தொல் திருமாவளவன்: விஜய் நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார்…!

விஜய் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஒரு ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், திருமாவளவன் மனது முழுக்க முழுக்க எங்களோடு தான் இருக்கும், என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது, என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஒரு ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.

விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமால் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு. இந்த விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு, தவெக தலைவர் விஜய் கூறுவது போல எந்த அழுத்தமும், காரணமும் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. தொடக்கத்திலேயே பதிப்பகத்தாரிடம் இதுகுறித்து விளக்கி கூறியிருக்கிறேன்.

விஜய்யும் நானும் ஒரே மேடையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிற சூழல் இருந்தால், இதைவைத்து அரசியல் செய்யக்கூடிய சிலர், அல்லது அதற்கான செயல் திட்டத்தை வகுத்துக் காத்துக்கொண்டிருக்கிற சிலர், திரிபுவாதம் செய்வதற்கும், திசை திருப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கு இடம் தரக்கூடாது என்ற அடிப்படையில் ஒரு தொலைநோக்குப் பார்வையோடுதான் இந்த முடிவை எடுப்பதாக விளக்கி கூறியிருந்தேன்.

விஜய் குறிப்பிடுவது போல திமுகவோ, அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளோ, எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்குப் பணிந்து, இணங்கி முடிவெடுக்க முடியாமல் தேங்கி நிற்கிற நிலையில் விசிகவும், நானும் இல்லை.” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

விஜய் வலியுறுத்தல்: பெண்கள் மீதான வன்முறைகள் தடுக்க ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்…!

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக தவைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கே.பி. முனுசாமி: தவெக தலைவர் விஜய் சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான தாக்குதல் என்பது கையாலாகாத செயலாகும். மலையை பார்த்து மோதும் சிறு துரும்புகள். காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது. உழைக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் உயர்வான இடத்துக்கு வரக்கூடிய சான்றுதான் அதிமுக.

இதற்கு உதாரணம் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி. ஒவ்வொரு துறைகளிலும் அரசு செயல்படவில்லை. இதனால், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குகின்றனர். மக்கள் திசை திரும்பாமல் செல்ல, தவறான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தாலும், கட்சியின் கவுரவத்தை நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்துக்கு எடுத்து களங்கம் ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்படிப்பட்டவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அதிமுக ஒருங்கிணையும் என்று அவர் சொல்வதாக குறித்த கேள்வி தேவையற்றது. இது முடிந்துபோன விஷயம். நடிகர் விஜய் கட்சியை தொடங்கி உள்ளார். அவர் தலைமையில், தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்று தெரிவித்துள்ளார். இத்தனை கொள்கைகளை பிரகடனப்படுத்தி உள்ளார். காலங்கள் மாறும்.

ஒரு நேரத்தில் ஒருவருக்கு ஒரு சிந்தனை ஏற்படும். நடைமுறையில் செல்லும்போது, அந்த சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும். அடுத்த சிந்தனை ஏற்படும். அப்படி வரும்போது அவருக்கு மனமாற்றம் ஏற்படும். அந்த மனமாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

திருமாவளவன் கேள்வி: விஜய் ‘ஆர்கானிக்னா..!? , விசிக என்ன இன்-ஆர்கானிக்கா ..?!

“விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா?” என தொல் திருமாவளவன் வேதியியல் முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு நடந்த விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அந்நிகழ்வில் தொல். திருமாவளவன் பேசுகையில், “ஒரு ஊரில் ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது.

அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு. அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றிவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள். இது அண்மைக் காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழலைச் சந்தித்து வருகிறோம். கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம்.

கொடி யுத்தம் என்கிற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுக்கலாம். நான் அடிக்கடி சொல்லுவேன், எனக்குப் பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னைப் பின்னால் கூறுவார்கள். அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள். இதுதான் இந்த மண்ணின் உளவியல் எனக்கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.

ஏன் திரும்பத் திரும்பத் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். நானாகவா சொல்கிறேன்? நீங்கள் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதால் தான் அந்த பதிலைக் கூறுகிறேன். திமுக விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட்னர் என்றால், நாங்கள் மைனர் பார்ட்னராக இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாகச் சென்று திமுகவிடம் டீல் பண்ணவில்லை, காங்கிரஸ் தனியாகச் சென்று கேட்கவில்லை.

நாங்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாக மாறும். திமுகவுக்காக சொல்லவில்லை, அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம். கொள்கை பிடிப்போடு இருக்கிறோம். அங்கே போனால் வளரலாமா, இங்கே போனால் வளரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது எங்களுக்கு தேவை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. கொள்கைப் பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. இது நமக்கு ஒரு பாடம். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு; அது திமுகவுக்கு கிடையாது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். நம் மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது.

ஆனால், 12 மணி… 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்துக் கிடக்கின்றனர். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் என யாரேனும் சொன்னார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது.

இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும்; இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம் நம்மை நோக்கி வரும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அதே விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..! எந்த திசையில் யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி..!

தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜயின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்து உரைத்து தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய் நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.

“எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, திமுகவுக்கே வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும்,” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: தவெக தலைவர் விஜய் முதலில் யோசிக்க வேண்டும்..!

