லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதலை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த மோதல் மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்.

அதனால் குக்கி இனத்தவரை தாக்குகிற மைத்தேயி மக்கள், மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற ஆயுத குழுவினர் கெடு விதித்தனர். இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்தனர். இதற்கு பதிலடியாக அஸ்ஸாம் மாநிலத்தைவிட்டு மிசோ மக்கள் வெளியேற மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன.

இதனால் நாடாளுமன்றம் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்கிறார். இதனிடயே பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பாக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பிரதமர் மோடியை மணிப்பூர் குறித்து பேசவைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதனையடுத்து இன்று லோக்சபா செயலகத்தில் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாத தேதியை லோக்சபா அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவு செய்யும் என தெரிய வருகிறது.

மாமூல் கேட்ட பாஜக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் ஜான்பாய் என்பவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து, அதில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றும் வேலையை அப்துல் காதர் மற்றும் அவரது மகன் முகம்மது பாசில் ஆகியோர் ரவிக்குமார் என்பவர் மூலம் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாஜகவை சேர்ந்த 76-வது வார்டு வட்டத் தலைவர் ஜனார்த்தன குமார், திருவிக நகர் தொகுதி பொதுச் செயலாளர் தேவராஜ் மற்றும் திருவிக நகர் தொகுதி கிழக்கு மண்டலத் தலைவர் முரளி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து, கட்டிடக் கழிவுகளை எடுக்கும் முகமது பாசிலிடம், எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

உடனே முகம்மது பாசில் செல்போன் மூலம் அவரது தந்தை அப்துல் காதரை தொடர்பு கொண்டு ஜனார்த்தன குமாரிடம் செல்போனை கொடுத்து தனது தந்தையிடம் அவர் பேச வைத்துள்ளார். அவர் நாளை காலை 8 மணிக்கு வாருங்கள் நேரில் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்டிடக் கழிவுகளை எடுக்க விடாமல் தொடர்ந்து ஜனார்த்தனகுமார் மற்றும் அவருடன் வந்த தேவராஜ், முரளி ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜனார்த்தனகுமாரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையிலான காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மாமூல் கேட்டது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இந்நிலையில் திடீரென ஜனார்த்தன குமார் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பொக்லைன் இயந்திரத்தின் ஹெட்லைட்டை அடித்து நொறுக்கி விட்டு சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சந்தோஷ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான காவல்துறை, மாமூல் கேட்டு நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட ஜனார்த்தனகுமார், தேவராஜ், முரளி ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

மணிப்பூரில் மற்றொரு பயங்கரம்: “மகள் உயிரோட வேண்டுமா! பிணமா வேண்டுமா..”

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் நடக்கும் இனக் கலவரத்தில் மட்டும் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். அங்குப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த தகவல்கள் உறைய வைக்கிறது.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துவரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதே நாளில் (மே 5) தான் இந்த கொடூரமும் நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 90 கிமீ தொலைவில் தான் இது அரங்கேறியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை எந்த ஒரு நபரையும் கைது செய்யவில்லை..

மணிப்பூரில் இன வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த மே 5-ம் தேதி மாலை கார் வாஷிங் கடையில் வைத்து கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களில் ஒருவரது குடும்பத்தினர் தான் இவர்கள். அன்றைய தினம் கார் வாஷிங் கடையைச் சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த இந்த இரு பெண்களையும் ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்..

அந்த வன்முறை கும்பலில் இருந்த பெண்களே.. அந்த பெண்களைப் பலாத்காரம் செய்யச் சொன்னது தான் அதிர்ச்சி, அவர்கள் கத்தி, விட்டுவிடும்படி கெஞ்சிய போதிலும் அந்த கும்பல் அதற்குச் செவி கொடுக்கவில்லை. அவர்களின் உடல் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மணிப்பூரில் உள்ள ஒரு பழங்குடிப் பெண் தன் மகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஃபோன் செய்துள்ளார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல்கள் தான் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது மறுமுனையில் போனை எடுத்துப் பேசிய அப்போது மறுமுனையில், வேறு ஒரு பெண் தான் எடுத்தார். ‘உன் மகள் உனக்கு உயிருடன் உயிருடன் வேண்டுமா… இல்லை பிணமாக வேண்டுமா… எனக் கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவரது மகள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. இம்பாலில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர்களில் இவரது மகளின் ரத்தம் இன்னுமே இருக்கிறது. இனக் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய குற்றங்கள் குறித்த தகவல்கள் இப்போது பகீர் கிளப்பி வருகிறது.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம்: போலீஸ் கஸ்டடியை மீறி அட்டூழியம்!

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முதலமைச்சர் பீரன் சிங் ஆட்சி செய்து வருகிறார். இந்த மாநிலத்தில் குக்கி எனும் பழங்குடி மக்களும், மைத்தேயி பிரிவு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை இருந்து கடந்த மே மாதம் 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டு, வன்முறையாக உருமாறியது. அன்று முதல் கடந்த இரண்டரை மாதமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதனால் ஏராளமானவர்கள் பலியான நிலையில் நிறையபேர் வீடுகளை இழந்து தவிக்க தொடங்கினர். தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140-க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர்.

இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. மேலும் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் பவானி என்பவருக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. நிறுவனம் நடத்துவதாக கூறி முதியவர் பவானி வீட்டை பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு பின் வாடகையை சரியாக தராததால் முதியவர் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார். நேரில் சென்று பார்த்ததில் சிவா அரவிந்தன், 2 பேருக்கு தலா ரூ.8 லட்சத்துக்கு பவானி வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

மோசடி குறித்து முதியவர் பவானி அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து காவல்துறை விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன், பலமுறை கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். முதியவர் பவானி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தனை காவல்துறை மீண்டும் கைது செய்தது. முதியவர்களை குறிவைத்து அவர்களின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து மோசடி செய்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வா.. எப்ப வேண்டாலும் வா.. ! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக வேலூர், திருவண்ண்ணாமலை என சுற்றுப்பயணம் செய்து வந்த அவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.

தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கலாய்த்தார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். ”வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தலாம் என்றும் திமுகவிடம் உங்கள் பம்மாத்து வேலை நடக்காது எனவும் எதிர்த்து பேசியிருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும் போதும் சிரித்தவாறு மிகவும் கூலாக பேசக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இன்று அனல் கக்கியிருக்கிறார். வா.. எப்ப வேண்டாலும் வா.. ஓபன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். இதன் மூலம் சமரசமின்றி பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

அண்ணாமலையோட நீண்ட கால ஆசை இதுதான்..

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கடுமையாக சாடி விமர்சித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து முழு வீச்சில் அண்ணாமலை பாஜகவை தயார் படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். இதனிடையே அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இன்று செய்தி பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் ‘அண்ணாமலைக்கு ஆசை ஒரு பக்கம், பீதி ஒரு பக்கம், விளம்பரம் ஒரு பக்கம்’ என்று கடுமையாக சாடியுள்ளார். காயதிரி ரகுராம் தனது ட்விட் பதிவில், அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பாஜகவில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை: தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே. வாயில் வடை.

அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பாஜகவுக்கு தெரியும், அவரால் தமிழக எம்பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி) .

இப்போது அவர் இல்லாமல் தமிழக பாஜக மூழ்கிவிடும். தமிழக பாஜகவுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை)” என்று சாடியுள்ளார்.

5 மாதத்தில் மம்தா ஆட்சி கவிழ்ந்து விடும்.. நாள் குறித்த பாஜக..

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். மம்தா பானர்ஜிக்கும் பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசை வரும் தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார். இதற்காக எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திலும் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றி வருகிறார்.

அதே வேளையில், மாநிலத்திலும் மம்தா பானர்ஜிக்கு பாஜக கடும் சவால் அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் வென்றாலும் பாஜக கடும் சவால் கொடுத்தது. வன்முறை, ரத்த களறியுடன் நடந்த உள்ளாட்சி தேர்தல் நாடு தழுவிய அளவில் கவனம் பெறுவதாக இருந்தது. இப்படி பாஜகவுடன் முட்டல் மோதலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவது அம்மாநில அரசியலில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

மேற்கு வங்காள பாஜக நிர்வாகிகளுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள போங்கான் தொகுதி எம்.பியுமான ஷாந்தனு தாகூர் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், “மேற்கு வங்க அரசின் செயல்பாடு காலாவதியாகிவிட்டது. அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மோசடி நடக்காமல் இருந்து இருந்தால் பாஜக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதே வேளையில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு கண்காணிப்பில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுதான்.

ஐந்து மாதங்களுக்கு மேல் மம்தா பானர்ஜி ஆட்சி நீடிக்காது என நான் நம்புகிறேன் ” இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தாரிடம் மம்தா ஆட்சி 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மஜும்தார் கூறுகையில், “எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

மம்தா பானர்ஜி பின் தொடர்ந்து செல்ல முடியாது என்று அவரது கட்சி எம்.எல்.ஏக்களே திடீரென மறுக்கலாம். யாருக்கு தெரியும். இப்படி நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்றார். பாஜக தலைவரின் இந்த பேச்சு மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பை கிளப்பி விட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஷாந்தனு சென் கூறியதாவது:-

டெல்லியில் தங்கள் மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு பாஜக தலைவர்களுக்கு இடையே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் மக்கள் ஆதரவுடன் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. எங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது” என்றார்.

எஸ்.வி.சேகர்: அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்.. நடைபயணம் கூட டாக்டர் அட்வைஸா இருக்கும்.. !

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் மூத்த நிர்வாகிகளுக்கு அண்ணாமலை மரியாதை கொடுத்து, எதையும் ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசல் புரசலாக இருந்து வந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டை எஸ் வி சேகர் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

அண்மைக்காலமாக அண்ணாமலையை எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் வி சேகர் கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நானும் செய்திகளில் பார்த்தேன். அனேகமாக அவருக்கு சுகர் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. தினமும் நடக்க வேண்டும் என டாக்டர் கூறியிருக்கலாம். அதனால் தான் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். எனவே நடைப்பயணத்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.

சும்மாவே மிஸ்டு காலை வைத்துக் கொண்டு எங்கள் கட்சியில் இத்தனை பேர் உள்ளனர் என கூறுவதெல்லாம் நம்மை நாமே புகழ்ந்து கொள்வது. தற்போது நடைபெறும் ஆபரேஷன், தேர்தல் முடிவான போஸ்ட்மார்டத்தில் தெரிந்து விடும். பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார். பாஜக 300 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தும். ஆனால் இது அண்ணாமலை உதவியால் கிடையாது. இவ்வாறு எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் தொடரும் கொடூரங்கள்…! காலை நக்கவைத்த கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி என்ற இடத்தில் பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் நாட்டையே உலுக்கி, பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், ஓடும் காரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு ஒருவரை மிக கடுமையாகத் தாக்குகின்றனர். அங்கிருந்த ஒருவர் வலுக்கட்டாயமாக அவரது கால்களை நக்க வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.