விஜயபாஸ்கர் அதிரடி: படுத்துக்கொண்டே ஆட்சியை பிடித்த கட்சி நம்ம கட்சி..! 4 வேட்டி, சட்டையை ரெடியா வெச்சிக்கோங்க

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயபாஸ்கர், அதிமுக காரங்க 4 வேட்டி, சட்டையை சலவைக்கு போட்டு ரெடியா வெச்சிக்கோங்க.. படுத்துக்கொண்டே ஆட்சியை பிடித்த கட்சி நம்ம கட்சி.. 2026-ல் நம்ம ஆட்சி தான்.

உச்ச நீதிமன்றம் அதிரடி: வாதங்கள் நிறைவடைந்த வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை..!

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து சாட்சியங்களையும் விசாரித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த சாந்தி என்பவரின் கணவர் கடந்த 2013-ஆம் ஆண்டு வடிவேல் என்பவரால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இதுதொடர்பான வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் கொலையை நேரில் பார்த்த இரண்டாவது சாட்சியாக சாந்தி சேர்க்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்திலும் நேரடியாகவே தனது சாட்சியை வழங்கி இருந்தார். பிறகு இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்து எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற சூழலில் சாந்தி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் புதியதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “வழக்கில் ஐந்து புதிய சாட்சியங்கள் இருப்பதாகவும், அவற்றை விசாரிக்க காவல்துறை தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் ஏற்க மறுத்து நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் புதிய சாட்சியங்களிடமும் வாக்குமூலங்களை பெற்று மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வடிவேல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணைகள் அனைத்தையும் முடித்த நிலையில் தீர்ப்பை கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “இதில் எந்த ஒரு வழக்கிலும் ஏற்கனவே வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து, சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்னும் பட்சத்தில் அதற்குப் பிறகு மீண்டும் புதியதாக சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் அனுமதி இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

எனவே இந்த விவகாரத்தில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவு ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள வழக்கை எட்டு வார காலத்திற்குள் விசாரித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்வும் தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி: காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை..!

தமிழகத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி தெரிவித்தார். புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் , 2019-20-ல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையை மாற்றத்தான், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றினோம்.

புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதாலேயே இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்த திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அப்போது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். எங்கள் ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்து எதுவும் வெளிப்படைத் தன்மையாக இல்லை. அதனால்தான், அனைத்து எதிர்க்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என பழனிசாமி பதிலளித்தார்.

ரூ50,000 லஞ்சம் வாங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு 2 ஆண்டு சிறை..!

மதுரையை சேர்ந்த ஜெயக்குமார் கடந்த 2009 முதல் 2011 வரை தூத்துக்குடி ரூரல் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது புதுக்கோட்டை தேரிரோட்டைச் சேர்ந்த, வெளிநாட்டில் வசித்து வந்த கிருபாகரன் சாம் என்பவருக்கு, புதுக்கோட்டையில் உள்ள நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கிருபாகரன் சாமிடம் ரூ 3. லட்சம் லஞ்சமாக கேட்டு, ரூ.50,000 16.12.2011 அன்று வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் விசாரித்து ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து என்பது குறிப்பிடத்தக்கது.

திருநாவுக்கரசர்: ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர் ..!

புதுக்கோட்டையில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 1989-ல் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்தும், திருநாவுக்கரசர் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வதாக பேசியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஜெயக்குமார் எந்த காலத்தில், அதிமுகவில் சேர்ந்தார்? எந்த காலத்தில் அதிமுகவில் இருந்தார்? என்று எனக்கு தெரியவில்லை. எம்ஜிஆரை எல்லாம் அவர் பார்த்திருக்கிறாரா? என்றும் எனக்கு நியாபகம் இல்லை. அவர் ஜெயலலிதாவிடம் எப்போது வந்து சேர்ந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, ஜெயலலிதாதான் எனக்கு நன்றிக்கடன் பட்டவரே தவிர, நான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவன் கிடையாது.

நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். நான் காப்பாற்றியதால் தானே மீண்டும் அவர் முதல்வரானார். நான் காப்பாற்றியதால் தானே, இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி சாப்பிட்டு சவுகரியமாக இருக்கின்றனர். அப்போது ஜெயலலிதா எனக்கு நன்றியாக இருக்கவேண்டுமா? நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்கவேண்டுமா?. ஜெயலலிதாவுக்கு நான் நிறைய செய்திருக்கிறேன்.

ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல்தான் செய்துள்ளார். அதுமுடிந்துபோன விஷயம். அவர் பாவம் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எனக்கும், ஜெயக்குமாருக்குமா பிரச்சினை? எனவே, அதிமுகவினர் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதாதான் என்னிடம் உண்டு உள்ளார். நான் அதிமுகவில் உண்ணவே இல்லை. உண்ணாமல் எப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும்?” என தெரிவித்தார்.

அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6-ம் நாள் பாத யாத்திரை, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிக்கு வந்தது. திருமயத்திற்கு காலை 9 மணிக்கு யாத்திரை வருவதாக இருந்தது. இதனால் கட்சி நிர்வாகிகள், கிராமப்புற பெண்களை 8 மணிக்கே வேன்களில் அழைத்து வந்தனர். பெண்களுக்கு யூனிபார்ம் சேலை வழங்கப்பட்ட நிலையில்,காரைக்குடியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அண்ணாமலை வழக்கம் போல 10.30 மணிக்கு வந்தார்.

அங்கு கடியாபட்டி விலக்கு ரோட்டில் இருந்து திருமயம் கோட்டை வழியாக திருமயம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று, பிரசார வாகனத்தில் இருந்தவாறு பேசினார். பின்னர் விராச்சிலை கிராமத்தில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் அண்ணாமலைக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வெயிலில் தாக்கத்தால் அங்கிருந்து காரில் கடியாப்பட்டியில் உள்ள உணவு விடுதியில் மதிய உணவு அருந்த சென்றார்.

பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை நடுநிலையாக நடத்த வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என தெரிவித்தார்.

ரூ.5 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது… மனைவி தலைமறைவு…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சங்கர் மற்றும் அவரது மனைவி மாதவி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாத ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர். அதில், களம்பூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை செலுத்தியுள்ளனர். முறையாக நடத்தாததால், பணம் செலுத்தியவர்களுக்கு உரிய காலத்தில் தொகையை வழங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பலரும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மாதவி சங்கர் தம்பதியர் தலைமறைவாகினர். பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள், திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை கடந்த மே மாதம் முற்றுகையிட்டு ரூ.5 கோடிக்கும் அதிகமான தொகையை சீட்டு நடத்தியவர்கள் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் சங்கர் தலைமறைவாக இருப்பது தெரியவர, திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நேற்று அதிகாலை சங்கரை கைது செய்தனர். மேலும் அவரது மனைவி மாதவியை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மனநல காப்பகத்தை கண்டு அதிர்ந்து போன சுகாதாரத்துறை அமைச்சர்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அன்னவாசல் அரசு மருத்துவமனைக்குள் திடீரென அதே வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்திற்குள் சென்றார். அங்கு 4 சிறிய அறைகளில் 59 பெண்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் சுகாதாரமற்ற சூழலும், சரியான உணவு வழங்காத நிலையும், அவர்களுக்கு படுக்கைகள் கட்டில் போன்ற வசதிகள் இல்லாமல் தரையில் படுத்து தூங்கும் அவல நிலையும் இருக்கிறது. ஒரு அறையில் ஆடு, மாடுகளை போல 15 பேர் 20 பேர் அடைத்து வகைகப்பட்டு இருந்தனர்.

