Mallikarjun Kharge: ராகுல்காந்தி ஒருபோதும் இந்தியாவை அவமதிக்கவில்லை ..! பாஜகவுக்கு ஒரு சாக்கு தேவை..!

‘ராகுல்காந்தி ஒருபோதும் இந்தியாவை அவமதிக்கவில்லை, அவர் அவ்வாறு செய்யவும் மாட்டார் பிரச்னைகளை எழுப்ப பாஜகவுக்கு ஒரு சாக்கு தேவைஎன்று பாஜகவுக்கு மல்லிகார்ச்சுன் கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜக, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார்.

இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜகவின் தொடர் அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி அங்கு பேசியபோது இந்தியாவை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டிய பாஜகவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே அளித்த பதிலில்,’ ராகுல்காந்தி ஒருபோதும் இந்தியாவை அவமதித்ததில்லை, அவ்வாறு செய்யமாட்டார். இது எங்கள் வாக்குறுதி. ஆனால் இதுபோன்ற பிரச்னைகளை எழுப்ப பாஜகவுக்கு ஒரு சாக்கு தேவை’ என மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி குற்றச்சாட்டு: தலித் இளைஞர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவரை காவல் கண்காணிப்பாளர் பாதுகாக்கிறார்..!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியின் நசிராபாத் சிஸ்னி புவல்பூர் கிராமத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இரவு அர்ஜுன் பாசி என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை சிறைக்கு அனுப்பிய காவல்துறை, முக்கிய குற்றவாளியான விஷால் பிரதாப் சிங்கை இதுவரை பிடிக்க முடியாமல் போனதால், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட கிராம மக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவரும் ரேபரேலி எம்பியுமான ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, முடிதிருத்தும் தொழிலாளியான அர்ஜூனின் சகோதரருக்கு தர வேண்டிய பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தான் அர்ஜூன் கொல்லப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

ஒரு தலீத் கொல்லப்பட்டதால் இங்குள்ள மக்கள் நீதி கேட்கிறார்கள். அவரது முழு குடும்பமும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அர்ஜுன் கொலைக்கு மூளையாக செயல்பட்டவரை காவல் கண்காணிப்பாளர் பாதுகாக்கிறார். ஆனால் இதை நடக்க விடமாட்டோம். இந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை நாம் பின்வாங்க கூடாது” என ராகுல்காந்தி தெரிவித்தார்.

மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் ராகுல்காந்தி..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி யெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.

அதேபோல கடந்த 22ம் தேதி, பிரதமரிடம் விருதை ஒப்படைக்க டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், பிரதமரின் வீட்டு வாசலிலேயே அவர் விருதை வைத்துவிட்டு திரும்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக விரேந்திர சிங்கும் தனது விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார்.

இன்று, அவர் ஜஜ்ஜாரின் சாரா கிராமத்தில் உள்ள சகோதரர் வீரேந்திர ஆர்யாவின் அரங்கை அடைந்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், அவர்களின் குழந்தைகளை இந்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?

இவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேரடியானவர்கள், எளிமையானவர்கள், மூவர்ணக் கொடிக்கு சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல்காந்தி மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் பயிற்சி மேற்கொண்டார்.

அமைச்சர் சேகர்பாபு: பாவம் செய்ததை போக்க அண்ணாமலை நடைபயணம்…!

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தங்கசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் சுற்றுச்சூழல் பணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 40 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல்காந்தி நடை பயணம் செய்தது இந்தியாவை மீட்டெடுக்க.

அண்ணாமலை நடைபயணம் செய்வது அவரை முன்னிலைப்படுத்த தான். ஆட்சி மூலமும், கட்சி மூலமும் பல்வேறு நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. அண்ணாமலை நடைபயணம் பாவம் செய்ததற்காக நடத்தப்படுகிறது. திமுக எந்த பாவமும் செய்யாததால் நடை பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.