நான் உங்களிடம் வாக்குகள் கேட்கப்போவதில்லை. மாறாக, நான் உங்களுக்கு வறுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லப் போகிறேன் என ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹாரின் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நான் பிஹார் முழுவதும் சுற்றி வருகிறேன். இதில் இரண்டு வருடம் நடைபயணமாக சென்றதும் அடங்கும். நான் 5,000 கிராமங்களை நடந்தே சென்று அடைந்திருக்கிறேன். நான் யாரிடமும் வாக்குகள் கேட்கவில்லை.ஏன்?
ஒவ்வொரு 1 – 2 ஆண்டுகளில் சிலர் உங்களிடம் வந்து வாக்குகள் கேட்கின்றனர். உங்களிடம் வாக்கு கேட்க வருபவர்கள், நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தால், உங்களின் அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். நீங்களும் தொடர்ந்து அவர்களுக்கு வாக்களிக்கிறீர்கள்.
நாம் 40 -50 ஆண்டுகளாக காங்கிரஸை வெற்றி பெற வைத்தோம், பின்பு நாம் லாலு பிரசாத் யாதவை அரசனாக்கினோம். பின்பு கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமாரை அந்த நாற்காலியில் அமரவைத்து இருக்கிறோம். மத்தியில் பிரதமர் மோடியை நாம் வெற்றி பெற வைத்தோம். ஆனால் உங்களின், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக மாறவில்லை.
இப்போது நான் இங்கே வந்திருக்கிறான். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் எனக்கு வாக்களிக்கலாம். ஆனால், நானும் வெற்றி பெற்று உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம். முந்தைய தலைவர்கள் இனிமையாக பேசக்கூடியவர்கள். முன்பு இனிமையாகப் பேசியவர்கள், வெற்றி பெற்ற பின்பு உங்களைப் பற்றி யோசிக்கவே இல்லை. பிரசாந்த் கிஷோரும் மற்றவர்களைப் போல உங்களை ஏமாற்றலாம்.
அதனால் நான் உங்களிடம் வாக்குகள் கேட்கப்போவதில்லை. மாறாக, நான் உங்களுக்கு வறுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லப் போகிறேன். அதை நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் விரும்பும் யாருக்கும் வாக்களிக்கலாம். ஆனால் நாங்கள் சொல்லும் வழியில் நீங்கள் வாக்களித்தால், உங்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிஹாரிலேயே சாத்தியமாகும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.