அமலாக்க துறை மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்..!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன மதுபான கொள்முதல், பார் உரிமம், போக்குவரத்து போன்றவற்றுக்கான டெண்டர் உள்ளிட்டவை மூலமாக ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறை நடத்திய இந்த சோதனை அரசியலமைப்பு சட்ட கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்டவிரோதமானது என்றும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த மார்ச் 20 அன்று விசாரி்த்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25-க்கு தள்ளிவைத்திருந்தனர். அதுவரை அமலாக்கத் துறை எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் இருவரும் விலகுவதாக அறிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.

தலைமை நீதிபதி: ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்..!

ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், மகளிர் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போன்ற அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், எப்போதும் இந்தப்பகுதி பரபரப்பாக காணப்படும்.

இந்த சூழலில், நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞர் நடந்து வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அரிவாளை எடுத்து, அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவம் அறிந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் இருந்த வழக்கறிஞர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி புரிந்து வந்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் என்பவர் தான் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியவர் என்பது தெரியவந்தது. மேலும் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்த குமார் மனைவி சத்யாவும் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், கண்ணனுக்கும், சத்யாவுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால், ஆத்திரமடைந்த ஆனந்த் குமார், இந்த கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தை கண்டித்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.

இதனிடையே, ஆனந்த் குமார் ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைய, இந்த கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி சத்யாவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் இதுதொடர்பாக முறையீடு செய்ய சென்னை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். உள்துறை செயலாளர், டிஜிபி, வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ராமதாஸ் கண்டனம்: மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது..!

செந்தில் பாலாஜி தியாகி என்றால் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதே கொடூர மனநிலை.

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை. அதனால் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தியாகமும் இல்லை.

செந்தில் பாலாஜியின் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நன்றாக அறிவார். 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாகத் தான் தமிழகக் காவல்துறை வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 2016 தேர்தலில் குளித்தலைத் தொகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், மேலும் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள் ‘’ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல” என்று பாடல் பாடியதெல்லாம் வரலாறு.

அந்தக் குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் தான் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகிறது. அந்த வழக்கில் கையூட்டாக வாங்கப்பட்ட பணம் ரொக்கமாக செந்தில் பாலாஜி கணக்கில் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் தான் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்திருக்கிறார். இதில் என்ன தியாகம் இருக்கிறது.

உண்மையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்பவராக இருந்தால் மோசடி வழக்கில் தம்மிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் கொடுத்து வழக்கை வலுப்படுத்தியிருக்க வேண்டும். மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை திமுகவில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார்.

திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கரையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது. அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கூல் லிப்’-யை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது..!?

நாடு முழுவதும் கூல் லிப் என்பபடும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,  தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் என்பபடும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் நீதிபதி பேசுகையில், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 -ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

SRM கல்லூரி மாணவி மற்றும் மாணவர்களை சொந்த பிணையில் விடுதலை..!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருளை கடத்த திட்டமிட்ட கும்பல் பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற வாகனத்தை பிடித்து ஆய்வு செய்த போது ஒரு கும்பல் 10 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளைக் கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.

இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக மேலும் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பணமும் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகவே நேற்று செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு படிப்புக்களுடன் SRM பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இலங்கை, மலேசியா, நைஜீரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள SRM பல்கலைக்கழகம் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆகையால் அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு சோதனையில் காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்திய 21 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 21 மாணவர்கள் மற்றும் ரவுடியிடம் இருந்து மொத்தமாக 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போதைப்பொருள் விற்றவர்கள் என கைது செய்யப்பட்ட 21 பேரில் முன்னதாகவே ஏழு மாணவர்கள் காவல் நிலைய பிணையில் வெளிவிடப்பட்டுள்ளனர். தொடர்ந்து 14 மாணவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றம் த்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோது கல்லூரி மாணவி ஒருவர் உட்பட 11 மாணவர்களை நீதிபதி கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சொந்த பிணையில் விடுதலை செய்தார்.