70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்பெறும் பல குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதலாக வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு டாப்-அப் செய்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 4.5 கோடி குடும்பங்களில் உள்ள ஆறு கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான மூத்த குடிமக்களுக்கு இதற்கென பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.