பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க காத்திருந்த நிர்வாகியை அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கேபி ராமலிங்கம் மோசமாக நடத்திய வீடியோ வெளியாகி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் சால்வை அணிவிக்க வந்த நிர்வாகிகளை அக்கட்சியின் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் அடாவடியாக தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் எம்பி-யான கேபி ராமலிங்கம் திமுக முன்னாள் எம்பி-யான அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் 2020-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாஜகவின் மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தற்போது மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக கே.பி. ராமலிங்கம் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் இல்ல திருமண விழா நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை வந்திருந்தார். அந்த நேரத்தில் கே.பி. ராமலிங்கமும் அங்கிருந்தார். மணமக்களை வாழ்த்துவதற்காக அண்ணாமலை மேடைக்கு சென்ற போது, கட்சியினர் யாரும் மேடையில் நிற்க கூடாது என மிரட்டுவது போல் குரல் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் மணமக்கள் அருகில் நின்றிருந்த பாஜக முன்னாள் மாவட்ட பார்வையாளர் முருகேசன், அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க காத்திருந்தார்.
அப்போது விரைவாக முருகேசனிடம் சென்ற கேபி ராமலிங்கம், சால்வையை பிடுங்கியதோடு கையை பிடித்து இழுத்து சென்றார். இதனால் பாஜக நிர்வாகி முருகேசன் நிலை தடுமாறி கீழே விழ சென்றார். இந்நிலையில் கேபி ராமலிங்கம் மாநில தலைவர் அண்ணாமலை முன்பாக அடாவடியாக நிர்வாகியை நடத்தியது தொடர்பான வீடியோவும் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.