மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு..!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட கோரி மாணவர்கள் போராட்டத்தை அடுத்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்கள் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்து அதன்விளைவாக 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில், எட்டு பேர் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமடைந்தனர்.

இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணிப்பூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Biren Singh: பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசியது தீவிரவாத செயல்..!

மணிப்பூரில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேற்கு இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்ரூக், சேஞ்சம் சிராங் ஆகிய பகுதிகளில் குகி கிளர்ச்சியாளர்கள் 2 ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி பொது மக்கள் நிறைந்த இடத்தில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். அந்த பெண்ணின் 12 வயது மகள், 2 காவலர்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் கொண்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால் கிளர்ச்சியாளர்கள் மீது எதிர்த் தாக்குதலில் ஈடுபட மாநில அரசு காவல்துறை தலைமையகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பிரேன் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், பொது மக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் ட்ரோன்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை வீசுவது தீவிரவாத செயலாகும். இத்தகைய கோழைத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவி மக்கள் மீது இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவதை மணிப்பூர் மாநில அரசு மிக தீவிரமாக அணுகும்.

இதுபோன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அரசு தக்க பதிலடி கொடுக்கும். அனைத்து விதமான வன்முறைகளை நாம் கைவிடுவோம். வெறுப்பு, பிளவு, பிரிவினைக்கு எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றுபடுவோம் என பிரேன் சிங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு காரணமாக வாக்காளர்கள் சிதறி ஓட்டம்..!

நாட்டின் பதினெட்டாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வரும் நிலையில்மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதற்காக நாடு முழுவதும் முதல்கட்டமாக 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் மணிப்பூரின் உள்பகுதிகளில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆவலுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, அங்கு நடந்திருக்கும் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் வாக்காளர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வைரலாகி வரும் வீடியோவில், துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் வாக்களர்கள் சிதறி ஓடுவது பதிவாகியுள்ளது.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில் அமைதி ஊர்வலம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும், மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகள் அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ திருச்சபைகள் ஐக்கியம் சார்பில் நேற்று மாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயத்தில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் மணிப்பூருக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

மக்களவையில் ராகுல் காந்தி: ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை… ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார்..!

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 12 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கினார். அவையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். “சபாநாயகர் அவர்களே, முதலில் மீண்டும் என்னை மக்களவையில் இணைத்துக் கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கிய ராகுல் காந்தி, “கடந்த முறை நான் பேசியபோது அதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம்.

உங்கள் மூத்த தலைவர்கள் வேதனை அடைந்திருக்கலாம். அந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப் போவதில்லை’ மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பாஜக நண்பர்கள் அச்சப்பட வேண்டிதில்லை. இன்று நான் எனது மனதில் இருந்து பேச விரும்புகிறேன். நான் அரசின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை. அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான எனது இந்திய ஒற்றுமை யாத்திரை இன்னும் முடியவில்லை.

நான் யாத்திரை சென்றபோது என்ன நோக்கத்துக்காக யாத்திரை செல்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். நான் அன்பைச் செலுத்துவதற்குத் தான் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். இதன் மூலம் நான், என் மனதில் இருந்து வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை நிறைத்து வைத்துள்ளேன். இந்த நடைபயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகள் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்.

நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் மாநிலம் என்பது இந்தியாவின் பகுதியாக இல்லை. மணிப்பூரை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்துள்ளீர்கள். இந்தியா என்பது நமது மக்களின் குரல். நீங்கள் மணிப்பூரில் அந்தக் குரலைக் கொலை செய்துள்ளீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள்; தேச பக்தர்கள் அல்ல!

என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். நீங்கள் என்னுடைய இன்னொரு அம்மாவை மணிப்பூரில் கொலை செய்தீர்கள். இந்திய ராணுவத்தால் ஒரேநாளில் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலைக் கேட்க நரேந்திர மோடி தயாராக இல்லை. இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை; மாறாக ராவணனின் ஆணவத்தால் எரிந்தது. ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை. ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார். நீங்கள் மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்று ராகுல் காந்தி பேசினார்.

மணிப்பூரில் உடைந்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி..!

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனமக்களிடையேயான வன்முறைகள் 3 மாதங்களாக தொடருகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்களது மீதான மைத்தேயி மக்களின் வன்முறைகளைத் தடுக்கவில்லை என்பது குக்கி இன மக்களின் அதிருப்தி. குக்கி இன மக்கள், மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்களுடன் நெருங்கிய தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். குக்கி இனமக்கள், இனி மைத்தேயி இனக்குழுவுடன் இணைந்து வாழ முடியாது என்பது வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது போல குக்கி இனக் குழுவினருகு தனி தன்னாட்சி கவுன்சில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

