ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்: கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா? களத்தில் பார்த்துடலாமா?

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?

பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.

கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?

234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.

பழ.நெடுமாறன்: பெரியாரின் கொள்கையான சாதி ஒழிப்பினை செயல்படுத்தியவர் பிரபாகரன்..!

பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு, விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார் என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், உலக தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடியவர்.

அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுத பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

2009-ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன.

பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளை செயல்படுத்திய பேரன் பிரபாகரனை சந்தித்து பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், பெரியாரைப் பற்றியோ, பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாத போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவு சமதர்ம பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் புகார்: சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட போலியான Photo-வை வைத்து, ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்றுப் பிழைப்பு நடத்தி வருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அஜித்குமார் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் அஜித்குமார் காவல்துறை இயக்குநர் மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர், ஆகியோருக்கு ஆன்லைன் மற்றும் பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ள புகார் மனுவில், இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளம்பி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழ் இனத்தின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என சினிமா இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக திரு. பிரபாகரன் அவர்களின் பெயரை கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார். பிரபாகரன் அவர்களின் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆக பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த புகைப்பட மோசடி மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். ஆகவே சமூகம் அவர்கள் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் திரளநிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சைமன் என்கின்ற சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அந்த போலியான புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் என்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வழக்கறிஞர் அஜித்குமார் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.