு உள்ள ஜி.விஜயா பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால்… சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் வலிவுறுத்தல்

கோயம்புத்தூர் ஆனைமலை அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் ஆனைமலை, கோட்டூர்,  மணக்கடவு, அம்பராம்பாளையம் வழியாக கேரளாவை சென்றடைகிறது. இதில் ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனைமலை ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.  இந்நிலையில் ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக உப்பாறும், ஆழியாரும் ஒன்று சேரும் இடத்தில் தினசரி 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது.

இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த தண்ணிரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையமும் பயன்பாட்டில் இல்லை. இதனால் கழிவுநீர் நீர் நேரிடையாகவே ஆற்றில் கலக்கிறது. எனவே அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உஷாரய்யா..! உஷார்..!! ஆன்லைன் மூலம் போலி பணி நியமன கடிதம் அனுப்பி ரூ.16¼ லட்சம் மோசடி..!

கோயம்புத்தூர் சாய்பாபாகோவில் அருேக கே.கே.புதூரை சேர்ந்த பி.இ. மெக்கானிக்கல் படித்து பிரித்திவ். இவர் கடந்த மே மாதம் முதல் வேலை தேடி வருகிறார். பிரித்திவ் செல்போனில் ஆன்லைனில் வேலை எதுவும் உள்ளதா? என்று பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தார். அதில் பிரபல முன்னணி நிறுவனங்களில் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. இதையடுத்து அவர் தனது விவரங்களை ஆன்லைனில் அனுப்பினார். விண்ணப்பித்த சில நாட்களில் அந்த ஆன்லைன் தளத்தில் இருந்து பிரித்திவின் மெயிலுக்கு ஒருவர் தகவல் அனுப்பினர்.

அதில் அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வேலை உள்ளது என தெரிவித்தார். இதனை நம்பிய பிரித்திவ் ஆன்லைன் வழியாக அவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் நேர்முகத்தேர்வு நடத்தினர். இதில் வெற்றி பெற்றதால் வேலைக்கு சேர்வதற்கான பணிநியமன கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவும், தபால் மூலமும் அனுப்பி உள்ளனா். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு ஆன்லைனில் சில நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து சில வேலைகள் உங்களுக்கு என்று கொடுக்கப்படும். அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். வேலைக்கு சேரும் முன்பு ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பயிற்சி, கார் நிறுவனத்தில் பணி என்பதால் உங்களுக்கு என்று தனியாக டூல்ஸ் வாங்க குறிப்பிட்ட தொகை உள்பட அனைத்துக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.

வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிய பிரித்திவ், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வாங்கி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக கடந்த 27-5-2023 முதல் 16-6-2023 வரை ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 277-ஐ அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பலமுறை மெயில் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரித்திவ் பணி நியமன கடித்தத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது தான் அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரித்திவ், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.

புற்றுநோயை குணப்படுத்தும் அரிய கண்டுபிடிப்பு.. சாதித்த பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்..!

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கின்றன. அது மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் இப்போது உள்ள புற்று நோய் மருந்துகள் அழிக்கின்றன. ஆனால் நாங்கள் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது.

இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன. முதற்கட்டமாக இந்த வெள்ளி நானோ துகள்கள் எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்து உள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த வெள்ளி நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.

உஷாரய்யா…! உஷார்…! தொடரும் ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடி …. 7½ லட்சம் இழந்த பெண்..!

கோயம்புத்தூர் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்த ஸ்ரீமுருகன், இவரது மனைவி பிரியாலட்சுமி சமீபத்தில் இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதில் இருந்த லிங்க்-ஐ கிளிக் செய்து பிரியாலட்சுமி தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டார்.

அவர் ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது எனவும், அந்த கம்பெனி இணையதளத்திற்கு சென்று ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்து கொடுத்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். திரிஷா கூறியதை நம்பிய பிரியாலட்சுமி ஆன்லைன் மூலம் அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார்.

