அண்ணாமலை: 1000 வருஷத்தை விடுங்க.. 9 ஆண்டுகளை பாருங்க! எல்லாம் தமிழர்களுக்காகதான்..

ஜூலை 29-ம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார். இன்று இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், “ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு கிடைக்காத பெருமையை இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார்” என பேசியுள்ளார்.

சமீப காலங்களாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ் திருக்குறள் அல்லது பொன்மொழிகளை மேற்கோள்காட்டி பேசி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழின் பெருமை குறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதேபோல தமிழ் மொழியில் சில வாக்கியங்களை பேசியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேசியது விவேகானந்தரின் உரையுடன் ஒப்பிடப்பட்டது.

அதாவது, “அன்புமிக்க, சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ்மொழி, அதன் பாரம்பரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாரதி மண்ணின் மக்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். சமஸ்கிருதத்தை விட, தமிழுக்கு தொன்மை உள்ளது. அதை அனைவரும் கற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக திமுக உள்ளிட்ட தென்னிந்திய கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை வைத்து வந்த நிலையில் பிரதமரின் தமிழ் உரை இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்தது.

இதே ஆண்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, குறிஞ்சி மலர் குறித்து தமிழில் பேசியிருந்தார். இதற்கெல்லாம் டாப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என தமிழில் பேசியிருந்தார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பேசுபொருளானது.

இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின உரை, அக்டோபர் மாதம் 10-ம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா தொடங்கி சமீபத்தில் பப்புவா நியூ கினி நாட்டின் தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டது வரை தமிழ் குறித்த அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தொடக்க விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு கிடைக்காத பெருமையை இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார்” என பேசியுள்ளார்.

ஆனால் இதற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றன. அதேபோல கடந்த காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கி நிதியையும் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி நரேந்திர தலைமையிலான மத்திய அரசாங்கம் ரூ.11.86 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.198.8 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.