ரூ.50 கோடி நில மோசடி: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் கைது..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பேருந்து அதிபரான பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி என்பிஎஸ் நகர் என்ற பெயரில் நகர்களை அமைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் நாமக்கல் அடுத்த சிலுவம் பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் என்பவருக்கு சொந்தமான 5.62 ஏக்கர் நிலத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து வாங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

அதாவது, இந்த நிலத்தில் 7,200 சதுர அடியை தனது கார் ஓட்டுநருக்கு பொன்னுசாமி விற்பனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, எட்டிக்கண் தனது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து கிரையம் செய்த பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதன் பெயரில் காவல்துறை பொன்னுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அவரை மாவட்ட பொருளாதார பிரிவு காவல்துறை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையை கண்ட பொன்னுசாமி கைலி அணிந்து இருப்பதால் வேறு உடை மாற்றி கொண்டு வருவதாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று பின்புறம் வழியாக தப்பி சென்றுள்ளார். நீண்ட நேரமாக காத்திருந்த காவல் துறை ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இந்நிலையில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த பொன்னுசாமி குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர்.

நாமக்கல் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ .80 லட்சம் பறிமுதல்..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள லாரி உரிமையாளர் செல்லப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இவரது வீட்டிலிருந்து ரூ.80 லட்சம் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரணையில், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.

நாமக்கல் வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாய் பணம்..!

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் மோகனூர் ரோடு காந்தி நகரை சேர்ந்த பேருந்து மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் சந்திரசேகரன்.

மேலும், சந்திரசேகரன் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செயலராகவும் உள்ளார். தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று மதியம் இவரது வீட்டுக்கு சோதனை நடத்தினர். இரவு 10 மணி வரை நடந்த சோதனையில் வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ. 4.8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்லில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பெங்களூரு செல்லும் 42 ஆலய மணிகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 2024ல் நடைபெறும் நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் பக்தர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற யூனிட்டில் 48 மணிகள் தயாரிக்க கடந்த மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர். மொத்தம், 1,200 கிலோ எடையுள்ள, 42 மணிகள் கட்டி முடிக்கப்பட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின், பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 6 மணிகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவக்கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடீர் சோதனை..!

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் மரு.க.ச.அருண் மற்றும் நாமக்கல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீன் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் போது உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் , தரமான மூலப்பொருட்களை கொண்டு தரமான உணவு தயாரித்து வழங்க வேண்டும், பொருள்கள் வைக்கும் இருப்பு அறை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முதலில் வந்த உணவு பொருட்களை முதலில் பயன்படுத்த வேண்டும் எனவும், விடுதியில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும், உணவுப் பொருளை கையாளும் பணியாளர்கள் ஏப்ரான் தொப்பி கையுறை, ஆகியவை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருளை கையாளும் பணியாளர்கள் எந்தவிதமான தொற்று நோய்க்கும் ஆளாகவில்லை என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் பெற்றிருக்க வேண்டும் என அங்குள்ள பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

“நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்” திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி கால்நடை பராமரிப்பு துறை சார்பாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எம்.நடராஜன் தலைமையில், பசுமை தமிழகம் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை, சீமை அகத்தி,கொடுக்கா புளி, புங்கன், பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளான வகுரம்பட்டி, அணியாபுரம், வளையபட்டி, பாலப்பட்டி, அலங்காநத்தம், செவிந்திப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தக வளாகங்களிலும் மற்றும் மேய்ச்சல் தரைநிலங்களிலும் நடவுசெய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் நித்யா, பிரபாவதி, மாணிக்கவாசகம், ராஜாமணி, தங்கராஜ் மாதேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ கல்லூரி தனியார் நிறுவன தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 150 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறையை மூட மனு..!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு ஆட்சியரிடம் புகார் புனு கொடுத்தனர். அந்த மனுவில், வண்ணாம்பாறை ஆஞ்சநேயர் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே தனியார் நூற்பாலைக்கு சொந்தமான சாயப்பட்டறை இயங்கி வருகிறது.

அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த கழிவுநீர் குடிநீரிலும் கலக்கிறது. அதன் காரணமாக குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தோம். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விட்டு, இனி சாயப்பட்டறை இயங்காது என தெரிவித்து சென்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து சாயப்பட்டறை இயங்கி வருகிறது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாய தொழிற்சாலையின் உரிமையாளருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அந்த சாயத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

76 -வது சுதந்திர தின விழா முன்னிட்டு நாமக்கல்லில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை..!

நாட்டின் 76 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

ஆட்சியர் உமா தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளார். நேற்று காலையில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற காவல்துறை துப்பாக்கி ஏந்தியவாறு கம்பீரமாக நடந்து வந்தனர்.

மகா மாரியம்மன் கோவில் 1.008 குத்து விளக்கு பூஜை…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை யாக வேள்வி பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மன் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 1008 குத்து விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் நன்செய் இடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.