பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை… அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.
நீட் தேர்வு விலக்கு குறித்து திமுகவின் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, நீட் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என வைகோ தெரிவித்தார்.
மேலும், வருமான வரித்துறை சோதனைகளுக்கு திமுக அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு, பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. திமுகவினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை என வைகோ தெரிவித்தார்.