இதையடுத்து அவருக்கு கமிஷனாக ரூ.1,500 கிடைத்தது. இதையடுத்து மீண்டும் பிரியாலட்சுமியை தொடர்பு கொண்ட, திரிஷா தாங்கள் கூறும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பிரியாலட்சுமி ரூ.10 ஆயிரம் முதலீடாக செலுத்தினார். இதற்கு பிரியாலட்சுமிக்கு ரூ.13,407 கமிஷனாக கிடைத்தது. மற்றொரு பணிக்கு ரூ.11,706 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து பிரீமியம் முறையில் பணம் செலுத்தினால் இதை விட அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என்று பிரியாலட்சுமிக்கு அந்த மர்ம பெண் திரிஷா ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய பிரியாலட்சுமி, பல்வேறு கட்டங்களாக திரிஷா கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரம் பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் பிரியாலட்சுமி கமிஷன் தொகை கிடைக்கவில்லை. மேலும் திரிஷாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாலட்சுமி இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜனதா தீர்மானம் கோயம்புத்தூரை தலைநகரமாக கொண்டு கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகர பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பஜனை கோவில் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களையும் இணைத்து  கொங்குநாடு என்கிற புதிய மாநிலத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும் கோவையை தலைநகராக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நிர்வாக ரீதியாக, கோயம்புத்தூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னைக்கு செல்ல வேண்டிய இடர்பாடுகள் குறையும்.

தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ, கொங்கு மண்டலத்தை அறிவிக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கொங்கு மண்டலத்தில் எளிதாக கிடைப்பதால் சென்னையை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை   வராது. சாலை வசதி, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் சிறப்பான முறையில் இருக்கிறது.

இதனால் தலைநகர் டெல்லி மற்றும், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பிற மாநில தலைநகரங்களுக்கு, விமானம் மூலம் நேரடியாக சென்று வரும் வாய்ப்பும், கோயம்புத்தூரில் இயல்பாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலம், “கொங்குநாடு” என்கிற பெயருடன் தனி மாநில அந்தஸ்துடன் உருவானால், இனி வரும் காலங்களில் இந்த மண்டலத்தின் வளர்ச்சி தனிச்சிறப்பு உடையதாக இருக்கும். எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவிட் -19 நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பு

கோயம்புத்தூர் ஹோப்காலேஜ் லட்சுமி புரத்தைச் சேர்ந்த ருக்மணி சித்ரா பகுதியில் உள்ள கண் மருத்துவமனை குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்ப அட்டை மூலம் முதலமைச்சர் அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக காந்தி வீதியில் உள்ள சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலை கடை எண் 91-க்கு சென்று கடந்த 16-ந் தேதி டோக்கன் பெற்றுள்ளார்.

பின்னர் கடைக்கு சென்று பணம் மற்றும் பொருட்களை கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர் மறுநாள் வருமாறு தெரிவித்துள்ளார். மறுநாளும் சென்றுள்ளார். இவ்வாறு 4 தினங்களாக கொடுக்காமல் கடை ஊழியர் இழுத்தடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு மூலம், ருக்மணி கூட்டுறவு பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டல் எதிரொலி கல்லூரி மாணவி தற்கொலை

கோயம்புத்தூர் சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான மாணவி. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியின் பெற்றோர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். வீட்டில் இருந்த மாணவி கடந்த ஜூன் 11ம் தேதி மாலை 4 மணியளவில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறை, வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியன.

மாணவியின் வீட்டருகே வசித்து வந்தவர் கேசவக்குமார். கல்லூரி மாணவனான இவரும் விஷம் அருந்திய மாணவியும் காதலித்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது மாணவியிடமிருந்து பணம் கேட்டு பெற்றிருக்கிறார் கேசவக்குமார். மேலும் ஒரு முறை மாணவியின் 2 சவரன் தங்க சங்கிலியையும் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும் மாணவியை மிரட்டி வீட்டிலிருந்து ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொடுக்கும் படியும் மிரட்டியுள்ளார்., இதனால் மாணவி, கேசவக்குமாரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவியை தொடர்ப்புக்கொண்ட கேசவக்குமார் பணம் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு விரக்தி அடைந்த மாணவி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சூழலில்தான் சிகிச்சை பலனின்றி மாணவி கடந்த ஞாயிற்று கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாணவன் கேசவக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறை தனிப்படை அமைத்து கேசவக்குமாரை தேடி வருகின்றனர்.