அன்புமணி ராமதாஸ்: ‘ஆபரேஷன் சிந்தூர்’.. முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்போம்..!

ஜம்மு- காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்போம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22- ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய கப்பல் படை அதிகாரி உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதை அடுத்து ராணுவம், காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒருவேளை போர் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த போர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட தயாராக இருந்தன.

இதற்கிடையே, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. சிந்தூர் என்றால் தாலி கட்டிய பின் பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்று அர்த்தம். பஹல்காம் தாக்குதலில் பல இளம் பெண்கள் தங்கள் துணையை இழந்த நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தியாவின் ஆபரேஷனுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக காஷ்மீர் தாக்குதலை தொடர்புடைய ஜெய்ஸ் – இ – முகமது தலைமையகம் உள்ளிட்ட முக்கிய தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ,” நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன்: இசைவாணி பிரச்சினை அதானி விவகாரத்தை திசை திருப்ப..!

அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் அப்படி இல்லை எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை என மத்திய பாஜக அரசு மறுதலித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடரில் அதானி பிரச்சினை, உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சினை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. பாஜகவால் கொண்டு வரப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடிக்க முயற்சிப்போம். இதற்கான செயல்திட்டங்களை இண்டியா கூட்டணி கட்சியினர் வரையறுப்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் இடையேயான விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அரசு அதை பார்த்துக் கொள்ளும். மதத்தையோ, மத உணர்வையோ காயப்படுத்தும் நோக்கில் இசைவாணி பாடவில்லை. அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இது ஏற்புடையதல்ல. இசைவாணியை கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது கண்டனத்துக்குரியது” என திருமாவளவன் தெரிவித்தார்.

பாமகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேருந்து கண்ணாடி உடைப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்தனர். ஆனால் காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமக நிர்வாகிகளிடம் கூறினர்.

ஆனாலும் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சேகர்பாபு விளக்கம்: மன்னிப்பா… மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை..!

மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

முதலமைச்சரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சேகர்பாபு பதிலளித்தார். அப்போது, எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?. கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதலமைச்சர் கன்னியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர்.

கன்னியக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதலமைச்சருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் தவறு எதுவும் இல்லை என சேகர்பாபு தெரிவித்தார்.

பாமக, விசிக கொடிக்கம்ப பீடங்களை உடைத்த பெண்..! எங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை..!

எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை’ என விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை ஆவேசமாக உடைத்த பெண்மணி. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் இருந்து மஞ்சக்கொல்லை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த அவர், ஓரமாக சென்று மது அருந்துமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார். இதில் இளைஞர்களுக்கும் செல்லதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்லதுரை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் உடையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை புவனகிரி காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் – புவனகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள நபர்களையும் கைது செய்வதாக உறுதி அளித்தது இத்தனை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி அருட்செல்வி என்பவர் நேற்று முன்தினம் ஆத்திரத்துடன் கடப்பாறையால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தினார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கடப்பாரையை பிடுங்கி அருகே இருந்த வாய்க்காலில் வீசினர்.

ஆனால், அருட்செல்வி அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்ப பீடத்தை மற்றொரு இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதோடு, ‘‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது, எங்கள் ஊருக்கு எந்த கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை, நாங்கள் இந்த ஊரில் அமைதியாக வாழ வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தீட்சிதர்களால் VCK நிர்வாகி தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!

நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

அன்புமணி ராமதாஸ் அதிரடி: “சமூக நீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை..!”

“உள்ளாட்சிகளில் சமூக நீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூக நீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றி வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினரான பூங்கோதை சசிகுமார், அதே ஒன்றியத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் திமுக ஒன்றியச் செயலாளர் மாரிவண்ணமுத்து என்பவரால் தமக்கு இழைக்கப்படும் சாதி ரீதியான அடக்குமுறைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருக்கிறார் என்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பூங்கோதைக்கு முறையான நாற்காலி, மேசை கூட வழங்கப்படவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே அவர் பதவி விலகியிருப்பதாகவும் அவரது கணவர் சசிக்குமார் கூறியிருக்கிறார். சாதிய வன்கொடுமைகள் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவி விலகும் நிலை உருவாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சாதிய அவமதிப்புகளால் பூங்கோதை சசிக்குமார் பதவி விலகுவது இது முதல்முறையல்ல. 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பொறுப்பேற்ற அவர், அடுத்த ஆண்டே சாதிய அவமதிப்புகளைத் தாங்க முடியாமல் பதவி விலக முன்வந்தார். கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் அப்போது அவர் பதவியில் நீடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அதன்பிறகும் சாதியக் கொடுமைகள் நீடித்ததால் இப்போது பதவி விலகியிருக்கிறார்.

பூங்கோதைக்கு திமுக ஒன்றியச் செயலாளரால் இழைக்கப்படும் சாதிய அடக்குமுறைகள் மற்றும் அவமதிப்புகள் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் முறையீடு செய்யப்பட்டதாகவும், ஆனால், எந்தப் பயனும் இல்லை என்றும் சசிகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக ஒன்றியப் பெருந்தலைவர் ஒருவருக்கு, அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஒருவரால் இழைக்கப்படும் சமூக அநீதியை சரி செய்ய முடியாத திமுக, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் எவ்வாறு சமூகநீதி வழங்கப் போகிறது?

தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பான்மையான உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை . அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் கூட, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆனாங்கூர் ஊராட்சியின் தலைவராக இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், சாதி ரீதியாக அவமதிக்கப்படுவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்.

அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றால், நானே அவரை அழைத்துச் சென்று ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமர வைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்த பிறகு தான் அவருக்கு இப்போது இருக்கையும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக திமுகவால் வழங்க முடியாத சமூகநீதியை பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் பாமக தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சிகளில் சமூக நீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்,” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு..! அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் மனு..!

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும் குப்பூர் ஊராட்சி களைச் சேர்ந்த மக்கள், தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஏழை, எளிய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட் டோர் எங்கள் பகுதி ஊராட்சிகளில் அதிகம் வசிக்கின்றனர்.

தினமும் கிடைக்கும் வருமானத்தின் மூலமே இந்த குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தச்சூழலில், குப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தன் கொட்டாய் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டனர். அதற்கு கிராம மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கடத்தூர் பகுதியில் இயங்கும் கடைக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கடையை சித்தன் கொட்டாய் பகுதிக்கு இடம் மாற்ற தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பல குடும்பங்களின் வாழ்வு சீரழியும். எனவே, குப்பூர் பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss: பெரியார் சமூகநீதிக்கான அடையாள சின்னம்…! சமூகநீதிக்கான அநீதிகளை திமுக செய்கிறது…!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக் கொண்டுள்ளனர்.

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.

பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை. 1987-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான்.

கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர் கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்எல்ஏக்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்எல்ஏக்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்ய வேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்: திருமாவளவன் அவதூறு செய்து வருகிறார்..! விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்…!

திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக. சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பாமக. இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். மேலும் மது ஒழிப்பு எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை ஆகும்.

மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்கேஜி வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமக-வை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.

பாமக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும், இந்திய அளவில் 90,000 மது கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்காக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கும் அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? இந்த இரண்டு திமுக எம்.பி-களும் தமிழக அரசின் மதுக்கடைகளுக்கு 40 சதவிகிதம் மது சப்ளை செய்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.