சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி: வங்கி மேலாளருக்கு ரூ.25,000 அபராதம்..!

கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் கடனை செலுத்திய பின்னரும் அடமான பத்திரங்களை கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் ரூ.25,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருக்கிறது. தென்காசியை சேர்ந்த மாரித்துரை என்பவர் ஆவணங்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்று கடனை கொஞ்சம் கொஞ்சமாக மாரித்துரை திரும்ப செலுத்தி இருக்கிறார்.

ஆனால் முழு கடனை அடைத்த பின்னரும் கூட, அடமானமாக வைக்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தர வங்கி மறுத்திருக்கிறது. காரணம் கேட்டால், கூடுதலாக ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை நேற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார்.

விசாரணையின் முடிவில் கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மட்டுமல்லாது, வரும் 17-ஆம் தேதிக்குள் அடமானத்திற்கு பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசு ஓராண்டுக்கு செலவிடும் தொகையை விட இது அதிகமாக கடந்த 2019-20 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, ரூ.8,495 கோடியை பொதுத்துறை வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து அபராதமாக பிடித்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, மினிமம் பேலன்ஸ் இல்லை, வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டீர்கள், எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வங்கிகள் பணம் பிடுங்குவாடு வழக்கம். ஆனால், வங்கி தலைமை மேலாளருக்கே நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறுவது வழங்கமான ஒன்றாகும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் , உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ம், சிவகிரி வெள்ளானை கோட்டை மூக்கையா தெருவை சேர்ந்த முத்துராஜ் மனைவி செல்வராணி என்பவருக்கு 12 வயதில் மகன் இருப்பதாகவும், சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனது கணவர் முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அச்சுறுத்தல் விடுவதாகவும் இதுகுறித்து, செல்வராணி பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறி தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க தனது மகனுடன் வந்துள்ளார்.

அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்த காவல்துறை அவரை தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவில் கோஷ்டிப் பூசல்! அறிவாலயம் வரை வந்த பஞ்சாயத்து!

தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது கட்சித் தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார்.

ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில் இப்போது இரு வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிரணி சார்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனை ஓபன் மைக்கிலேயே கேள்விகணைகளால் துளைத்தெடுத்து சண்டையிட்டார் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி.

அவர் தனது ஆதங்கத்தை கொட்டியதை கூட திமுக தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ஆனால் பொதுவெளியில் மேடை போட்டு ஓபன் மைக்கிலேயே, ”மணிப்பூர் இருக்கட்டும், இங்க பெண்களுக்கு என்ன பாதுகாப்பு” என உட்கட்சி பிரச்சனையுடன் பெண்கள் பாதுகாப்பை முடிச்சு போட்டு பேசியது தான் கட்சி தலைமையை கோபம் கொள்ளச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் பின்னணியிலும், தமிழ்ச்செல்வி இவ்வாறு பேசியதன் பின்னணியிலும் ராஜா எம்.எல்.ஏ. இருப்பதாக சிவபத்மநாதன் தரப்பு சந்தேக்கிறது.

இதனிடையே இது குறித்து அனைத்து விவரங்களும் அன்பகம் கலைக்கு சென்றுவிட்டதாகவும் அவர் உரிய விசாரணை நடத்தி விரைவில் கோஷ்டிப்பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ரூ.100 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரையில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்றது, அப்போது புளியரை சோதனை சாவடியில் அந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, லாரியில் அதிக பாரம் ஏற்றி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தது மட்டுமின்றி லாரியை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த லாரி ஓட்டுநர், காவல் உதவி ஆய்வாளர் ஜேம்சிடம் 100 ரூபாய் கொடுத்தார்.

இதை வாங்கிய அவர் இந்த தொகை போதாது கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்க, இதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு, அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறையினர் மகாராஜன், காளிராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.