ராகுல் காந்தி: சாமானியர்கள் வாழ்வதற்கே போராட்டம்..! அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொடுக்கிறது..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.

அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார்.

மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.