பெண் காப்பாளர் பூட்டைத் திறந்துவிட உள்ளே சென்றவரைக் காப்பகத்தில் சிகிச்சையில் இருந்த பெண்கள் வணக்கம் சார் என்று அமைச்சரை அன்போடு வரவேற்றதைப் பார்த்து நெகிழ்ந்த அமைச்சர், “நீங்க எல்லாம் எந்த ஊரு…” என்று கேட்க, அவர்களின் சொந்த ஊர்களைச் சொன்னார்கள். “எவ்வளவு நாளா இருக்கீங்க…” என்று விசாரித்தவரிடம், 2 வருடம் 3 வருடம் என்று சொன்னார்கள். பெண்கள் இருந்த அறை லைட்கள் எரியவில்லை. “ஏன் இன்னும் லைட் போடல” என்றார்.

“இவங்க எல்லாரும் தரையில தான் படுக்கணுமா? பெட் இல்லயா? உங்க வீட்டு பெண்களை இப்படி வச்சிருப்பீங்களா?” என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபோது பெண் காப்பாளருக்கு ஏதும் சொல்ல முடியவில்லை.“எல்லாரும் சாப்டீங்களா… என்ன சாப்பாடு கொடுப்பாங்க” என்று கேட்க, ‘தினமும் ரசமும் சோறும் தருவாங்க” என்றபோது முகம் இருண்டவர், “வேற தொட்டுக்க கூட்டு பொரியல் தரமாட்டாங்களா?” ‘இல்ல ரசம் சோறு தான்’ என்று மீண்டும் சொன்னார்கள்.

“கிச்சன் எங்கே இருக்கு” என்றபோது, பூட்டை திறந்து விட்ட சுத்தம், சுகாதாரம் இல்லாத சமையலறையைப் பார்த்து அமைச்சருக்கு முகம் மாறியது. “யாரு இங்கே டி.டி? காப்பகத்தில் மனித உரிமை மீறல் நடக்குது. இதை டிடியும் கண்டுக்கல டாக்டரும் கண்டுக்கல. தினமும் ரசம் சோறு மட்டும், படுக்கிறது தரையில… உடனே கீழ்பாக்கம் ஃபோன் பண்ணி அந்த அதிகாரிய வந்து பார்க்கச் சொல்லுங்க தொண்டு நிறுவன ஒப்பந்தத்தை கேன்சல் பண்ணச் சொல்லுங்க” என்றார். கீழ்பாக்கத்திலிருந்து உடனே வரச் சொல்லுங்க… வந்து எல்லாத்தையும் சரி பண்ணச் சொல்லுங்க. ஒரு வாரத்தில் மறுபடியும் வருவேன்.” என்று பேசி முடித்தார்.

மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை..! கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்…!

தமிழக அரசு மகளிர் திட்டம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட அலுவலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மகளிர் திட்ட இயக்குனராக ரேவதி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திட்டத்திற்கு பயனாளிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன், காவல் ஆய்வாளர் பீட்டர் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக நேற்று மாலை 4 மணிக்கு மகளிர் திட்ட அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி அறையில் இருந்து ரூ.2 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து கைப்பற்றினர். இந்த பணத்திற்கான ஆவணங்களை அவர் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தை எடுத்து சென்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம்: அண்ணாமலைக்கு ஒன்னுமே தெரியாது..!

புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் தனது பேரப் பிள்ளைகளுக்கு காது குத்து விழா வைத்து மொய் விருந்தளித்தார். இந்த பிரம்மாண்டமான மொய் விருந்து மூலம் சுமார் 11 கோடி ரூபாய் வசூல் ஆனதாக அப்பகுதியில் பேசுபொருளாக இருப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய் வசூல் ஆனது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், காதுகுத்தபட்டதா திமுக எம்எல்ஏ பேரப்பிள்ளைகளுக்கும், வருமானவரித்துறையினருக்கும் என்ற தலைப்பில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.மேலும், மொய் விருந்து என்பது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி என்றும் விமர்சித்திருந்தார்.

பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் நடத்திய மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என திமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,”பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய் விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார். அவர் சொல்வது தவறு, வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது” என கூறியுள்ளார்.