ஆனால் குக்கி மக்களுக்கு தனி தன்னாட்சி கவுன்சில் வழங்கினால் மிசோரம் மாநிலத்துடன் அப்பகுதிகளுடன் இணைந்துவிடும் என்கின்றனர் எதிர்பார்ப்பாளர்கள். மணிப்பூர் மாநில அரசியலில் இந்த பிரச்சனை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தி, கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இம்மாநில சட்டசபை கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது இது 37 ஆக குறைந்துள்ளது. மேலும் மணிப்பூரில் முதலமைச்சர் பைரேன் சிங் அரசுக்கான ஆதரவையும் இக்கூட்டணி வாபஸ் பெற்றுள்ளது. குக்கி எம்.எல்.ஏக்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். ஆனால் மைத்தேயி கட்சிகள் அமைப்பானது, குக்கி மக்கள் தன்னாட்சி கவுன்சில் கோரிக்கையைவிட வேண்டும்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவோம் என்கிறது. இதேபோல மணிப்பூர் மாநிலத்தின் நாகா இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு செல்ல மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநில அரசானது நாகா மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனிடையே மணிப்பூரில் வன்முறைகள் தொடர்பாக 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் கொள்ளையடித்து சென்ற 1,195 ஆயுதங்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்துக்கு 10 கம்பெனி மத்திய ஆயுதப் படை காவல்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கின்றனர்…!!

மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி இனத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்து, 160-க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த வன்முறை சம்பவங்கள் அங்கு இன்னும் நீடிக்கின்றன. இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றிய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கக் கோரி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே I.N.D.I.A. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 21 எம்பிக்கள், கடந்த வாரம் மணிப்பூர் சென்று நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து பேசினர். இந்நிலையில் மணிப்பூர் சென்ற அந்த எம்.பி.க்கள் குழு மற்றும் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் தற்போது உள்ள நிலவரம் குறித்தும் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் 5 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பேரணி…!

மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி இனத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்து, 160-க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த வன்முறை சம்பவங்கள் அங்கு இன்னும் நீடிக்கின்றன. இந்த வன்முறையால் மனமுடைந்த குகி இனத்தினர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு என தனி நிர்வாகம் வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மே மாதம் இந்த கோரிக்கையை அறிவித்தனர். எனினும் என்ன மாதிரியான நிர்வாகம் மற்றும் எந்தெந்த பகுதிகளுக்கு அது தேவை என்பன போன்ற வரையறைகள் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் குகி இனத்தினரின் இந்த கோரிக்கை மற்ற பிரிவினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து அவர்கள் ஏற்கனவே குரல் கொடுத்து இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக குகி இனத்தினரின் இந்த தனி நிர்வாக கோரிக்கைக்கு எதிராக நேற்று அவர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்த இந்த பேரணியில் 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர். இம்பால் மேற்கு மாவட்டத்தின் தங்மெய்பாண்டில் இருந்து கிழக்கு மாவட்டத்தின் ஹாப்டா வரை சென்ற இந்த பேரணியில் சமவெளி பகுதியை சேர்ந்த 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

குகி இனத்தினரின் கோரிக்கையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியிருந்த அவர்கள், தனி நிர்வாகத்துக்கு எதிராகவும், மியான்மரை சேர்ந்த சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். பேரணி முடிவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில் பேசிய அமைப்பு நிர்வாகிகள், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் முன்னாள் குகி பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள், கலவரம் தொடர்பாக விவாதிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதிக்குள் சிறப்பு சட்டசபை தொடர் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ராணுவ நடவடிக்கை இந்த பேரணியில் கலந்து கொண்ட சரத் என்பவர் கூறும்போது, ‘3 மாதங்களாக படுகொலை, தீ வைப்பு என வன்முறை சம்பவங்கள் நடந்தபிறகு எப்படி எங்கள் நிலத்தை விட்டு கொடுக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார். இந்த பிரமாண்ட பேரணியால் இம்பால் மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியை நேரில் மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே போய் பாருங்க

மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை மணிப்பூருக்கு செல்லுங்கள் என பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த வேண்டும்.  மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள் எரிகின்றன. ஆனால் நீங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மிசோரம், மணிப்பூர், நாகாலாந்தில் யாருடைய அரசு இருக்கிறது? இந்த மாநிலங்களில் உங்கள் அரசுதான் ஆட்சியில் உள்ளது.

ஆகையால் நீங்கள் இந்த மாநிலங்களுக்கு செல்லத்தான் வேண்டும். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. “இந்தியா” கூட்டணியின் குழு மணிப்பூர் செல்ல இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தை எதிர்கொள்வது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஜாதி, மத அடிப்படையில் மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதற்கு பாஜக சதி செய்திருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்கள் இந்த சட்டசபையில் அமர்ந்துள்ளனர். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார். மேலும் தாம் மணிப்பூர் மாநிலம் செல்வதற்கு அனுமதி கேட்டதாகவும் ஆனால் மணிப்பூர் மாநில நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். மணிப்பூருக்கு நாளை செல்லும் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் உட்பட 2 பேர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதலை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த மோதல் மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்.

அதனால் குக்கி இனத்தவரை தாக்குகிற மைத்தேயி மக்கள், மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற ஆயுத குழுவினர் கெடு விதித்தனர். இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்தனர். இதற்கு பதிலடியாக அஸ்ஸாம் மாநிலத்தைவிட்டு மிசோ மக்கள் வெளியேற மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன.

இதனால் நாடாளுமன்றம் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்கிறார். இதனிடயே பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பாக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பிரதமர் மோடியை மணிப்பூர் குறித்து பேசவைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதனையடுத்து இன்று லோக்சபா செயலகத்தில் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாத தேதியை லோக்சபா அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவு செய்யும் என தெரிய வருகிறது.