தொல் திருமாவளவன்: நவம்பர் -01 தமிழர் இறையாண்மை நாள்!

நவம்பர் -01 தமிழர் இறையாண்மை நாள்! தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்; தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01-ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் ‘மாநிலம் உருவான நாளாக’ மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல.

தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே, இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான ‘உரிமை நிலமாக’ எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை “தமிழர் இறையாண்மை நாளாக” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01-ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல “மாநில நாளைக்” கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். “நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழர் இறையாண்மை நாள்’ என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும்.

தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா – அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உள்ளிட்ட நம்முடைய முன்னோர்களுடைய முடிவு. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக இந்திய ஒன்றிய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950 -களிலேயே துவங்கிவிட்டது.

1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற் சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23 ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது.1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்’ மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம், அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்துச் சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட ‘கனிமவளங்கள் சட்டம்’ மாநில அரசுகளின் பொருளாதாரத் தற்சார்புக்கு வேட்டுவைத்தது.

இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை ஒன்றிய அரசை ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சியாக இருந்த காரணத்தினால் ‘மாநில உரிமைகள்’ என்கிற பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையாக மட்மே முதலில் பார்க்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் ‘மாநில சுயாட்சி’ முழக்கம் தமிழ் நாட்டிலிருந்து வீறுகொண்டு எழுந்தது .

அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு ஒன்றிய அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது. தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரங்களைத் தம்வசம் குவித்துக்கொண்ட போக்கும்; மாநில இறையாண்மை குறித்து வலியுறுத்த வேண்டியதன் தேவையை அதிகரித்துள்ளன.

ஒரே நாடு, ஒரே மதம் , ஒரே மொழி என இதுவரைப் பேசிவந்த பாஜகவினர் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும்.

இந்நிலையில், இதுவரை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்! என தொல் திருமாவளவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்: திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நாடக அரசியல் அம்பலமாகிவிட்டது..!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்றார்.

மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.

மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி திமுக என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்பிக்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?

அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திமுக கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள்.

புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கருணாஸ்: “மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும்”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன்.

சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு மதுவுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஆனால் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி கட்சியையும், மத கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவையும் அழைத்து இருக்க வேண்டும்.

திருமாவளவன் உள்நோக்கத்துடன் மாநாட்டை நடத்துகிறார். அப்படி பார்த்தால் விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுவிலக்கு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்; பூரண மதுவிலக்கில் உடன்பாடு உள்ள அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் யாரும் விசிகவின் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு குறித்து துறைரீதியாக ஆலோசித்த பிறகே கருத்து கூற இயலும். மக்களிடம் தங்கள் கட்சியின் கோரிக்கையை கொண்டு செல்வதற்காக விசிக மாநாடு நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டால் அரசுக்கு பின்னடைவு அல்ல. மது விற்பனையை இந்த அரசு தொடங்கி அதற்காக மாநாடு நடந்தால்தான் பின்னடைவு. எந்த கட்சி வேண்டுமானாலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம்; அவை திமுகவை எதிர்ப்பதற்கு அல்ல.

கோரிக்கைக்காக மாநாட்டை நடத்தினால் அரசியலுடன் தொடர்புபடுத்தி கூறுவது தவறு. விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் முத்துசாமி பேசினார்.

ரவிக்குமார் கேள்வி: ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எக்ஸ் பக்கத்தில், EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கான உச்சநீதி மன்றத்தின் முதல் தாக்குதல். தற்போது உள் ஒதுக்கீடு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இட ஒதுக்கீட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தாக்குதல்.

அசோக் குமார் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘ ரிசர்வ் தொகுதிகளை நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 334 க்கு உகந்ததுதானா? ‘ என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்கப்போகும் தீர்ப்பு இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் இறுதித் தாக்குதலாக இருக்கப் போகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான பாஜகவின் திட்டத்தை முறியடிக்க புரட்சியாளர் வகுத்துத் தந்த பாதையில், தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.

EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு நடத்தியது. இப்போது உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்தும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. விசிகவின் போராட்டம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானது. இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயற்சிப்பவர்களின் தூண்டுதலில் விசிகவை எதிரியாகக் கட்டமைத்து அவதூறு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: விசிகவின் போராட்டம் உங்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானதும் தான் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விசிக தீர்மானம்: தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட கால நிர்ணயம்..!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில், கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஆளுர் ஷா நவாஸ், சிந்தனைச் செல்வன், பனையூர் மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி துணை பொதுச்செயலாளர்கள் ரஜினிகாந்த், வன்னியரசு, ஆதவ் அர்ஜுனா, எழில்கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசியக்கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் சமக்ரா சிக் ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படும் என மிரட்டல் அரசியல் செய்யும் பாஜக அரசுக்கு வன்மையான கண்டனம். நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் மூலம் தமிழக அரசின் அணுகுமுறை வழுவிச் செல்வதாக அச்சம் மேலிடுகிறது. சாதிய படுகொலையை கட்டுப்படுத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கும் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும். இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகவுன்சில் கூட்டத்தில், போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை இலங்கைஅரசு வெளியிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் போண்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசிக கொடிக் கம்பத்தை அகற்றல்..! ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ..!

நாகப்பட்டினம் அருகேயுள்ள காமேஸ்வரம் என்னுமிடத்தில் அண்மையில் விசிக கொடியேற்று விழா நடைபெற்றது. அனுமதியின்றி ஏற்றப்பட்டதென வருவாய்த்துறை அதிகாரி வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு அக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.

அங்கே பிற கட்சிக் கொடிக்கம்பங்கள் எப்படி நிறுவப்பட்டுள்ளனவோ அப்படியே விசிக கொடிக்கம்பமும் நிறுவப்பட்டது. ஆனால், ஒரு சில அதிகாரிகள் வன்மத்துடன் விசிக கொடிக்கம்பத்தை மட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இச்செயலைக் கண்டித்து இன்று சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

வீரமணி பேச்சு: “திருமாவளவன் மீது சிலருக்கு காதல் வந்திருக்கிறது..!

ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் நிகழ்வில், `வி.சி.க நடத்தும் மாநாடு` குறித்தான அறிவிப்பை வெளியிட்டதோடு, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் திருமாவளவன். அதோடு தி.க தலைவர் கி.வீரமணி, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகளும் கவனம்பெற்றிருக்கின்றன.

சென்னை காமராஜர் அரங்கத்தில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை வரை நடைபெற்ற நிகழ்வில் கவியரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. நாஞ்சில் சம்பத் தலைமையிலான பட்டிமன்றமும், கவிஞர் அப்துல் காதர் தலைமையிலான கவியரங்கமும் கவனம் ஈர்த்தன. நடிகர் ராஜ்கிரண், இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் “திருமாவளவன் மீது சிலருக்குத் தற்போது திடீர் அரசியல் காதல் வந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கும் திருமாவுக்கும் இடையேயானது கொள்கைப் பாசம். திருமாவுக்குக் கொள்கைப் பாலூட்டியது பெரியார் திடல்” என்றவர், தொடர்ந்து “தி.மு.க கூட்டணியைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. பல கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் திருமாவளவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கி.வீரமணி தெரிவித்தார்.

Rahul Gandhi: “Happy Birthday, @thiruma ji..! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்..!

ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.

மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமாவளவன் ஜி! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்.

நமது நாட்டின் பன்மைத்துவ மற்றும் கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதற்கும், நமது மக்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றிய நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.