மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமா..!? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் சட்டசபையில் மீண்டும் ஒருமனதாக தீர்மானம்..!

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது தமிழ்நாடு மாவட்டங்களைச் சூழ்ந்தது. வங்க கடல் பகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவையும் அரபிக் கடல் பகுதியில், மாஹேவும் உள்ளன. நாடு விடுதலைக்குப் பின்னர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்டவை 1954-ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதன் பின்னர் மத்திய அரசின் கீழ் செயல்படும் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக புதுச்சேரியும் இடம் பெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் சில நாட்களாக மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய சட்டசபை சபாநாயகர் செல்வம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி சட்டசபையில் 12 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர், பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தும் கூட மாநில அந்தஸ்தைப் பெற முடியவில்லை. புதுச்சேரியில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசும் 2023-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் மத்திய அரசு திருப்பித்தான் அனுப்பியது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் தனிநபர் தீர்மானமாக தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அரசு தீர்மானமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.