சென்னை உயர்நீதிமன்றம்: போக்சோ வழக்கில் கைதான மத போதகருக்கு நிபந்தனை ஜாமின்.. !

போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ். கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான் ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான் ஜெபராஜ் மீது கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் ஜான் ஜெபராஜ் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜான் ஜெபராஜை காவல்துறை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை என்பதால் தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று காவல்துறை ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது. இவ்வாறு ஜான் ஜெபராஜை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை ஜான் ஜெபராஜை கைது செய்தனர். அதன்பின்னர் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

ன்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மு.க . ஸ்டாலின்: கொடநாடு வழக்கிற்கும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என மு.க . ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் அரசு முறைபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.

மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதலளித்தார். அப்போது, உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என 2019 தேர்தலின்போது வாக்குறுதியாகவே சொன்னேன். யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.

சொன்னது போல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல், சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி என்று கூறினேன். இது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. அவர் சொல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்கு தான் ஆதரவு தெரிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித் ஷாவை சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் நான் சொல்லிதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், 10 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். தொடர்ந்து இதுபோன்ற பொய், பித்தலாட்டத்தை செல்வதே அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது அதற்கும் தானே காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? என பார்ப்போம் என   மு.க .  ஸ்டாலின் தெரிவித்தார்.

பொள்ளாச்சி வழக்கு: 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை… குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பாளையம் அருகில் பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 2019-ஆம் ஆண்டு மாணவிகள், இளம் பெண்களை என பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட சம்பவம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை CBI விசாரித்த நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணன் ஆகியோரின் ஐபோன் மற்றும் லேப்டாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த மாதம் விசாரணை முடிவடைந்த நிலையில், கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மூன்றாம் குற்றவாளியான சதீஷ் மற்றும் ஏழாவது குற்றவாளியான ஹேரன் பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நான்காவது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஆறாம் குற்றவாளியான பைக் பாபு, எட்டாம் குற்றவாளியான அருளானந்தம் மற்றும் ஒன்பதாம் குற்றவாளியான அருண் குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பதால், ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

H .ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!

சென்னை விமான நிலையத்தில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H .ராஜா அவர்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 7-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H .ராஜா, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் H .ராஜா அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேட்டி அளித்ததாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், H .ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சென்னை விமான நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.