ரோஜா கண்காட்சியில் சுற்றுலா பயணி புகைப்படம் மற்றும் செல்பி மகிழ்ச்சி

நாளையுடன் முடிவடையும் ஊட்டி ரோஜாப் கண்காட்சியில் சுற்றுலா பயணி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜாப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரோஜாப் பூங்காவில் கண்காட்சியும் நடைபெறும்.

அதன்படி, தோட்டக்கலைத் துறை சார்பில் 20-வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜாப் பூங்காவில் நேற்று தொடங்கியது. அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 80 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு இரு டால்பின்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பென்குயின், சிப்பி, நத்தை, மீன், கடல் குதிரை, நீலத்திமிங்கலம், ஸ்நைல், நட்சத்திர மீன், கடல் கன்னி, உள்பட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை செய்து வைத்துள்ளனர். மேலும் 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டனர்.

இன்று 2-வது நாளாக கண்காட்சி நடந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா பூக்களை பார்த்து ரசித்தனர். மேலும் ரோஜாக்களால் செய்யப்பட்ட மலர் அலங்காரங்கள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை..!

பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்ற நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, உள்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி. இந்நிலையில், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து பல அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த ரஷியா பேகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில் இப்பொழுது முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ரஷியா பேகம் தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்த காலங்களில் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் ரஷியா பேகம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீலகிரி மாவட்ட தலைநகரான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரஷியா பேகம் வசித்து வரும் வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 11 மணி வரை என 6 மணி நேரம் நடந்தது. சோதனையில் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட்சத்திற்கும் மேலாக சொத்து சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியை குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

கோத்தகிரி 13-வது காய்கறி கண்காட்சியை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆதலால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி,இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், தேனி, கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன இருவாச்சி பறவை, பாண்டா கரடி, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர். இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி கொண்டுள்ளனர்.

சிம்லாவுக்கு அடுத்தபடியாக அதிநவீன உயிர் சிகிச்சை மருத்துவமனையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசங்களில் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால் அவசர சிகிச்சைகள் பெற நீலகிரி வாழ் மக்கள் சமவெளி பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கூறியிருந்தார்.அதன்படி உதகை அருகே HPF பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் 700 படுக்கை வசதியுடன், 415 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று கோயம்புத்தூர் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கோயம்புத்தூர் இருந்து சாலை மார்க்கமாக உதகமண்டலம் சென்றடைந்தார்.உதகமண்டலத்தில் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசங்களில் அதிநவீன உயிர் சிகிச்சை பெறும் வகையில், அதிநவீன மருத்துவ கருவிகளுடன் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

லட்சுமி பவ்யா தண்ணீரு: நவீன கேமராக்களுடன் Fast tag முறை கொண்டு வரப்படும்..!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் இ-பாஸை கண்காணித்து, பசுமை வரியை தானாக வசூலிக்க விரைவில் நவீன கேமராக்களுடன் Fast tag முறை கொண்டு வரப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருவதால் இ-பாஸ் கண்காணிப்பு மற்றும் பசுமை வரி வசூலிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு மாவட்ட எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனை அடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், இ-பாஸ் நடைமுறையை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது என லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கிட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லாத கடனாக ரூ.15 ஆயிரத்தை கூட்டுறவு வங்கி மூலம் வழங்க வேண்டும்.

அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை கொடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டப்படுமா..!? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அருகே வாழவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை ஒட்டி பொன்னானி ஆறு ஓடுகிறது. ஆனால் ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் இல்லை.இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்து வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைகின்றன.

இதன்காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஆறு அகலப்படுத்தப்பட்டது. ஆனால் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தவிர்க்க தடுப்புச்சுவர் கட்டுவது உள்ளிட்ட முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வாழவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் பொன்னானி ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்டி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி – குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்..!

கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் நரேந்திர மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்.எல்.ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி நிறுத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க கோரி மக்களவை செயலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மக்களவை செயலகம், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது.

இதையடுத்து, நேற்றைய தினமே மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்தார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார், 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.’ என்று மாற்றி இருந்தார். மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததை தொடர்ந்து, ஏற்கெனவே இருந்ததுபோல, ‘இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்’ என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை நேற்று வழங்கியது. இதனை இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர். இதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூரில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

கோடநாடு வழக்கில் கைகோர்த்த ஓபிஎஸ், தினகரன்..

கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த காவலர் கொலை, மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தொடர்ந்து கோடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியிலேயே விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை முழுவீச்சில் நடைபெறவில்லை.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

திமுக அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஆதரவு அளித்து, ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அமமுகவினரும் கலந்து கொள்வார்கள் என அறிவித்தார்.

\

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் கை கோர்த்துள்ள நிலையில், இரு தரப்பும் ஒன்றாகப் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரு தரப்பு நிர்வாகிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

எடப்பாடி ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்கள் அழிப்பு.. டிடிவி தினகரன் பகீர் தகவல் இந்நிலையில், அதிமுகவின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனக் கோரி அதிமுகவினர் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பு நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக கொடி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என நீலகிரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு பலம் பெருகி வரும் சூழலில், அவரது தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இருவரும் கை கோர்த்துள்ள சூழலில் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என ஈபிஸ் தரப்பு முறையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.