மகாராஷ்டிர தேர்தல்: தொகுதி பங்கீட்டில் பாஜக கூட்டணிக்குள் மோதல்..!

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் – டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடையே மகாராஷ்டிர சட்டப்பேரவையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 160 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதேவேளையில் சிவசேனா 100 முதல் 105 இடங்களிலும் என்சிபி 60 முதல் 80 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் மகாயுதி கூட்டணியில் தொகுதிகளுக்கான மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மும்பை வந்தபோது அவரிடம் 100 தொகுதிகளுக்கு மேல் தாங்கள் போட்டியிட விரும்புவதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளையும் கடந்த காலத்தில் ஒருங்கிணைந்த சிவசேனா பெற்ற வாக்குகளையும் அமித் ஷா ஒப்பிட்டு காட்டியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், மக்களவைத் தேர்தலின் போது நடந்தது போல்,வேட்பாளர்களை அறிவிப்பதில் இம்முறை தாமதம் கூடாது என பாஜகவிடம் சிவசேனா நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டால் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிறகு பரிமாறிக் கொள்ளலாம் என்று யோசிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுமார் 2 மணி நேரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை..! உயிரிழந்த சிறுவர்களை 15 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்..!

அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் 15 கி.மீ வரை குழந்தைகளின் சடலங்களை தூக்கி சென்ற அவலம். பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் அகேறி என்ற பகுதியை அடுத்துள்ள பட்டிக்கான் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில் இந்த குழந்தைகளுக்கு மிகவும் காய்ச்சல் அடிக்கிறது என்பதால் கடந்த 4-ஆம் தேதி ஜமீல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையம் த்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கே மருத்துவர் இல்லாத காரணத்தினால், சுமார் 2 மணி நேரம் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரம் கழித்து வந்த மருத்துவர் சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் குழந்தைகளின் உடலை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முனைந்த பெற்றோர், அதற்காக ஆம்புலன்ஸை எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் ஆம்புலன்சும் இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி சேறும், சகதியுமாய் இருந்த பாதையில் சுமார் 15 கி.மீ வரை தங்கள் தோள்களில் தங்கள் குழந்தைகளின் சடலங்களை கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அனுராதா தினகரன்: “குக்கர் சின்னத்துக்கான பட்டனை அழுத்தி அழுத்தி குக்கர் சின்னமே தேயும் அளவுக்கு வாக்களிப்பீர்”

2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா நேற்று பிரச்சாரம் செய்தார். சின்னமனூர் அருகே மேல்மணலாறு, மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட மலைகிராமப் பகுதிகளில் அவர் பேசுகையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தபோதும், உங்களின் பாசம் மாறவில்லை. என் கணவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது.

ஆர்.கே.நகரில் பெரிய கட்சிகளை எதிர்த்து என் கணவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னம்தான் குக்கர். அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குக்கர் சின்னத்துக்கான பட்டனை வாக்காளர்கள் அழுத்தி அழுத்தியே தேயும் நிலை ஏற்பட்டது. அதே போல் தேனியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் போதெல்லாம் அமமுக சின்னம் ஞாபகத்துக்கு வர வேண்டும். அவர் ஏற்கெனவே இங்கு எம்.பி.யாக இருந்து, பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். கோயில் மண்டபம், சமுதாயக்கூடம் என்று பல கல்வெட்டுகளிலும் அவரது பெயர் உள்ளது. தற்போது வெற்றி பெற்றால் தேனி தொகுதிக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வருவார். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இத்தொகுதியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் என அனுராதா தினகரன் பேசினார்.

ஏன் இந்த பாகுபாடு: பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட உடனே சின்னம்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முந்தய தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள், இடங்களைப் பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக, சின்னங்களை இழக்காத கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்து, தேசிய அந்தஸ்துகளை இழக்கும் கட்சிகள் பட்டியலை வெளியிட்டது.

இதில் புதுச்சேரியில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது. இதனால் பாமக தமது மாம்பழ சின்னத்தையும் இழந்து இனி தேர்தல்களில் மாம்பழம் என்ற பொதுச் சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலை உருவானது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா மிக மிக சொற்பமான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தன. இதனால் இந்த கட்சிகளுக்கும் குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது. அதுபோல நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் மதிமுகவிற்கும் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் உரிய காலத்தில் விண்ணப்பித்து தங்களுக்கான சின்னங்களைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தன. பாமகவும் மாம்பழம் சின்னத்துக்கு விண்ணப்பித்திருந்தது. அமமுக குக்கர் சின்னத்துக்கும் ஜிகே வாசன் கட்சி சைக்கிள் சின்னத்துக்கும் மதிமுக பம்பரம் சின்னத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கும் விண்ணப்பித்தன.

ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால் இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை நாடி தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

பாஜக கூட்டணியில் சேராத ஒரே காரணத்துக்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் பயன்படுத்திய சின்னங்களை தங்களுக்கு ஒதுக்க மறுப்பது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என மதிமுக, நாம் தமிழர் கட்சித் தலைவர்களான துரை வைகோ, சீமான் தெரிவிக்கின்றனர்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு..!

சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.

சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான்…

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் முன்பு அறிவித்த நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் செயல், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி முறிவு குறித்த அறிவிப்புடன்’நன்றி மீண்டும் வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேக்கையும் சமூக வலைதளங்களில் அதிமுக பதிவிட்டது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அதிமுகவிற்குத்தான் நஷ்டம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது.

சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான். பிரிந்து இருந்த அதிமுக தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் பாஜக அமர்த்தியது. எடப்பாடி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார். அதிமுகவை நாங்கள் ஒட்டி வைக்கவில்லை என்றால் சிதறி இருக்கும். ஓபிஎஸ் ஒன்று சொல்ல இவர்களும் ஒன்று சொல்ல மாறி மாறி பிரச்சனை உருவானது. அப்போது ஓபிஎஸ்ஸை இபிஎஸ் முன்பாக உட்கார வைத்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தப்பட்டது.

இதற்கெல்லாம் சாட்சியாக கூடவே நான் இருந்தேன். அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ரொம்ப சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டணி முடிந்தது என்றால் அதிமுகவும் இன்றுடன் முடிந்தது. வருகிற 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.