எஸ்.வி சேகர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்..!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஓட்டலில் கிளினிக்கல்ஸ் மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை விழிப்புணர்வு சிறப்பு கிளப்பை நடிகர் எஸ்.வி.சேகர் திறந்து வைத்தார். பின்னர் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த அதற்கான பிரத்யேக கால் சென்டர் என்னையும் நடிகர் எஸ்.வி.சேகர் அறிமுகம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எஸ்.வி.சேகர் பதிலளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதே சரி. தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்பதற்காகவும், சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று இந்தியில் தெரிவித்து விட்டு சென்றார்.

நாம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் 3 மாதத்தில் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் பாஜக அரசு உடனடியாக இந்தியை கற்றுக் கொள் என்று கூறுவதால் நாளை ஒருவருக்கு ஜப்பானில் வேலை கிடைத்தால் இந்தி மொழியை வைத்துக் கொண்டு ஜப்பானில் என்ன செய்ய முடியும்.

மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று பாஜாக சொன்னாலும், ஒரு ஒரு மொழி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஒரு ஆசிரியர் நியமிக்க முடியுமா? மத்திய அரசை யார் ஆண்டாளும் இந்தியை எப்படியாவது கொண்டு வர வேண்டும், ‘THINK GLOBAL ‘ ‘ ACT GLOBAL ‘ என்று சொல்லுவார்கள். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டுமே இருக்கிறது.

இந்தி வேண்டும் என்று யார் கேட்டார்கள். இந்தியை இலவசமாக சொல்லி தருவதை யாரும் தடுக்க வில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் எல்லா கொள்கைகளையும் அரசியலாக மாற்றப்படும் போது தான் எதிர்ப்பு வருகிறது. அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால் நிதி தர மாட்டேன் என்று சொல்வது நியாயமா? என எஸ்.வி சேகர் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை கிண்டல் கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தின் மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது..!

கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்று விட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது என அண்ணாமலை கிண்டல் அடித்தார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதேபோல் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும், கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்.. எப்படி ப்ரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் செட்டிங் செய்து வைத்து கொண்டு சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் பேசும் போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் தவெக தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழி.. விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்று விட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது என அண்ணாமலை தெரிவித்தார்.

தவெக விழாவில் #GetOut பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்..!

மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியிலுள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேடைக்கு அருகே மும்மொழி கொள்கையையும், மத்திய, மாநில அரசுகளையும் விமர்சிக்கும் வாசகங்களுடன் #GetOut கையெழுத்து பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அடுத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார். பின்னர் பேனாவை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்த போது அவர் தான் கையெழுத்திட மாட்டேன் என்று தலையாட்டி பேனாவை வாங்க மறுத்து விட்டார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா அந்த பேனரில் கையெழுத்திட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுகி. சிவம் கொந்தளிப்பு: நீ மட்டும் இரண்டு மொழி படிப்பாய்.. நான் 3 மொழி படிக்க வேண்டுமா..!

நீ மட்டும் இரண்டு மொழி படிப்பாய்.. நான் 3 மொழி படிக்க வேண்டுமா? நீ ஏன் ஆங்கிலம் கற்கவில்லை. உனக்கு வரவில்லை. உனக்கு பேச முடியவில்லை. உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறாய். எனக்கு இந்தியும் அந்நிய மொழிதான். எனக்கு அது என்ன சித்தி மொழியா? அதற்காக நான் இந்தி பேச வேண்டுமா? என ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம் இந்தி மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசி உள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழி கொள்கையை கொண்டு வர இந்த திட்டம் துடிப்பதால் இதற்கு எதிரியாக கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட மாட்டோம், என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார்.

இந்நிலையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசிய ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம், இப்போது சிலர் தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பித்து இருக்கிறார்கள். நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களை தடுத்துவிட்டனர். நாங்கள் இந்தி கற்றுக்கொண்டால் பெரிதாக சாதித்து இருப்போம். இதை செய்திருப்போம்.. அதை செய்திருப்போம்.. வானத்தில் போய் கொடி ஏற்றி இருப்போம்.. எங்களை ஏமாற்றி விட்டார்கள்.. எங்களின் 2 தலைமுறை பாதிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஏன் வடக்கில் உள்ளவர்கள் ஆங்கிலம் படிக்கவில்லை. தாய் மொழியை படியுங்கள்.. ஆங்கிலம் படியுங்கள். எல்லாரும் இதை படிக்கட்டும். நீ தாய் மொழியில் படித்துவிட்டு மேலே வருவாய்.. உனக்கு அது எளிது.. நான் உன் தாய் மொழியை கற்றுக்கொண்டு மேலே வர வேண்டுமா? நீ மட்டும் இரண்டு மொழி படிப்பாய்.. நான் 3 மொழி படிக்க வேண்டுமா? உனக்கு ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறாய். எனக்கு இந்தியும் அந்நிய மொழிதான். எனக்கு அது என்ன சித்தி மொழியா? நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை.

நாங்கள் இந்தி கற்றுக்கொண்டால் பெரிதாக சாதித்து இருப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நீ ஏன் ஆங்கிலம் கற்கவில்லை. உனக்கு வரவில்லை. உனக்கு பேச முடியவில்லை. அதற்காக நான் இந்தி பேச வேண்டுமா? எனக்கு படிக்க வேண்டும் என்றால் எந்த மொழி வேண்டுமானாலும் நான் படிப்பேன். எனக்கு கட்டாயம் ஆக்காதே.. உனக்கு ஆங்கிலம் வரவில்லை. வடக்கே அவர்கள் பேசுவதை கேளுங்கள். ஆங்கிலம் அவர்களால் பேச முடியாது. அதற்காக நான் இந்தி கற்றுக்கொண்டு பேச வேண்டுமா? என சுகி. சிவம் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.