பிரதமர் மோடி திறந்து வைத்து எட்டே மாதத்தில் சத்ரபதி சிவாஜி சிலை சுக்குநூறானது..!

இந்திய கடற்படை தின டிசம்பர் 4-ஆம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது.

கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது. இதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், திறக்கப்பட்டு எட்டே மாதத்தில் சிலை சேதமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி சிலை சேதமுற்று கீழே விழுந்த நிலையில், கள சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதம் பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

Sonia Gandhi: “நாட்டின் ஜனநாயகத்தை மோடி படிப்படியாக அழித்து வருகிறார்..! ”

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், சுதந்திர போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.

இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் படிப்படியாக அழித்து வருகிறார். இந்திய அரசமைப்பு சாசனத்தை மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணையச் செய்கின்றனர்.

மேலும் பேசுகையில், இது அநாகரிக அரசியல் ஆகும். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன் என சோனியா காந்தி பேசினார்.

சீமான் ஆவேசம்: குடுகுடுப்பைக்காரன் போல செயல்படுகிறார் மோடி…! சிலிப்பர் செல்லாக அண்ணாமலையை நான் தான் வைத்திருக்கிறேன்…!

மதுரை கோ.புதூர் பஸ்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும். புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், ஆகியவை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு கல்வெட்டு வைக்கவில்லை. இதற்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை.

நடிகர் திலகம் சிவாஜியையும் தாண்டி மோடி நடிக்கிறார். ஏமாந்து விடுவோம் என தப்பு கணக்கு போட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிலிப்பர் செல்லாக அண்ணாமலையை நான் தான் வைத்திருக்கிறேன். நாங்கள், முருகனைப் பற்றி பேசினால், அவர்களும் முருகனைப் பற்றி பேசுவார்கள். வேல் பற்றி பேசினால், அதையும் பேசுவார்கள். இது போல் அனைத்து விஷயங்களிலும் எங்களை பின்தொடர்ந்து அவர்கள் செயல்படுகின்றனர்.

நாட்டின் வளர்ச்சி என பேசும் மோடி ஒரு குடுகுடுப்பைக்காரன் போல் செயல்படுகிறார். அவர் சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி குடும்பத்திற்கும், அதானி குடும்பத்திற்கு மட்டுமே உள்ளது. அவர் கூறும் வார்த்தைகள் அனைத்தும் வெற்று வார்த்தைகள். திராவிட கட்சிகள் பங்காளிகள் தான். பாஜக தான் எங்களின் முதல் எதிரி. அவர்களை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரத்தி துரத்தி தோற்கடிக்க வேண்டும் என சீமான் பேசினார்.

நாங்கள் இந்தியர்கள் இல்லையா? மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் மவுனம்

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையேயான இம்மோதல் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோரை அகதிகளாக்கி இருக்கிறது. 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் மணிப்பூரில் நாள்தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங்கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் மணிப்பூர் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இம்பாலில் நேற்று பெண் வர்த்தகர்கள் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் போது Huirem Binodini Devi என்ற சமூக ஆர்வலர் கூறியதாவது: 2 மாதங்களுக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடருகிறது. ஆனால் மணிப்பூர் மக்களுக்காக மத்தியில் ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை.

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் இந்த மவுனம் எங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா போன்ற தலைவர்கள் இப்படி கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவது நாங்கள் இந்தியர்களே இல்லை என்ற உணர்வை உருவாக்குகிறது. மணிப்பூர் மக்களும் இந்திய குடிமக்கள்தான். எங்களுடைய உணர்வுகளை மத்திய அரசு கேட்க வேண்டும். இந்தியாவுடன் இணைவதற்கு முன்னர் மணிப்பூர் மக்கள் வாழ்ந்த அமைதி நிலை எங்களுக்கு வேண்டும் என தெரிவித்தனர்.