தவெக தலைவர் விஜய் உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதலமைச்சர் கோயம்புத்தூர் வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: விஜய் இப்போது தான், மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார்…!?

விஜய் இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம்  என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, “அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னும் காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முனெடுத்துச் செல்லும் நிகழ்வுகளைப் பொறுத்தே எதையும் கூறமுடியும்.” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

விஜய் பாணியில் ஸ்டாலின் அட்டாக்: புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக அழியணும்னு நினைக்கிறாங்க..!

யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர் என விஜய் பாணியில் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள் என திமுக குறித்து கடும் விமர்சனங்களை விஜய் முன்வைத்டூ இருந்தார்.

மேலும் விஜய் பேசுகையில், பிளவுவாத அரசியல், ஊழல் மலிந்த அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்க்க போகிறோம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்படுவோம் என விஜய் பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தான் தங்களது அரசியல் எதிரி இவ்வாறு ஆளுங்கட்சியான திமுகவை தாக்கி விஜய் பேசியிருந்தார்.

விஜய் மாநாட்டில் பேசியது குறித்து அண்மையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை என நாசுக்காக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான்.

தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

கோவை சத்யன்: சீமான் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து மேடைக்கு மேடை உளறுகிறார்..!

நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு கோவை சத்யன் அளித்த பேட்டியில், எதை எடுத்தாலும் இதை நான் சொன்னேன்.. நான் சொன்னேன் என்கிறவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் எந்த சாதனையும் செய்யாமல், மக்கள் நலத் திட்டங்களையும் செய்யாமல் மற்ற கட்சியினர் செய்த அனைத்து சாதனைகளையும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி சுற்றக் கூடிய, வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கக் கூடிய யார் எனக் கேட்டீர்கள் எனில் சீமான் என சுற்றுகிறவர்தான். இன்னும் சொல்லப் போனால் சீமானின் தாத்தாதான், லார்டு மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கே அறிவுரை சொல்லி இந்தியாவுக்கே சுதந்திரம் கொடுத்ததாகவும் அடுத்ததாக சொல்வார்.

7 தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த சீமானின் எள்ளு தாத்தாதான் வேலுநாச்சியாரின் அப்பாவுக்கு பெண் குழந்தை பிறந்த போது, வேலுநாச்சியார் என பெயர் வைத்தது என்று கூட சொல்வார். இந்த அளவுக்குக் கட்டுக் கதைகளும் போலி கற்பனைகளையும் வெட்கமே இல்லாமல் இந்த அளவுக்கு அடுத்தவர் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவரது அரசியல் கட்டமைப்பு. இதுவரைக்கும் மக்கள் நலனுக்காக பேச்சாகவோ செயலாகவோ போராட்டமாகவோ அவர் அறிவித்த வரலாறு எதுவுமே இல்லை. ஊடகங்களில் அடுத்தவரை கேலி பேசுவதும் தரக்குறைவாக பேசுவதும் ஒரு பெரிய வீரர் போல மேடை நாடகத்தில் நடிப்பது போலவும் செய்வதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர் சீமான்.

குறிப்பாக இளைஞர்களை தூண்டிவிடக் கூடியவர் சீமான். வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பது உரிய குழுக்கள் அமைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த முன்னெடுப்பு. என்னென்ன தொழில்கள் இந்த பகுதியில் தொடங்க கூடாது என்பது வரை வரையறை செய்து, அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேளாண் பாதுகாப்பு மண்டலம் கிடையாது. இது எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த ஒன்று. இதற்கு கூட சீமான் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். ஆமைக்கறி போன்ற கட்டுக்கதைகளின் தொடர்ச்சிதான் இது. நடிகர் விஜய் கட்சியை தொடங்கி இருப்பதற்கு யார் பயப்படுகிறார்களோ இல்லையோ சீமான் அரண்டு நடுங்கி பயந்து போய் இருக்கிறார். ஏனெனில் அவரிடம் கட்டமைப்பே இல்லை. அவரிடம் இருப்பது எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள்தான். 13 ஆண்டுகளாக சீமானை நம்பி வீணாகப் போய்விட்டோம் என்று சொல்லி வெளியே வருகிறவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் எனவும் அறிவித்துவிட்டார். ஆகையால் முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான். நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் சீமான் என கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நல்லசாமி: யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய் அரசியல் புரிதல் இல்லை…!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு நல்லசாமி பதிலளித்தார். அப்போது, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், ஏன் உலகளவில் எந்த நாட்டிலும்கூட கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47-வது பிரிவில் கள் ஒரு உணவுப்பொருள் என்று சொல்லி இருக்கிறது. இதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி கள் இறக்கினால், மதுவிலக்குசட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்துக்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் நல்லசாமி பேசிகையில், கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் உரிய தயாரிப்புகளுடன் வாதாட வரட்டும். நியாயமான வாதங்களை வைத்து, வெற்றி பெற்று விட்டால், அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.

கள் என்பது போதைப் பொருள் அல்ல. நமது உணவின் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இதையொட்டி, 2025 ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் வெற்றி பெறும். தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய். அவருக்கு அரசியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லை என நல்லசாமி தெரிவித்தார்.