நடிகர் விஜய்யால், தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது..!

“நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமை திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான பேராசிரியர் ராம.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு தொல்.திருமாவளவன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். திமுக பேருந்தில் பயணம் செய்யும் அவர், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார். இதுதான், 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் விடுத்துள்ள செய்தி. என்னை கவனமாக கையாளுங்கள், அதிமுக பக்கமும் நான் செல்வேன் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மாநாட்டுக்கு அழைத்ததுபோல் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைவிட்டால் எங்கே போவார்கள் என கூட்டணி கட்சிகளை திமுக நினைக்கிறது. திமுகவைவிட்டால் காங்கிரஸ் எங்கே செல்லும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை வெளியே போக வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்வது போல், எங்கே போவது? என தெரியாமல் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. உச்சத்தில் இருந்தவர் விஜயகாந்த். எதிர்கட்சி தலைவராக இருந்தவர். அவராலும் வெற்றி அடைய முடியவில்லை என ராம.சீனிவாசன் பேசினார்.

அந்த பக்கம் சு.வெங்கடேசனுக்கு ராம.சீனிவாசன் … இந்த பக்கம் பிடிஆருக்கு தமிழிசை..

சென்னை – திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும்.

இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.

மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர்.

திடீரென கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அமைச்சருக்கு கேக் ஊட்டியது அங்கிருந்தோரை புருவம் உயர்த்தச் செய்தது.

இதுமட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் பாஜகவின் ராம.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினர் கேக் ஊட்டிக்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.