Palanivel Thiaga Rajan: தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள்அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள் இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம்இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது” இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது “எக்ஸ்” பக்கத்தில், பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவின் தேர்தல் அத்துமீறல்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்ந்தும் விதமாக “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.

அந்த பக்கம் சு.வெங்கடேசனுக்கு ராம.சீனிவாசன் … இந்த பக்கம் பிடிஆருக்கு தமிழிசை..

சென்னை – திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும்.

இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.

மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர்.

திடீரென கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அமைச்சருக்கு கேக் ஊட்டியது அங்கிருந்தோரை புருவம் உயர்த்தச் செய்தது.

இதுமட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் பாஜகவின் ராம.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினர் கேக் ஊட்டிக்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

அண்ணாமலை பொய் மூட்டை…! அண்ணாமலைக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது பிடிஆர்!

சென்னையில் அண்மையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக எதிர்த்தார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, அதிமுக, திராவிட இயக்கத்தினர் என பலரும் அண்ணாமலை சொன்ன விஷயம் பொய் எனக் கூறினர். அண்ணா பற்றி தவறாகப் பேசியதற்காக அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். முடிவில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தி இந்து ஆங்கில நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதியிட்ட நாளிதழ்கள் என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார். அன்றுதான் அண்ணா பேசினார். அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” எனத் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு தி இந்து, தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள் அண்ணாமலை குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி நடந்தது தொடர்பான செய்திகளை வெளியிட்டு, அண்ணா மன்னிப்பு கேட்டதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் தான் ஆதாரத்துடன் தான் பேசுவதாகவும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அண்ணாமலை கூறி வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அண்ணாமலையின் பேச்சுகளுக்கு பதில் அளித்தார், “எனது தாத்தா மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா எங்கள் கட்சியைத் தொடங்கியவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். தேவர் ஐயா ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருந்தவர், மிகவும் புலமை வாய்ந்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகவும் புலமை வாய்ந்தவர். இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை, அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை சொல்லும் அவதூறு கருத்துகளை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர்.

1956-ல் நடந்தது என சொல்லி, எங்கேயோ படித்தேன் என சொல்லி அதற்கு எந்த ஆதாரமும் கொண்டு வராமல் ஏதோ ஒரு கருத்தை முன் வைக்கிறார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லக்கூடாது. யாரிடம் என்ன கருத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு எதற்கு பதில் சொல்ல வேண்டும் கூடாது என்பதை சிந்திக்க வேண்டும். அண்ணாமலை போன்றவர்களின் பொய்யான கருத்து ஜனநாயகத்திற்கே கேடு.

எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என சிந்திப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. இந்த மாதிரியான கருத்துகளுக்கு சாதாரண நபர்கள் பதில் பேசவே கூடாது. நாம் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஒருவர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அவர் பாட்டுக்கு பொய் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.